
சனிக்கிழமையன்று வெளியிடப்பட்ட, 55வது உலக சமூகத்தொடர்பு நாள் செய்தியை மையப்படுத்தி, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் டுவிட்டர் பக்கத்தில் மூன்று செய்திகள் பதிவாகியுள்ளன.
“வந்து பாரும்” (யோவா.1:46) என்ற அழைப்பிற்கு, இவ்வாண்டு உலக சமூகத்தொடர்பு நாள் செய்தியை அர்ப்பணிக்க விரும்புகிறேன். உண்மையைச் சொல்லும்பொருட்டு, நாம், சென்று பார்க்கவேண்டும், மக்களுக்குச் செவிமடுக்கவேண்டும் மற்றும், எதார்த்தத்தை எதிர்கொள்ளவேண்டும் என்ற சொற்கள், திருத்தந்தையின் முதல் டுவிட்டர் செய்தியில் இடம்பெற்றிருந்தன.
இறைவார்த்தை #WordofGod என்ற ஹாஷ்டாக்குடன் பதிவாகியுள்ள திருத்தந்தையின் இரண்டாவது டுவிட்டர் செய்தியில், “இறைவார்த்தையை ஏற்போம். கண்ணால் காண இயலாத கடவுளைக் காண, கேட்க மற்றும் அவரைத் தொட்டு உணர தம்மை அவர் அனுமதிக்கிறார் (காண்க. 1யோவா.1:1-3). வார்த்தை, பார்க்கக்கூடியதாய், நம்மை, அனுபவத்தில், உரையாடலில் வைத்தால் மட்டுமே, அது சாரமுள்ளதாய் இருக்கும். இவ்வாறு “வந்து பாரும்” என்ற அழைப்பு இருந்தது, மற்றும், அது தொடர்ந்து அவ்வாறு இருப்பது அவசியம்” என்ற சொற்கள் வெளியாயின.
இறைவார்த்தை #WordofGod என்ற ஹாஷ்டாக்குடன் பதிவாகியுள்ள திருத்தந்தையின் மூன்றாவது டுவிட்டர் செய்தியில், இறைவார்த்தை, நம்மைத் தேற்றுகிறது, மற்றும் ஊக்கப்படுத்துகின்றது. அதேநேரம், அது நம்மை மனமாற்றத்திற்கு அழைப்பு விடுக்கின்றது, சவால் விடுகின்றது, மற்றும், தன்னலத் தளையிலிருந்து நம்மை விடுவிக்கின்றது. ஏனெனில் கடவுளின் வார்த்தை, நம் வாழ்வை மாற்றவல்ல சக்தியைக் கொண்டிருக்கின்றது, மற்றும், இருளினின்று ஒளிக்கு நம்மை இட்டுச்செல்கின்றது என்ற வார்த்தைகள் இடம்பெற்றிருந்தன.
மேலும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் 55வது உலக சமூகத்தொடர்பு நாள் செய்தியை இணையதளத்தில் வாசிப்பதற்கு உதவியாக, டுவிட்டர் செய்திகளோடு முகவரிகளும் கொடுக்கப்பட்டுள்ளன.
இன்னும், ஆண்டின் பொதுக்காலம் மூன்றாம் ஞாயிறன்று சிறப்பிக்கப்படும், இறைவார்த்தை ஞாயிறாகிய, சனவரி 24, இஞ்ஞாயிறு, உரோம் நேரம் காலை பத்து மணிக்கு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், வத்திக்கானின் புனித பேதுரு பெருங்கோவிலில் திருப்பலி நிறைவேற்றுவார்.
Source: New feed