
கடவுள் அருளியுள்ள ஆசிர்களுக்கு எப்போதும் நன்றியுடன் இருங்கள், மனமாற்றம் தேவையில்லை என ஒருபோதும் நினைக்காதீர்கள், மற்றும், அமைதி நிலவ எல்லா வழிகளிலும் உதவுங்கள் என்று, திருப்பீடத் தலைமையக அதிகாரிகளிடம் இவ்வியாழனன்று கூறினார், திருத்தந்தை பிரான்சிஸ்.
டிசம்பர் 22, இவ்வியாழன் காலையில் வத்திக்கானின் பெனடிக்டன் அறையில் திருப்பீட தலைமையகத்தின் உறுப்பினர்களோடு கிறிஸ்மஸ் நல்வாழ்த்துக்களைப் பகிர்ந்துகொண்டு உரையாற்றிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஏழு முக்கிய தலைப்புக்களில் தன் கருத்துக்களை எடுத்துரைத்தார்.
ஆண்டவர் வழங்கும் அருளை ஒருபோதும் சாதாரணமாக எடுத்துக்கொள்ளக்கூடாது, மற்றும், மனமாற்றத்தின் பாதையில் எப்போதும் நடக்கவேண்டும் என்று கூறியத் திருத்தந்தை, எக்காலத்தையும்விட இக்காலக்கட்டத்தில் அமைதிக்காக அதிக அளவில் ஆவல்கொண்டுள்ள நாம், அமைதியை உருவாக்குபவர்களாக இருக்கவேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.
காரியங்களை எதார்த்தத்தோடு பார்ப்பதற்கு, ஏழ்மை, மற்றும் எளிமையில் இடம்பெற்றுள்ள இயேசுவின் பிறப்பு நமக்கு ஒரு பாடமாக உள்ளது என்றும், புனிதத்துவப் பாதைக்குத் தடையாக இருக்கின்ற அனைத்தையும் புறக்கணித்து, வாழ்க்கையில் இன்றியமையாத காரியங்களில் அதனை அமைக்க நாம் ஒவ்வொருவரும் அழைக்கப்பட்டுள்ளோம் என்றும் உரைத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.
Source: New feed