உலக சுற்றுச்சூழல் நாளை முன்னிட்டு, ஜூன் 05, இவ்வெள்ளி மாலையில், Scholas Occurrentes திருத்தந்தை அமைப்பு, இணையதளம் வழியாக நடத்திய பன்னாட்டு கூட்டத்தில் கலந்துகொண்ட இளைஞர்கள், பெற்றோர் மற்றும், ஆசிரியர்களுக்கு, காணொளிச் செய்தி ஒன்றை அனுப்பினார், திருத்தந்தை பிரான்சிஸ்.
Scholas Occurrentes அமைப்பினரை உந்தித்தள்ளிய ஒரு கேள்விக்கு, பல ஆண்டுகளாக ஆய்வுசெய்ததன் பயனாக, இன்று, அவர்களை, ஒரு குழுமமாக, அதாவது, நண்பர்களின் குழுமமாக, சகோதரர், சகோதரிகளின் குழுமமாக அழைக்க முடிந்ததில் மிகுந்த மகிழ்வு கொள்கிறேன் என்று, திருத்தந்தை அந்த காணொளியில் கூறினார்.
Scholas Occurrentes அமைப்பு, அர்ஜென்டீனா நாட்டில், ஒரு நெருக்கடியின் மத்தியில், இரு ஆசிரியர்களைக்கொண்டு, எவ்வித பெரிய திட்டமும் இன்றி தொடங்கப்பட்டது என்றும், அந்த நெருக்கடி காலத்தில் வன்முறை இடம்பெற்றபோதிலும், கல்வி, மக்களை ஒன்றிணைத்தது, மற்றும், அது, வாழ்வுக்கு அர்த்தத்தையும், அழகையும் கொணர்ந்தது என்றும், திருத்தந்தை கூறியுள்ளார்
ஸ்கோலாஸ் அமைப்பின் சிந்தனை மற்றும், சந்திப்பின் பயணம், மூன்று உருவகங்களை நினைவுக்குக் கொணர்கிறது என்றுரைத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், “பாதை” (La Strada-Federico Fellini,1954), “புனித மத்தேயுவின் அழைப்பு” (The Calling of Saint Matthew – Caravaggio), “அறிவிலி”( The Idiot -Dostoevsky) ஆகிய மூன்று கதைகள், நெருக்கடி காலத்தில், மனிதரின் பொறுப்புணர்வைச் சுட்டிக்காட்டுகின்றன என்று கூறினார்.
நெருக்கடியும் அழகும்
ஒரு பிரச்சனை, சிறியதாகவோ அல்லது, தனிப்பட்ட விவகாரமாகவோ தெரிந்தாலும்கூட, அதற்குத் தீர்வு காண்பதற்கு மக்கள் தனியாகச் செல்லக்கூடாது என்றும், பிரச்சனையில், அச்சம் நம்மை ஆட்கொள்கின்றது என்றும், அந்நேரத்தில் நம் அழைப்பு மறைக்கப்படுகின்றது, வாழ்வின் அழகு இழக்கப்படுகின்றது மற்றும், நம்மையே நாம் வெறுமையாக்கிக் கொள்கிறோம் என்றும், திருத்தந்தை கூறியுள்ளார்.
இருந்தபோதிலும், அழகே உலகைப் பாதுகாக்கிறது என்ற Dostoyevsky அவர்களின் கூற்றை குறிப்பிட்ட திருத்தந்தை, ஸ்கோலாஸ் அமைப்பும், பிரச்சனையின் மத்தியிலே உருவானது என்றும், இது இளைஞர்களின் இதயங்களுக்குச் செவிசாய்ப்பதில் வளர்ந்தது என்றும் கூறினார்.
கல்வி
கல்வி என்பது, வெறுமனே விடயங்கள் பற்றி அறிவது மட்டுமல்ல, கல்வி கற்பிப்பது என்பது, உற்றுக்கேட்க, கலாச்சாரத்தை உருவாக்க, மற்றும், வாழ்வைக் கொண்டாட உதவுவதாகும் என்று விவரித்த திருத்தந்தை, இந்த மூன்றையும் கல்வியால் ஆற்ற முடியவில்லையெனில், அது கல்வியாக இருக்கமுடியாது என்றும் கூறினார்.
எண்ணத்தின் மொழியை, உணர்வுகள் மற்றும், செயல்களோடு ஒத்திணங்கிச்செல்ல கல்வி உதவவேண்டும் என்றும், அது, அறிவின், இதயத்தின் மற்றும், கரங்களின் மொழியைப் பேசவேண்டும் என்றும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஸ்கோலாஸ் அமைப்பிடம் கூறினார்
Source: New feed