#வாசக மறையுரை (மே 14)

பாஸ்கா காலம் ஆறாம் வாரம் வெள்ளிக்கிழமை
I திருத்தூதர் பணிகள் 18: 9-18
II யோவான் 16: 20-23a
“அஞ்சாதே!”
நான் எதற்கு அஞ்ச வேண்டும்?
சீனாவில் கடவுளுடைய வார்த்தையை அறிவித்து வந்தவர் மறைப்பணியாளரான ஜாக் பென்சன் (Jack Benson). ஒருநாள் இவர் ஓர் ஊரில் நற்செய்தி அறிவித்துவிட்டுத் திரும்பி வந்துகொண்டிருந்தார். அது இரவு நேரம். அப்பொழுது ஒரு கொள்ளைக்கூட்டம் இவரைச் சூழ்ந்துகொண்டு, இவரிடம் இருந்தவற்றையெல்லாம் பறித்தது.
பின்னர் அந்தக் கொள்ளைக்கூட்டத்தின் தலைவன் தன்னிடமிருந்த துப்பாக்கியை எடுத்து, இவரது நெற்றிப் பொட்டில் வைத்து, “இப்பொழுது நான் உன்னைச் சுடப் போகிறேன்” என்றான். இதற்கு இவர் எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தார். இதைப்பார்த்து அதிர்ந்துபோன கொள்ளைக்கூட்டத் தலைவன், “நான் உன்னைச் சுட்டுக்கொள்ளப் போகிறேன் என்று தெரிந்தும், நீ அஞ்சாமல் இருக்கின்றாயே! அது எப்படி?” என்றான். “நீ என்னைக் கொன்றுபோட்டால், நான் என் ஆண்டவர் இயேசுவைச் சரணடைவேன். பிறகு எதற்கு நான் அஞ்ச வேண்டும்?” என்றார். இதைக் கேட்டு மிரண்டுபோன கொள்ளைக்கூட்டத் தலைவன் இவரை எதுவும் செய்யாமல் விட்டுவிட்டான்.
ஆம், இந்த நிகழ்வில் வரும் ஜாக் பென்சன் கொள்ளைக்கூட்டத் தலைவனுக்கு அஞ்சாமல், இறந்தால் ஆண்டவர் இயேசுவைச் சரணடைவேன் என்று துணிவோடு இருந்தார். இன்றைய முதல்வாசகத்தில், ஆண்டவர் பவுலிடம், “அஞ்சாதே, பேசிக் கொண்டேயிரு; நிறுத்தாதே” என்கிறார். ஆண்டவர் பவுலிடம் சொல்லும் இந்த வார்த்தைகளின் பொருள் என்ன என்று சிந்தித்துப் பார்ப்போம்.
திருவிவிலியப் பின்னணி:
ஒரு காலத்தில் திருஅவையைத் துன்புறுத்திய பவுல், தமஸ்கு நகர் நோக்கிச் செல்லும் வழியில் ஆண்டவர் இயேசுவால் தடுத்தாட்கொள்ளப்பட்டு, பிற இனத்தாருக்கு நற்செய்தி அறிவிக்கத் தொடங்கினார். இவ்வாறு பவுல் கடவுளின் வார்த்தையை மக்களுக்கு, அதுவும் பிற இனத்து மக்களுக்கு அறிவிக்கும்பொழுது சந்தித்த துன்பங்கள் ஏராளம் (2 கொரி 11: 23-28). இத்தகைய துன்பங்கள், பிரச்சனைகளுக்கு நடுவில் கடவுளின் வார்த்தையை அறிவிக்கக் பவுல் கொரிந்து நகருக்குச் செல்லும்போதுதான், ஆண்டவர் அவருக்குக் காட்சியில் தோன்றி, “அஞ்சாதே! பேசிக்கொண்டேயிரு; நிறுத்தாதே!” என்கிறார்.
ஆண்டவர் பவுலிடம் இவ்வாறு கூறியதால் பவுலுக்கு இதன்பிறகு துன்பமே வராது என்றில்லை. மாறாக, ஆண்டவர் அவரோடு இருப்பதால் அவர் எதற்கும் யாருக்கும் அஞ்சிடத் தேவையில்லை என்பதுதான் நாம் புரிந்துகொள்ள வேண்டிய செய்தியாக இருக்கின்றது. பவுலிடம் அஞ்சாதே என்ற கடவுள், நம்மிடமும் அதே வார்த்தைகளைச் சொல்கின்றார். எனவே, நாம் அஞ்சாது ஆண்டவருடைய பணியைச் செய்யத் தயாரா? சிந்திப்போம்.
சிந்தனைக்கு:
 அவர்கள் முன் அஞ்சாதே (யோசு 11: 6)
 உன்னை விடுவிக்க நான் உன்னோடு இருக்கிறேன் (எரே 1: 19)
 நாம் ஆண்டவரில் நம்பிக்கை வைத்து, அவரது பணியை யாருக்கும் அஞ்சாமல் செய்கின்றோமா? சிந்திப்போம்.
இறைவாக்கு:
‘சாவின் இருள்சூழ் பள்ளத்தாக்கில் நான் நடக்க நேர்ந்தாலும் நீர் என்னோடு இருப்பதால் எத்தீங்கிற்கும் அஞ்சிடேன்’ (திபா 23: 4) என்பார் திருப்பாடல் ஆசிரியர். எனவே, நாம் ஆண்டவர் நம்மோடு இருக்கின்றார் என்ற உணர்வோடு அஞ்சாமல் பணிசெய்து, இறையருளை நிறைவாகப் பெறுவோம்.

Source: New feed