
பொதுக் காலத்தின் முப்பத்து நான்காம் வாரம்
திங்கட்கிழமை
I திருவெளிப்பாடு 14: 1-5
II லூக்கா 21: 1-4
எல்லாவற்றையும் காணிக்கையாகச் செலுத்தியவர்
சிறுவனின் பொம்மை:
ஒரு கிறிஸ்தவக் குடும்பம் ஞாயிறு திருப்பலியில் கலந்து கொள்வதற்காக வேகவேகமாகக் கிளம்பிக் கொண்டிருந்தது. அந்தக் குடும்பத்தில் இருந்த ஏழு வயது டோனி தன்னுடைய பொம்மையை எடுத்துக்கொண்டு கோயிலுக்குக் கிளம்பினான்.
அவனுடைய பெற்றோர் அவனிடம், “பொம்மையை எதற்குக் கோயிலுக்கு எடுத்துக் கொண்டு வருகின்றாய்? அதனை வீட்டிலேயே வைத்துவிடு” என்றார்கள். அவனோ தன்னுடைய பிடியில் உறுதியாய் இருந்ததால், அவனை அவர்கள் பொம்மையுடன் கோயிலுக்குக் கூட்டிக் கொண்டு போனார்கள்.
கோயிலில், காணிக்கை எடுக்கும் நேரத்தில் சிறுவன் டோனி தன்னிடம் இருந்த பொம்மையை எடுத்துக் காணிக்கைத் தட்டில் வைத்தான். அதைக் கோயிலில் இருந்த பலரும் வியப்போடு பார்த்தார்கள். திருப்பலில் முடிந்ததும், அவனுடைய பெற்றோர் அவனிடம், “நீ ஏன் உன்னுடைய பொம்மையைக் காணிக்கைத் தட்டில் வைத்தாய்?” என்று கேட்டதற்கு, அவர்களிடம் அவன், “கடவுளுக்குக் காணிக்கையாகக் கொடுக்க என்னிடம் பொன் இல்லை. தூபம், வெள்ளைப்போளம் என்றால் என்னவென்றே எனக்குத் தெரியாது. என்னிடம் இருந்தது பொம்மையும் சில நாணயங்களும்தான். அதனால்தான் நான் அவற்றைக் காணிக்கையாக் கொடுத்தேன்” என்றான். இதைக் கேட்டு அவனுடைய பெற்றோர் வியந்தனர்.
சிறி வயதிலேயே கடவுளுக்கு மிகுதியாகக் கொடுக்கவேண்டும் என்ற எண்ணம் சிறுவன் டோனியின் உள்ளத்தில் தோன்றியிருப்பது பாராட்டுதற்குரியது. இன்று நாம் வாசிக்கக்கேட்ட இறைவார்த்தை, கடவுளுக்கு நாம் மனம் உவந்து, தாராளமாய்க் கொடுக்க வேண்டும் என்ற சிந்தனையைத் தருகின்றது. அது குறித்து நாம் சிந்திப்போம்.
திருவிவிலியப் பின்னணி:
எருசலேம் திருநகருக்குள் வெற்றி வீரராய் நுழைந்த இயேசு, தன்னுடைய கடைசி வாரத்தை அங்கேயே செலவிட்டு வந்தார். இந்நிலையில் இன்றைய நற்செய்தி வாசகத்தில், எருசலேம் திருக்கோயிலில் இருந்த பெண்கள் பகுதியில் அமர்ந்திருந்த இயேசு, அங்கிருந்து காணிக்கைப் பெட்டிகளில் காணிக்கை செலுத்திக் கொண்டிருந்தவர்களைப் பார்த்துக் கொண்டிருந்தார்.
பல்வேறு தேவைகளுக்காக எருசலேம் திருக்கோயிலில் பதின்மூன்று காணிக்கைப் பெட்டிகள் வைக்கப்பட்டிருந்தன. அவற்றில் பலரும் மிகுதியாகக் காணிக்கை செலுத்தினார்கள். அவர்களோடு ஓர் ஏழைக் கைம்பெண்ணும் காணிக்கை செலுத்துகின்றார். ஆனால், அவர் பற்றாக்குறையிலிருந்து காணிக்கை செலுத்தினார். அதனால் அவர் மற்ற எல்லாரையும் விட மிகுதியாகக் காணிக்கை செலுத்தினார் என்று இயேசு அவரைப் பாராட்டுகின்றார்.
இங்கு இயேசு அந்த ஏழைக் கைம்பெண்ணைப் பாராட்டக் காரணம், ‘இனிமேல் எல்லாமே ஆண்டவர்தான்’ என்று நம்பி அவர் காணிக்கை செலுத்தினார். அவர் மற்றவரைப் போன்று இருப்பதிலிருந்து ஏதோ கொஞ்சமாய்க் காணிக்கை செலுத்தவில்லை. இருப்பதையே காணிக்கையாகச் செலுத்தினார். அதனால்தான் இயேசு அவரைப் பாராட்டுகின்றார். இன்றைய நற்செய்திக்கு முந்தைய பகுதியில், “மறைநூல் அறிஞர்கள் கைம்பெண்களின் வீடுகளைப் பிடுங்கிக் கொள்கிறார்கள்” (லூக் 20:47) என்று வாசிக்கின்றோம். இத்தகைய சூழலில்தான் அவர் தன்னிடம் இருந்ததையெல்லாம் காணிக்கையாகச் செலுத்துகின்றார்.
முதல் வாசகத்தில் ஆட்டுக் குட்டியாம் இயேசுவைப் பற்றி வாசிக்கின்றோம். அவர் தன்னையே தந்தவராக இருக்கின்றார். இவ்வாறு நாம் கடவுளுக்கு நம்மை முழுமையாய்த் தரவேண்டும் என்ற அழைப்பு விடுக்கப்படுகின்றது. எனவே, நாம் கடவுளுக்கு மனமுவந்து, முழுமையாய்த் தர முன்வருவோம்.
சிந்தனைக்கு:
எதைக் கொடுக்கின்றோமோ, அதுவே நம்முடையது.
கட்டாயத்தின் பெயரில் கொடுப்பதும், விளப்பரத்திற்காகக் கொடுப்பதும் கொடுப்பதே அல்ல.
கொடுத்துக் கொடுத்து யாரும் கேட்டுப் போனதாய் வரலாறு இல்லை.
இறைவாக்கு:
‘முகமலர்ச்சியோடு கொடுப்பவரே கடவுளின் அன்புக்கு உரியவர்’ (2 கொரி 9:7) என்று பவுல் கூறுவார். எனவே, நாம் கடவுளுக்கு முக மலர்ச்சியோது கொடுத்து, இறையருளை நிறைவாகப் பெறுவோம்.
Source: New feed