
பொதுக்காலத்தின் முப்பத்து மூன்றாம் வாரம்
செவ்வாய்க்கிழமை
I திருவெளிப்பாடு 3: 1-6, 14-22
II லூக்கா 19: 1-10
மனம் மாறு
மனம் மாறியதால் மழை:
ஒரு சிற்றூரில் பல ஆண்டுகளாக மழையே பெய்யாததால் பஞ்சம் ஏற்பட்டது. இதனால் ஊரில் இருந்த பெரியவர்களெல்லாம் அவ்வூரில் இருந்த இறையடியாரின் தலைமையில் ஒன்றுகூடி ஒரு குறிப்பிட்ட நாளில் மழைக்காக இறைவனிடம் வேண்ட முடிவு செய்தார்கள்.
குறிப்பிட்ட நாளும் வந்தது. இறையடியாரின் தலைமையில் ஊரில் இருந்த நாற்பது பெரியவர்கள் ஊருக்கு வெளியே இருந்த மலையடிவாரத்திற்குச் சென்று மழைக்காக இறைவனிடம் வேண்டியபோதும், மழை வரவே இல்லை. இது இறையடியாருக்கு அதிர்ச்சியைத் தந்தது. அதனால் அவர் இறைவனை நோக்கி, “நாங்கள் மழைக்காக உம்மிடம் வேண்டியபோதும், நீர் ஏன் எங்களுக்கு மழை தரவில்லை?” என்று மிகுந்த வேதனையாக கேட்டார். அப்போது கடவுள் அவரிடம், “உங்களில் ஒரு பாவி இருக்கின்றான். அவன் மட்டும் வெளியே வந்துவிட்டால், நான் மழை பெய்யச் செய்வேன்” என்று உறுதியளித்தார்.
இச்செய்தியை இறையடியார் பெரியவர்களிடம் சொன்னபோது, தான் பாவி என்று ஒத்துக்கொண்டு யாருமே வெளியே வரவில்லை. அதே நேரத்தில் அக்கூட்டத்தில் இருந்த உண்மையான பாவி, தன்னுடைய முகத்தை மறைத்துக்கொண்டு, தான் செய்த குற்றங்களை உணர்ந்து கண்ணீர்விட்டு அழுதார். மறுவினாடி வானம் கொட்டோ கொட்டென மழையைக் கொட்டித் தீர்த்தது.
இறையடியாருக்கு ஒரே வியப்பாக இருந்தது. அதனால் அவர் இறைவனிடம், “பாவி என்று யாரும் முன் வரவில்லை, இருந்தும் நீர் மழையைத் தந்திருக்கின்றீரே!” என்று கேட்டதற்கு, அவர், “பாவி தன் குற்றத்தை ஒத்துக்கொண்டார். அதனால்தான் மழையைத் தந்தேன்” என்றார்.
ஆம், ஒரு பாவி தன் குற்றத்தை ஒத்துக்கொண்டு மனம் மாறுகின்றபோது. கடவுள் மிகுதியான ஆசி வழங்குகின்றார். அதையே இந்த நிகழ்வும் இன்று நாம் வாசிக்கக் கேட்ட இறைவார்த்தையும் நமக்கு எடுத்துக்கூறுகின்றன. அது குறித்து நாம் சிந்திப்போம்.
திருவிவிலியப் பின்னணி:
“மிகுதியான உடைமைகளைக் கொண்டிருப்பதால் மட்டும் ஒருவருக்கு வாழ்வு வந்துவிடுவதில்லை” (லூக் 12:15) என்பதற்கு மிகப்பெரிய எடுத்துக்காட்டாய் இருப்பவர் சக்கேயு! இச்சக்கேயுவிடம் மிகுதியான உடைமைகளும் பணமும் இருந்திருக்கும். ஆனால் வாழ்வு இல்லை. ஆகவே வாழ்வுதரும் இயேசுவைக் காண அவர், காட்டு அத்தி மரத்தில் ஏறிக்கொள்கிறார்.
இயேசு மக்களின் உள்ளத்து உணர்வுகளையும் அவர்களின் எண்ணங்களையும் அறிபவர் (லூக் 5:22, 6:8). சக்கேயு தன்னைக் காண வந்திருக்கின்றார் என்பதை அறிந்த இயேசு அவரிடம், “சக்கேயு, இன்று உமது வீட்டில் நான் தங்க வேண்டும்” என்கிறார். இயேசுவிடமிருந்து இவ்வார்த்தைகளைக் கேட்டதும், சக்கேயு தன்னுடைய உடைமைகளில் பாதியை ஏழைகளுக்குத் தந்துவிடுவதாகவும், எவரையாவது ஏமாற்றி எதையாவது கவர்ந்திருந்தால் அதை நான்கு மடங்காகத் திருப்பித் தந்துவிடுகின்றேன் என்றும் கூறுகின்றார்.
சக்கேயு இயேசுவிடமிருந்து வாழ்வு பெற நினைத்தார். அதன் வெளிப்பாடாக, அவர் தன்னிடமிருந்த பாவத்தை மட்டுமல்லாமல் உடைமைகளையும் இழக்க, அல்லது கொடுக்கத் தயாராக இருக்கின்றார்.
இன்றைய முதல் வாசகத்தில் பணம்தான் எல்லாம், செல்வம்தான் எல்லாம் என்று வாழ்கின்ற சர்தை, இலவோதிக்கேயா ஆகிய இரு திருஅவைகளைக் குறித்து வாசிக்கின்றோம். பணம்தான் எல்லாம் என்று ஆண்டவரைப் புறக்கணித்து வாழ்ந்த இத்திருஅவையினர் இழிநிலையில் உள்ளனர் என்று சொல்லும் யோவான், அவர்களை மனம்மாறச் சொல்கின்றார்.
நாம் ஒவ்வொருவரும் கடவுளின் அருளைப் பெற தேவையற்றவற்றை விட்டுவிட்டுத் தேவையான ஆண்டவரைப் பற்றிக் கொள்ள வேண்டும். இது மிகவும் முக்கியம்.
சிந்தனைக்கு:
பாவத்தை நோக்கி வரும்போது அல்ல, பாவத்தை விட்டு விலகும்போதே கடவுளின் ஆசி கிடைக்கும்.
உலக செல்வத்தால் அல்ல, ஒப்பற்ற செல்வத்தால் மட்டுமே வாழ்வு தர முடியும்.
மனமாற்றம் செயலில் வெளிப்பட வேண்டும்.
இறைவாக்கு:
‘கடவுளுக்கேற்ற பலி நொறுங்கிய நெஞ்சமே’ (திபா 51: 17) என்பார் தாவீது மன்னர். எனவே நாம் மனம் மாறி, கடவுளுக்கேற்ற வாழ்க்கை வாழ்ந்து, இறையருளை நிறைவாகப் பெறுவோம்.
Source: New feed