
பொதுக் காலத்தின் முப்பத்து மூன்றாம் வாரம்
திங்கட்கிழமை
I திருவெளிப்பாடு 1: 1-4; 2: 1-5a
II லூக்கா 18: 35-43
“அன்பிலும் நம்பிக்கையிலும் நிலைத்திரு”
உறுதியாய் இருந்ததால் கிடைத்த வெற்றி:
வாட்டர்லூ என்ற இடத்தில் நெப்போலியனுக்கும் வெல்லிங்டன் அரசனுக்கும் இடையே நடந்த போரை யாரும் அவ்வளவு எளிதாக மறந்துவிட முடியாது.
நெப்போலியன் ஒரு மாவீரன். அவனுடைய படை மிகவும் வலிமையானது. அதனால் அவனை எதிர்த்துப் போரிட்ட வெல்லிங்டன் அரசனுடைய படையில் தொடக்கத்தில் பெரிய அளவில் உயிர்ச்சேதம் ஏற்பட்டது. அப்போது படைவீரன் ஒருவன் வெல்லிங்கடன் அரசனிடம், “நமது படைத்தளபதி, ‘போரில் நாம் மிகப் பெரிய அளவில் இழப்பினைச் சந்தித்துக் கொண்டிருக்கிறோம்’ என்று சொல்லிக் கொண்டிருக்கிறார். அதனால் என்ன செய்வது?” என்றார். அப்போது அரசன் அந்தப் படைவீரன், “உறுதியாய் இருக்கச் சொல்” என்றார்.
படைவீரனும் அரசன் தன்னிடத்தில் சொன்ன செய்தியைப் படைத்தளபதியிடம் சொல்ல, அவர் மற்றவர்களிடமும் இச்செய்தியைச் சொன்னார். இதையடுத்து வெல்லிங்டனின் படைவீரர்கள் நம்பிக்கையை இழக்காமல் உறுதியாய் நின்று போரிட்டதால் போரில் வெற்றி பெற்றார்கள்.
ஆம் வெல்லிங்டன் படைவீரர்களும், அந்நாட்டு அரசனும் பெரிய இழப்பினைச் சந்தித்த போதும், தாங்கள் உறுதியாய் வெல்வோம் என்று நம்பிக்கையில் நிலைத்திருந்ததால், இறுதியில் அவர்கள் போரில் வெற்றி பெற்றார்கள். இன்று நாம் வாசிக்கக்கேட்ட இறைவார்ததையும் நாம் நமது நம்பிக்கையிலும் அன்பிலும் உறுதியாய் நிலைத்திருக்க வேண்டும் என்ற செய்தியைத் தருகின்றது. அது குறித்து நாம் சிந்திப்போம்.
திருவிவிலியப் பின்னணி:
இஸ்ரயேல் மக்களால் வீழ்த்தப்பட்டு (யோசு 6:20), பின்பு ஏரோது மன்னனால் தனது வசதிக்காக மீண்டுமாகக் கட்டியெழுப்பப் பட்ட ஒரு நகர்தான் எரிகோ. எருசலேம் நோக்கிய பயணத்தில் இயேசு இந்நகரை நெருங்கி வருகின்றபோதுதான், பார்வையற்ற ஒருவர் இயேசுவின் கவனத்தை ஈர்க்கின்றார்.
பிச்சைக்காரர்கள் அன்றும் சரி, இன்றும் சரி ஒரு பொருட்டாக மதிக்கப்படுவதில்லை. அதுவும் அவர்கள் ஒரு பார்வையற்றவராக இருந்துவிட்டால் அவர்கள் எப்படியெல்லாம் இழவு படுத்தப்படுவார்கள் என்று சொல்லத் தேவையில்லை. நற்செய்தியில் வரும் பார்வையற்ற பிச்சைக்காரர், மக்கள் தன்னைக் கத்த வேண்டாம் என்று அதட்டிய போதும் அவர், “தாவீதின் மகனே, எனக்கு இரங்கும்” (எசா 11: 1-2) என்று இயேசுவை நோக்கி உரக்கக் கத்தி அவரது கவனத்தை ஈர்த்து இறுதியில் பார்வை பெறுகின்றார். அத்தோடு நின்றுவிடாமல், அவர் பார்வை பெற்றதும் இயேசுவைப் பின்தொடர்கின்றார். இவ்வாறு அவர் நம்பிக்கையில் நிலைத்து நின்றதால், பார்வை பெற்று, இயேசுவைப் பின்தொடர்கின்றார்.
முதலில் வாசகத்தில் யோவான் தனக்கு அறிவுறுத்தப்பட்டதுபோன்று ஏழு திருஅவைகளில் ஒன்றான எபேசுத் திருஅவைக்குக் கடிதம் எழுதுகின்றார். அக்கடிதத்தில் அவர் அத்திருஅவையில் இருந்தவர்களிடம், முன்பிருந்த அன்பு இப்போது இல்லை என்கிறார். எபேசுத் திருஅவை ஒரு முக்கியமான திருஅவை, பவுலும் (திப 20: 29-31) திமொத்தேயும் (1 திமொ 1:3) இதில் பணிசெய்தார்கள். ஒருகாலத்தில் ஆண்டவர் இயேசுவின்மீது மிகுந்த அன்பும் நம்பிக்கையும் கொண்டிருந்த இத்திருஅவை காலப்போக்கில் முற்றிலுமாக மாறிவிட்டது. அதனால்தான் யோவான் அந்திருஅவையில் உள்ளவர்களிடம் மனம்மாறுங்கள் என்கிறார்.
நாம் ஆண்டவர்மீது கொண்டிருக்கும் நம்பிக்கையும் அன்பும் மிகுதியாக வேண்டுமே ஒழிய குறையக் கூடாது. இதை நாம் நம் மனத்தில் இருத்துவோம்.
சிந்தனைக்கு:
நம்பிக்கையும் அன்பும் தேய்பிறை போன்று தேயக்கூடாது, வளம்பிறை போன்று வளர வேண்டும்.
ஆண்டவர்மீது கொள்ளும் நம்பிக்கை நம்மை ஒருநாளும் கைவிடாது.
ஒருவரின் வெளித்தோற்றத்தைப் பார்த்து மதிப்பிடுவதை விட்டுவிடுவது நலம்
இறைவாக்கு:
‘இறுதிவரை மன உறுதியுடன் இருப்பவரே மீட்புப் பெறுவர்’ (மத் 24:13) என்று இயேசு கூறுவார். நாம் ஆண்டவர்மீது கொண்ட நம்பிக்கையிலும் அன்பிலும் உறுதியாய் நிலைத்திருந்து, இறையருளை நிறைவாகப் பெறுவோம்.
Source: New feed