
திருவருகைக் காலத்தின் முதலாம் வாரம்
வியாழக்கிழமை
I எசாயா 29: 17-24
II மத்தேயு 9: 27-31
“பார்வையற்றோரின் கண்கள் பார்வை பெறும்”
பார்வையற்றோர் பெயரில் பணமோசடி:
நகரில் இருந்த பெரிய உணவகம் அது. அந்த உணவகத்தின் வாசலில் ஒரு கண்ணாடிப் பெட்டி வைக்கப்பட்டிருந்தது. அதில் ‘பார்வையற்றோருக்காக’ என்ற வார்த்தை பொறிக்கப்பட்டிருந்ததால், உணவகத்திற்குச் சாப்பிட வந்தவர்கள் அந்தப் பெட்டியில் பத்து, இருபது, ஐம்பது எனப் பணம் போட்டுவிட்டுச் சென்றார்கள்.
சில நாள்கள் கழித்து, அந்த உணவகத்திற்கு ஒருவர் சாப்பிட வந்தார். அவர் கடை உரிமையாளருக்கு மிக நெருக்கமானவர். அவர் வாசலில் வைக்கப்பட்டிருந்த கண்ணாடிப் பெட்டியைப் பார்த்தபோது, அது அங்கு இல்லாததைக் கண்டு, “இங்கே வைக்கப்பட்டிருந்த கண்ணாடிப் பெட்டி எங்கே?” என்று கடையின் உரிமையாளரிடம் கேட்டார். “அதையா கேட்கிறீர்கள்! அது ஏற்கெனவே நிரம்பி விட்டது. அதனால்தான் அதைவிடப் பெரிய பெட்டியாக வைத்திருக்கின்றேன்” என்று கள்ளச் சிரிப்புச் சிரித்துக்கொண்டு, கல்லாப் பெட்டிக்கு அருகில் இருந்த ஒரு பெரிய மரப்பெட்டியைக் காட்டினார்.
வந்தவர் அந்த மரப்பெட்டியைப் பார்த்ததும், அவருக்குப் புரிந்துவிட்டது, கடைக்காரர் ஏன் கள்ளச் சிரிப்பு சிரித்தார் என்று.
ஒருசிலர் இப்படித்தான், பார்வையோற்றுக்கு உதவுகின்றேன், ஊனமுற்றவர்களுக்கு உதவுகின்றேன் என்று சொல்லிக்கொண்டு அவர்கள் பெயரில் மக்களிடமிருந்து பணம் பறிப்பது உண்டு. ஆனால், இன்று நாம் வாசிக்கக்கேட்ட இறைவார்த்தை, பார்வையற்றோரின் கண்கள் பார்வை பெறும். அது இயேசு வழியாக நிறைவேறவும் செய்கின்றது. அது குறித்து நாம் சிந்திப்போம்.
திருவிவிலியப் பின்னணி:
லெபனான் நாடானது காடுகள் நிறைந்த ஒரு நாடு. அந்நாடு வளம்மிக்க தோட்டமாக மாறும் என்கிறார் இறைவாக்கினர் எசாயா. காடுகள் நிறைந்த ஒரு நாடு, வளம்மிக்க ஒரு தோட்டமாக மாறும் என்பது மிகப்பெரிய மாற்றம். இத்தகைய மாற்றம் மெசியாவின் வருகையின்போது நிகழும். அப்போது பார்வையற்றோரின் கண்கள் பார்வை பெறும்; ஒடுக்கப்பட்டோர் ஆண்டவரில் மகிழ்ச்சி பெறுவர் என்கிறார் இறைவாக்கினர் எசாயா.
அவர் சொன்ன வார்த்தைகள் இயேசுவில் நிறைவேறின. அதற்குச் சான்றாய் இருப்பதுதான் இன்றைய நற்செய்தி வாசகம். நற்செய்தியில் இயேசு பார்வையற்ற இருவருக்கு, அவர்களிடம் இருந்த நம்பிக்கையைக் கண்டு பார்வையளிக்கின்றார். இயேசு அவர்களுக்குப் பார்வையளித்ததும், அவர்களிடம், “இதை யாரும் அறியாதபடிப் பார்த்துக் கொள்ளுங்கள்” என்கிறார்.
இயேசு அவர்களிடம் இவ்வாறு சொல்லக் காரணம், தான் இவ்வுலகிற்கு வல்ல செயல்களைச் செய்வதற்காக அல்ல, மாறாகக் கடவுளிடம் வார்த்தையை அறிவிக்கவே வந்தேன் என்று சொல்லாமல் சொல்கின்றார். அவர்களோ, அவர் சொன்னதற்கு முற்றிலும் எதிராகச் செயல்படுகின்றார்கள். இயேசுவின் வருகையினால் பார்வையற்றோர் பார்வை பெறுவர் என்றாலும், அவர்மீது கொள்ளும் நம்பிக்கை கொண்டு வாழ்வதும், அவருடைய வார்த்தையின் படி நாம் நடப்பதும் இன்றியமையாதவை.
சிந்தனைக்கு:
ஆண்டவர்மீது நம்பிக்கை கொள்ளாமலும், அவரது வார்த்தையின்படி நடவாமலும் இருப்பது பார்வையற்ற நிலையே!
ஆண்டவர்மீது கொள்ளும் நம்பிக்கையே நம்மை அவருக்கு ஏற்புடையவராக்கும்.
ஆண்டவர் வருகையினால் நமது துன்பங்கள் தூரப் போகும்.
இறைவாக்கு:
“ஒளி தோன்றுக! (தொநூ 1:3) என்பதுதான் ஆண்டவர் திருவிவிலியத்தில் பேசும் முதல் வார்த்தை. அதனால் நாம் புற ஒளி பெற்றவர்களாய் மட்டுமல்ல, அக ஒளி பெற்றவர்களாய், ஆண்டவருக்கு ஏற்புடையவர்களாய் வாழ்ந்து, இறையருளை நிறைவாகப் பெறுவோம்.
Source: New feed