
பொதுக்காலம் மூன்றாம் வாரம் சனிக்கிழமை
I எபிரேயர் 11: 1-2, 8-19
II மாற்கு 4: 35-41
“நம்பிக்கையினால்தான்”
நம்பிக்கையினால் உயிர்பெற்றெழுந்த இளைஞன்
கிறிஸ்தவ இளைஞன் ஒருவன் தனது இருசக்கர வண்டியில் பக்கத்து ஊருக்குச் சென்றுகொண்டிருக்கும்பொழுது, எதிரே வந்த பேருந்து ஒன்று, கட்டுப்பாட்டை இழந்து இவன்மீது மோத பெரிய விபத்து ஏற்பட்டது.
உடல் முழுவதும் பலத்த காயங்களோடு உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த இவனை அக்கம் பக்கத்திலிருந்தவர்கள்தான் தூக்கிக்கொண்டு போய் மருத்துவமனையில் சேர்த்தார். ‘தன்னுடைய வாழ்க்கையே முடிந்துவிட்டது’ என்று இவன் நினைத்துக் கொண்டிருக்கும்பொழுது, இவன் அருகே வந்த அந்த மருத்துவமனையில் செவிலியராய்ப் பணியாற்றிய அருள்சகோதரி ஒருவர், இவனுடைய காதுகளில், “உன் கடவுளாகிய ஆண்டவர் உன் நடுவில் இருக்கின்றார்; தன் அன்பினால் உனக்குப் புத்துயிர் அளிப்பார்” (செப் 3: 17) என்ற வார்த்தைகளை உச்சரித்துவிட்டுச் சென்றார். இவ்வார்த்தைகள் அவளுக்குள் நம்பிக்கையை ஏற்படுத்தின. ஒருசில நாள்களில் அவன் நம்பியது போன்று புத்துயிர் பெற்று எழுந்து, ஆண்டவரைப் போற்றிப் புகழ்ந்தான்.
தன் வாழ்க்கையே முடிந்துவிட்டது என்று நினைத்துகொண்டிருந்த இளைஞன் கடவுளின் வார்த்தையில் நம்பிக்கை கொண்டு புத்துயிர் பெற்றான். இன்றைய இறைவார்த்தை நம்பிக்கையினால் ஒருவர் பெறுகின்ற ஆசிகளை எடுத்துக்கூறுகின்றது.
திருவிவிலியப் பின்னணி:
எபிரேயர் திருமுகத்திலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய முதல் வாசகம், நம்பிக்கையினால் நற்சான்று பகர்ந்த மூதாதையர்களை, அதிலும் குறிப்பாக ஆபிரகாமைப் பற்றிப் பேசுகின்றது. ஆபிரகாம், ஆண்டவர் தன்னை அழைத்தபொழுதும், தன் மனைவி கருவுற இயலாதவராய் இருக்க, ‘உன் வழிமரபை வானத்து விண்மீன்கள் போலவும், கடற்கரை மணல்போலப் பெருகச் செய்வேன்’ என்று ஆண்டவர் தன்னிடம் சொன்னபொழுதும், தன் ஒரே மகனைப் ஆண்டவருக்குப் பலியாகக் கொடுக்கத் துணிந்தபொழுதும் அவரை நம்பினார்; அதனால் அவர் ஆண்டவருக்கு நற்சான்று பகர்ந்தது மட்டுமல்லாமல், அந்த நம்பிக்கையினால் வாழ்வடைந்தார்.
இதற்கு முற்றிலும் மாறாக இன்றைய நற்செய்தியில், தங்களோடு இயேசு இருக்கின்றார் என்பதை உணராமல், அவர்மீது நம்பிக்கை கொள்ளாமல், கடலில் அடித்த பெரும் புயலை கண்டு சீடர்கள் அஞ்சுகின்றார்கள். அப்பொழுதுதான் இயேசு அவர்களிடம், “ஏன் அஞ்சுகிறீர்கள்? உங்களுக்கு இன்னும் நம்பிக்கை இல்லையா?” என்கிறார். கடவுள் நம்மோடு இருக்கும்பொழுது, அவர்மீது நம்பிக்கை வைப்பதை விடுத்து, சீடர்களைப் போன்று நாம் அஞ்சி நடுங்கலாமா? சிந்திப்போம்.
சிந்தனைக்கு:
இயேசு நம்மோடு இருப்பதை நாம் உணர்கின்றோமா?
ஆண்டவரில் நாம் அசைக்க முடியாத நம்பிக்கை கொண்டிருக்கையில் எதற்கும் பதற்றப்படத் தேவையில்லை (எசா 28: 16)
‘நம்பிக்கையிலான்றி எவரும் கடவுளுக்கு உகந்தவராயிருக்க இயலாது’ (எபி 11:6).
ஆன்றோர் வாக்கு
‘நம்பிக்கைதான் வெற்றியின் இரகசியம்’ என்பார் எமர்சன். எனவே, நாம் ஆண்டவர்மீது ஆழமான நம்பிக்கை கொண்டு வாழ்ந்து, இறையருளை நிறைவாகப் பெறுவோம்.
Source: New feed