
பொதுக்காலம் முதல் வாரம்
திங்கட்கிழமை
I எபிரேயர் 1: 1-6
II மாற்கு 1: 14-20
“தன் மகன் வழியாகப் பேசும் கடவுள்”
பாவம் செய்து கடவுளைவிட்டு விலகிச் சென்ற மனிதர்கள்
ஆற்றங்கரையோரமாய் ஒரு சிறு குடிசை அமைத்து, அங்குத் தங்கியிருந்த துறவியிடம் ஆலோசனை கேட்கப் பலரும் பல்வேறு இடங்களிலிருந்து வந்து போனார்கள். ஒருநாள் அவரிடம் வந்த செல்வந்தர் ஒருவர் அவரைத் தலைதாழ்த்தி வணங்கிவிட்டு, தனக்கு இருந்த ஐயத்தை அவரிடம் கேட்டார். “சுவாமி! எனக்குள் இருக்கின்ற நீண்டநாள் ஐயம் இது… கடவுளுக்கும் எனக்கும் உள்ள தூரத்தை நான் எப்படி அறிந்துகொள்வது?” செல்வந்தர் கேட்ட இக்கேள்விக்கான பதிலை ஒரு வினாடி யோசித்த துறவி, “உன்னிடமுள்ள பொருள்களை எல்லாம் வரிசையாக அடுக்கி வை. அது எவ்வளவு தூரம் வருகின்றதோ, அதுதான் கடவுளுக்கும் உனக்கும் இடையே உள்ள தூரம்” என்று தீர்க்கமாய்ச் சொன்னார்.
ஆம், நம்மிடமுள்ள பொருள்கள், நாம் செய்த பாவங்கள் ஆகியவற்றால், நாம் கடவுளை விட்டு வெகுதூரம் போய்விடுகின்றோம். இப்படி நாம் செய்த பாவங்களால் கடவுளை விட்டு வெகு தூரம் போன நம்மைக் கடவுள் புறக்கணித்துவிடவில்லை. மாறாக, மன்னித்து, இறைவாக்கினர்கள் வழியாகவும், இறுதியில் தம் மகன் வழியாகவும் நம்மோடு பேசினார். கடவுள் தம் மகன் வழியாக என்ன பேசினார் என்று சிந்தித்துப் பார்ப்போம்.
திருவிவிலியப் பின்னணி
எபிரேயருக்கு எழுதப்பட்ட திருமுகத்திலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய முதல் வாசகத்தில் அதன் ஆசிரியர், “பலமுறை பல வகைகளில் மூதாதையரிடம் பேசிய கடவுள், இவ்விறுதி நாள்களில் தம் மகன் வழியாக நம்மிடம் பேசியுள்ளார்” என்கிறார். அவர் என்ன பேசினார் என்பதைத்தான் இன்றைய நற்செய்தியில், “…..மனம் மாறி நற்செய்தியை நம்புங்கள்” என்று படிக்கின்றோம். ஆம், காலம் நிறைவேறிவிட்டதால், இறையாட்சி நெருங்கி வந்துவிட்டதால், மனம் மாறி, நற்செய்தியை நற்செய்தி நம்புவது காலத்தின் கட்டாயமாக இருக்கின்றது.
சிந்தனைக்கு:
பலவகைகளில் நம்மோடு பேசுகின்ற கடவுளின் குரலுக்கு நாம் செவிகொடுக்கின்றோமா?
நம்முடைய மனமாற்றத்தைச் செயலில் வெளிப்படச் செய்வோம் (மத் 3: 18)
அவர் தமக்குரியவர்களிடம் வந்தபொழுது, அவர்கள் அவரை ஏற்றுக்கொள்ளவில்லை (யோவா 1: 11). நாம் யூதர்களைப் போன்று நம்மிடம் வருகின்ற இயேசுவைப் புறக்கணியாமல், அவரை ஏற்றுக்கொண்டு, அவர் குரல் கேட்டு, அவர் வழியில் நடப்போம்.
இறைவாக்கு:
‘பேசும், உம் அடியான் கேட்கிறேன்’ (1 சாமு 1: 10) என்று ஆண்டவரிடம் மறுமொழி கூறிய சாமுவேலைப் போன்று, நம்மோடு பேசுகின்ற ஆண்டவர் இயேசுவின் குரலுக்கு நாம் செவிமடுத்து, அவர் காட்டும் வழியில் நடப்போம், இறையருளை நிறைவாகப் பெறுவோம்.
Source: New feed