நாம் மற்றவர் மீது சுமத்தியுள்ள காயங்கள் உட்பட, நம் அனைத்துக் காயங்களைக் குணப்படுத்தவும், இயேசுவின் நற்செய்தியை அறிவிப்பதற்கு, நம்மை துணிவுள்ள மறைப்பணி சீடர்களாக மாற்றவும், தூய ஆவியார் நம்மிடம் வருகிறார் என்று திருத்தந்தை கூறினார்.
எக்காலத்தையும்விட இக்காலத்தில் நமக்குத் தூய ஆவியார் அதிகம் தேவைப்படுகிறார் என்று, காணொளிச் செயதியில் கூறியுள்ள திருத்தந்தை, கடுமையாய் காயமடைந்துள்ள, துன்புறும் ஓர் உலகில் நாம் வாழ்ந்து வருகிறோம் என்றும், இந்த துன்பம், நம் சமுதாயத்தில், கடும் வறுமையில் உள்ள மக்களில் அதிகம் உணரப்படுகின்றது என்றும் கூறினார்.
இப்போது நமது அனைத்து மனிதப் பாதுகாப்பும் அழிந்துவிட்டது என்றும், இயேசுவின் பிரசன்னம் இந்த உலகில் இருப்பதை நம் சான்று வழியாக வெளிப்படுத்த வேண்டிய அ, வசியம் உருவாகியுள்ளது என்றும், திருத்தந்தை எடுத்துரைத்துள்ளார்.
கொள்ளைநோய் வழியாக நாம் கற்றுக்கொண்ட பாடங்களுக்குத் திறந்தமனமும், இதயமும் கொண்டிருப்பதற்கு, தூய ஆவியாரின் வல்லமை நமக்குத் தேவைப்படுகின்றது என்றும், இந்த வல்லமையே சான்றுபகர்வதற்கு நமக்கு உதவுகின்றது என்றும் கூறியுள்ள திருத்தந்தை, நாம் அனைவரும் ஒன்றே மற்றும், நம்மையே நாம் காப்பாற்றிக்கொள்ள முடியாது என்ற பாடத்தையே நாம் கற்றுக்கொள்கிறோம் என்று தெரிவித்துள்ளார்.
சமத்துவ சமுதாயம்
நாம் இந்த கொள்ளைநோயிலிருந்து மீண்டுவரும்போது, நாம் விட்டுவந்த பொருள்களை நம்மால் மீட்க இயலாது எனவும், ஏனெனில் எல்லாமே வித்தியாசமாக அமையும் எனவும் கூறியுள்ள திருத்தந்தை, நாம் எல்லாரும் ஒன்றுசேர்ந்து, நீதியும், நியாயமும், கிறிஸ்தவப் பண்பும் நிறைந்த சமுதாயத்தைக் கட்டியெழுப்பவில்லாயெனில், நாம் அனுபவிக்கும் துன்பங்கள் அனைத்தும் பயனற்றுப்போகும் என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்த உலகில், நமது ஒவ்வொரு நாட்டில், நகரங்களில், வறுமையின் கொள்ளைநோயை ஒழிப்பதற்கு நாம் உழைக்காவிட்டால், இந்தக் காலம் வீணான காலமாக இருக்கும் என்று எச்சரித்துள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தற்போதைய கொள்ளைநோய் போன்று. மனித சமுதாயம் எதிர்கொள்ளும் மாபெரும் சோதனைகளிலிருந்து, நம்மில் எவருமே, அதற்கு முன்னையநிலைபோல் மீண்டுவர இயலாது, அவ்வாறு வர இயலுமா என்ற கேள்வியையும் எழுப்பியுள்ளார்.
தூய ஆவியாரின் உதவி
எனவே, நாம் இன்று தூய ஆவியாருக்கு நம் இதயங்களைத் திறப்போம், அதன் வழியாக, அவர் நம் இதயங்களை மாற்றுவார் மற்றும், சிறந்த உலகை அமைப்பதற்கு நமக்கு உதவுவார் என்று கூறியுள்ள திருத்தந்தை, இந்த கோவிட்-19 கொள்ளைநோய் உருவாக்கியுள்ள வேதனை, கவலை மற்றும் சோதனைகளிலிருந்து நாம் விரைவில் மீண்டுவர தூய ஆவியார் உதவுவாராக என்று குறிப்பிட்டுள்ளார்.
பல்வேறு கத்தோலிக்க அருங்கொடை இயக்கங்களுக்கு இடையே ஒன்றிப்பையும், குழும உணர்வையும் வளர்க்கும் நோக்கத்தில், பொதுநிலையினர், குடும்பம் மற்றும், வாழ்வு திருப்பீட அவை, 2018ம் ஆண்டில்,CHARIS உலகளாவிய அமைப்பை உருவாக்கியது
Source: New feed