தந்தை மகன்மேல் அன்புகூர்ந்து அனைத்தையும் அவர் கையில் ஒப்படைத்துள்ளார்.
+யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 3: 31-36
அக்காலத்தில் இயேசு நிக்கதேமிடம் கூறியது: மேலிருந்து வருபவர், அனைவரையும்விட மேலானவர். மண்ணுலகிலிருந்து உண்டானவர் மண்ணுலகைச் சேர்ந்தவர். மண்ணுலகு சார்ந்தவை பற்றியே அவர் பேசுகிறார். விண்ணுலகிலிருந்து வருபவர், அனைவருக்கும் மேலானவர்.
தாம் கண்டதையும் கேட்டதையும் பற்றியே அவர் சான்று பகர்கிறார். எனினும் அவர் தரும் சான்றை எவரும் ஏற்றுக்கொள்வதில்லை. அவர் தரும் சான்றை ஏற்றுக்கொள்பவர் கடவுள் உண்மையானவர் என்பதை உறுதிப்படுத்துகிறார்.
கடவுளால் அனுப்பப்பெற்றவர் கடவுளின் வார்த்தைகளைப் பேசுகிறார். கடவுள் அவருக்குத் தம் ஆவிக்குரிய கொடைகளை அளவின்றிக் கொடுக்கிறார்.
தந்தை மகன்மேல் அன்புகூர்ந்து அனைத்தையும் அவர் கையில் ஒப்படைத்துள்ளார். மகனிடம் நம்பிக்கை கொள்வோர் நிலைவாழ்வைப் பெறுவர். நம்பிக்கை கொள்ளாதோர் வாழ்வைக் காணமாட்டார். மாறாகக் கடவுளின் சினம் அவர்கள்மேல் வந்து சேரும்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
——————————————
“மகனிடம் நம்பிக்கை கொள்வோர் நிலைவாழ்வைப் பெறுவர். நம்பிக்கை கொள்ளாதோர் வாழ்வைக் காணமாட்டார்”.
இளைஞன் ஒருவன் தன்னை சீடனாக சேர்த்துக்கொள்ளும்படி சூஃபி ஞானி ஒருவரிடம் கேட்டான். அதற்கு அந்த ஞானி, “என்னை முழுமையாக நம்புகிறவர்களை மட்டுமே நான் என் சீடனாக ஏற்றுக் கொள்வேன்” என்றார். சீடனோ, “நான் உங்களை முழுமையாக நம்புகிறேன். என்னை சீடனாக ஏற்றுக் கொள்ளுங்கள்” என்றான். “அப்படியா! சில நாட்கள் கழித்து உனக்குப் பதில் சொல்கிறேன், அதுவரை இங்கேயே தங்கியிரு” என்று சொல்லிவிட்டு ஞானி அங்கிருந்து போய்விட்டார்.
மறுநாள் காலை, ஒரு பெரிய மரத்தின் அடியில் அந்த சூஃபி ஞானியின் அருகே ஒரு பெண் அமர்ந்து, மதுவை (?) ஒரு கோப்பையில் அவருக்காக ஊற்றிக் கொண்டிருப்பதைக் கண்டான் அந்த இளைஞன். இதைப் பார்த்தவுடன், பெண் சகவாசமும், மதுப் பழக்கமும் உள்ள அந்த ஞானி, ஒரு ஏமாற்றுக்காரர் என்ற முடிவுக்கு வந்தான். அந்த இளைஞனின் முகத்தில் காணப்பட்ட அவநம்பிக்கையை கவனித்த அந்த ஞானி அவனை அருகே அழைத்தார். அந்த பெண்ணின் முகத்திரையை விலக்கினார். அப்பெண் அந்த ஞானியின் தாயார். பின்னர் மது பாட்டிலில் இருந்ததை அவனிடம் குடிக்கக் குடித்தார். அதைக் குடித்துப் பார்த்து அது வெறும் தண்ணீர் என்பதை உணர்ந்தான் அந்த இளைஞன்.
அப்போது ஞானி அவனிடம், “நீ கற்பனை செய்த அழகான பெண் எங்கே? உன்னால் ஒரு மூதாட்டியைக் கற்பனை செய்ய முடியாதது ஏன்? மது பாட்டிலில் இருந்தது வெறும் தண்ணீர் என்று ஏன் நினைக்கவில்லை?’ என்றார். இளைஞனால் ஒன்றும் பேசமுடியவில்லை. அவன் ஞானியிடம் தன்னை மன்னிக்கும்படி வேண்டினான். ஞானியோ, “உன்னிடம் உள்ள நம்பிக்கை வற்புறுத்தி ஏற்படுத்தப்பட்டது. கட்டாயத்தின் பேரில் உள்ள நம்பிக்கை இப்பொழுதோ, எப்பொழுதோ நிச்சயம் உடைந்து போகும். உனது நம்பிக்கை, ஒரு முயற்சி. உண்மையான நம்பிக்கை ஒரு முயற்சியாக இருக்க முடியாது. நம்பிக்கை வலுக்கட்டாயமாக இருக்கக் கூடாது. இயற்கையாக வரும்போது அது அழகாக இருக்கும். அப்போது அதை எதனாலும் அழிக்க முடியாது’ என்று கூறி அவனை அனுப்பி வைத்தார்.
மேலே சொல்லப்பட்ட நிகழ்வில் வரும் இளைஞன் அந்த ஞானியை நம்பாது போனதால், அவருடைய சீடராக இருப்பதற்கான தகுதியை இழந்து போனது மிகவும் துரதிஸ்டவசமானது. ஆம், நம்மிடத்தில் நம்பிக்கை என்ற ஒன்று இல்லாது போகும்போது நம்மால் எதையும் அடைய முடியாது என்பது உண்மையாகின்றது.
நற்செய்தி வாசகத்தில் ஆண்டவர் இயேசு கூறுவார், “மகனிடம் நம்பிக்கை கொள்வோர் நிலைவாழ்வைப் பெறுவர். நம்பிக்கை கொள்ளாதோர் வாழ்வைக் காணமாட்டார்” என்று. இவை உண்மையிலும் உண்மையான வார்த்தைகள். இயேசு வாழ்ந்த காலத்தில் நிறையப் பேர் குறிப்பாக நூற்றுவத் தலைவர், பனிரெண்டு ஆண்டுகளாக இரத்தப் போக்கினால் பாதிக்கப்பட்ட பெண்மணி, பார்வையற்ற பர்த்திமேயு, கனானியப் பெண்மணி இன்னும் பலர் ஆண்டவர் இயேசுவிடம் ஆழமான நம்பிக்கை கொண்டார்கள். அதனால் தாங்கள் வேண்டியதைப் பெற்றுக்கொண்டார்கள். அதே நேரத்தில் இயேசுவின் சொந்த ஊர் மக்களும், பரிசேயர்களும், மறைநூல் அறிஞர்களும் ஆண்டவர் இயேசுவிடம் நம்பிக்கை இல்லாமல், அவரைச் சோதித்துப் பார்த்தார்கள் அதனால் அவர்கள் அவரிடமிருந்து எந்தவொரு நன்மையையும் பெற்றுக்கொள்ளாமலே போனார்கள். ஆகையால், நாம் இயேசுவிடம் நம்பிக்கை வைத்து வாழ்கின்றபோது ஆசிரும், நம்பிக்கை இல்லாது இருக்கின்றபோது அதற்கான வெகுமதியையும் பெற்றுக்கொள்வோம் என்பது இதிலிருந்து உண்மையாகின்றது.
நமது அன்றாட வாழ்வில் நாம் இயேசுவிடம் நம்பிக்கை வைத்து வாழ்கின்றோமா? என்று சிந்தித்துப் பார்க்கவேண்டும். பல நேரங்கில் நாம் இயேசுவின் மீது வைக்கக்கூடிய நம்பிக்கை கடமைக்காக அல்லது கட்டாயத்தின் பேரில் வைக்கின்றோமே ஒழிய, உண்மையான விதத்தில் இல்லாது இருப்பது மிகவும் வேதனையாக ஒன்றாக இருக்கின்றது. உண்மையான நம்பிக்கை யாருடைய வற்புறுத்தலின் அடிப்படியிலும் இல்லாமல், தானாகவே வரும். அப்படிப்பட்ட நம்பிக்கை நமக்கு ஆயிரம் ஆயிரம் நன்மைகளைப் பெற்றுத் தரும்.
வில்லியம் ஜேம்ஸ் என்ற அறிஞர் குறிப்பிடுவார், “நம்பிக்கை என்ற ஒரு சக்தியால்தான் மனிதர் வாழ்கின்றனர். அது இல்லாத நிலையில் வீழ்ச்சி அடைகின்றனர். ஆம், நாம் நம் ஆண்டவர் இயேசுவின்மீது கொள்ளும் உண்மையான, ஆழமான நம்பிக்கையால் வாழமுடியும்.
ஆகவே, நாம் இறைமகன் இயேசுவிடம் ஆழமான நம்பிக்கை கொண்டு வாழ்வோம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.
Source: New feed