நீங்கள் என்னைத் தேர்ந்து கொள்ளவில்லை; நான்தான் உங்களைத் தேர்ந்துகொண்டேன்.
+யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 15: 9-17
அக்காலத்தில் இயேசு தம் சீடரை நோக்கிக் கூறியது: “என் தந்தை என்மீது அன்பு கொண்டுள்ளது போல நானும் உங்கள்மீது அன்பு கொண்டுள்ளேன். என் அன்பில் நிலைத்திருங்கள். நான் என் தந்தையின் கட்டளைகளைக் கடைப்பிடித்து அவரது அன்பில் நிலைத்திருப்பது போல நீங்களும் என் கட்டளைகளைக் கடைப்பிடித்தால் என் அன்பில் நிலைத்திருப்பீர்கள்.
என் மகிழ்ச்சி உங்களுள் இருக்கவும் உங்கள் மகிழ்ச்சி நிறைவு பெறவுமே இவற்றை உங்களிடம் சொன்னேன். நான் உங்களிடம் அன்பு கொண்டிருப்பது போல நீங்களும் ஒருவர் மற்றவரிடம் அன்புகொண்டிருக்க வேண்டும் என்பதே என் கட்டளை. தம் நண்பர்களுக்காக உயிரைக் கொடுப்பதை விடச் சிறந்த அன்பு யாரிடமும் இல்லை. நான் கட்டளை இடுவதையெல்லாம் நீங்கள் செய்தால் நீங்கள் என் நண்பர்களாய் இருப்பீர்கள்.
இனி நான் உங்களைப் பணியாளர் என்று சொல்ல மாட்டேன். ஏனெனில் தம் தலைவர் செய்வது இன்னது என்று பணியாளருக்குத் தெரியாது. உங்களை நான் நண்பர்கள் என்றேன்; ஏனெனில் என் தந்தையிடமிருந்து நான் கேட்டவை அனைத்தையும் உங்களுக்கு அறிவித்தேன்.
நீங்கள் என்னைத் தேர்ந்து கொள்ளவில்லை; நான்தான் உங்களைத் தேர்ந்துகொண்டேன். நீங்கள் கனி தரவும், நீங்கள் தரும் கனி நிலைத்திருக்கவும் உங்களை ஏற்படுத்தினேன்.
ஆகவே நீங்கள் என் பெயரால் தந்தையிடம் கேட்பதையெல்லாம் அவர் உங்களுக்குக் கொடுப்பார். நீங்கள் ஒருவர் மற்றவரிடம் அன்புகொள்ள வேண்டும் என்பதே என் கட்டளை.”
ஆண்டவரின் அருள்வாக்கு.
மறையுரைச் சிந்தனை.
கத்தோலிக்கத் திருச்சபையின் மரபுப்படி, ஆண்டவர் இயேசுவின் விண்ணேற்றத்திற்குப் பிறகு திருத்தூதரான தூய மத்தியாஸ் யூதேயாவிலும் அதன் சுற்றுப் புறங்களிலும் நற்செய்தி அறிவித்தபோது கயவர்கள் அவரை வாளால் வெட்டிக் கொலைசெய்தார்கள். அவருடைய உடலானது எருசலேம் நகரில் அடக்கம் செய்யப்பட்டது. தூய ஹெலனது ஆட்சிக்காலத்தில் மத்தியாசின் உடல் உரோமை நகருக்கு எடுத்துச் செல்லப்பட்டது.
வாழ்க்கை வரலாறு.
இயேசுவின் விண்ணேற்றத்திற்குப் பிறகு திருதூதர்கள் அனைவரும் ஒன்றாகக் கூடி, யூதாஸ் இஸ்காரியோத்துவினால் திருத்தூதர்கள் அணியில் ஏற்பட்ட வெற்றிடத்தை நிரப்ப முயன்றார்கள். அப்போது பேதுரு அவர்களுக்கு முன்பாக எழுந்து நின்று, பேசத் தொடங்கினார், “ஆகையால் ஆண்டவர் இயேசுவின் உயிர்த்தெழுதலுக்குச் சாட்சியாக விளங்க, அவர் நம்மிடையே செயல்பட்ட காலத்தில் நம்மோடு இருந்த ஒருவரைச் சேர்த்துக்கொள்ள நாம் கூடி வரவேண்டியது தேவையாயிற்று. யோவான் திருமுழுக்குக் கொடுத்துவந்த காலம் முதல் ஆண்டவர் இயேசு நம்மிடமிருந்து விண்ணேற்றமடைந்த நாள்வரை அவர் நம்மோடு இருந்திருக்கவேண்டும்” (திப 1:21-26)
இங்கே பேதுரு பனிரெண்டாவது திருத்தூதராக தேர்தெடுக்கப்படவேண்டியவர் எத்தகைய தகுதிகளைப் பெற்றிருக்கவேண்டும் என விளக்கிச் சொல்கிறார். ஒன்று அவர் இயேசுவின் திருமுழுக்கிலிருந்து, அவர் விண்ணேற்றம் அடைந்தது வரை உடன் இருந்திருக்கவேண்டும், இரண்டாவது அவர் இயேசுவின் உயிர்ப்பை கண்ணால் கண்டிருக்கவேண்டும். இத்தகைய தகுதிகளைக் கொண்ட இருவரை சீடர்களை தேர்ந்தெடுக்கிறார்கள். ஒருவர் யோசேப்பு எனப்படும் பர்சபா. இன்னொருவர் மத்தியாஸ். பின்பு சீடர்கள் அனைவரும் ஒருமனதாக இறைவனிடம் வேண்டிவிட்டு, இருவருடைய பெயரையும் சீட்டுக் குலுக்கிப் போடுகிறார்கள். சீட்டு மத்தியாசின் பெயருக்கே விழுகிறது. இவ்வாறு மத்தியாஸ் திருதூதர்கள் அணியில் இடம்பெறுகிறார்.
மத்தியாசைக் குறித்த செய்திகள் விவிலியத்திலும் சரி, திருச்சபை வரலாற்றிலும் சரி அவ்வளவாக காணக்கிடைக்கவில்லை. அலெக்ஸ்சாண்ட்ரியா நகரைச் சேர்ந்த தூய கிளெமென்ட், “மத்தியாஸ் ஆண்டவர் இயேசு பணித்தளத்திற்கு அனுப்பிய எழுபத்தி இரண்டு சீடர்களில் ஒருவர் எனவும், அவர் உடல் ஒருத்தல்களை அதிகமாகச் செய்வார்” எனக் குறிப்பிடுவார்.
இவருடைய நற்செய்தி அறிவிப்புப் பணியைக் குறித்தும் சரியான செய்தி இல்லை. ஒருசிலர் இவர் கப்பதோசியாவிற்கு சென்று நற்செய்தி அறிவித்ததாகவும், அங்கே உள்ள கோல்சிஸ் என்ற இடத்தில் கொல்லப்பட்டதாகும் சொல்வர். இன்னும் ஒருசிலர் யூதேயாவிலும் அதன் சுற்றுப்புறம் எங்கிலும் நற்செய்தி அறிவித்தார் என்றும் சொல்வர். எப்படி இருந்தாலும் அவர் ஆண்டவர் இயேசுவுக்காக தன்னுடைய உயிரைத் துறந்தார் என்பது உண்மை. மத்தியாஸ் தையல்காரர்கள், குடிப்பழக்கத்திலிருந்து மனம்மாறியவர்கள், தச்சு வேலை செய்பவர்கள் ஆகியோருக்குப் பாதுகாவலாராக இருக்கின்றார்.
கற்றுக்கொள்ளவேண்டிய பாடம்.
திருத்தூதரான தூய மத்தியாசின் விழாவைக் கொண்டாடும் இந்த நல்ல நாளில் அவருடைய வாழ்க்கை வரலாற்றிலிருந்து என்ன பாடத்தைக் கற்றுக்கொள்ளலாம் என சிந்தித்துப் பார்த்து நிறைவுசெய்வோம்.
இக்கட்டான வேளைகளில் இறையுதவியை நாடவேண்டும்.
பழைய பக்திப் பாடலான ‘நீயே எமது ஒளி’ என்பதில் வரக்கூடிய வரிகள் ‘நான்கு திசையும் பாதைகள், சந்திக்கின்ற வேலைகள், நன்மை என்ன தீமை என்ன அறியாத கோலங்கள்’. வாழ்க்கையில் பல நேரங்களில் நாம் எதைச் செய்யவேண்டும், எந்த வழியைத் தேர்ந்துகொள்ளவேண்டும் என்ற குழம்பம் வரலாம். அத்தகைய தருணங்களில் நாம் நம்முடைய மனத்தில் என்ன தோன்றுகிறதோ அதைச் செய்வோம் என நினைத்துக்கொண்டு தவறான வழியைத் தேர்ந்துகொள்கிறோம். ஆனால் இன்றைய விழா நமக்கு உணர்த்தும் செய்தி இக்கட்டான வேளைகளில் இறையுதவியை நாடவேண்டும் என்பதாகும்.
பனிரெண்டாவது திருத்தூதரைத் தேர்ந்தெடுக்கும் குழப்பம் ஏற்பட்டபோது சீடர்கள் ஒருமனதாக இறைவனிடம் வேண்டிவிட்டு சீட்டுக் குலுக்கிப் போடுகிறார்கள். இறைவன் அவர்களுக்கு சரியானவரை தேர்ந்தெடுத்துத் தருகின்றார். ஆகவே, நம்முடைய வாழ்க்கையில் நாம் இக்கட்டான, முடிவெடுக்கவேண்டிய குழப்பமான சூழலில் மாட்டிக்கொள்ளும்போது இறையுதவியை நாடுவது மிகவும் சிறப்பாகும்.
ஆண்டவர் இயேசுவுக்காக எதையும் செய்யத் துணிதல்.
தூய மத்தியாஸ் ஆண்டவர் இயேசுவுக்காக எதையும் செய்யத் துணிந்தார், ஏன் தன்னுடைய உயிரையும் இழக்கத் துணிந்தார் என்று சொன்னால் அது மிகையாது. அவர் ஆண்டவர் இயேசுவுக்காக தன்னுடைய உயிரையும் இழக்கத் துணிந்தார். அவருடைய விழாவைக் கொண்டாடும் நாம் அவரைப் போன்று ஆண்டவர் இயேசுவுக்காக எதையும் செய்யத் தயாராக இருக்கின்றோமா? என சிந்தித்துப் பார்க்கவேண்டும்.
ஒரு பழைய உரோமை நாணயத்தில் காளைமாடு ஒன்று பீடத்தையும், ஏர்தனையும் (Plow) பார்ப்பது போன்று இருக்கின்றது. அதற்குக் கீழே “Ready for Either” என்ற வசனம் பொறிக்கப்பட்டிருக்கிறது. இவ்வசனம் உணர்த்தும் செய்தி இதுதான்: நாம் இயேசுவுக்காக பலியாகவும், சுமைகளை தாங்குவதற்கும் தயாராக இருக்கவேண்டும். நாம் இயேசுவுக்காக எதற்கும் தயாராக இருக்கின்றோமா? என சிந்தித்துப் பாப்போம். தூய மத்தியாஸ் அப்படி எதற்கு தயாராக இருந்தார். நாமும் எதற்கும் தயாராக இருப்போம்.
ஆகவே, தூய மத்தியாசின் விழாவைக் கொண்டாடும் இந்த நல்ல நாளில் அவரைப் ஒன்று இயேசுவைப் பற்றிய நற்செய்தி எல்லாருக்கும் அறிவிப்போம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.
Source: New feed