
முதியோர், படிப்பறிவற்றோருக்கு, தரமான அடிப்படை நலவாழ்வு வசதிகள் வழங்கப்படவேண்டும் என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மருந்தகங்கள் கூட்டமைப்பினரிடம், நவம்பர் 14, இத்திங்களன்று கேட்டுக்கொண்டுள்ளார்.
“Apoteca Natura” என்ற இத்தாலிய மருந்தகங்கள் கூட்டமைப்பின் ஏறத்தாழ 400 பேரை, வத்திக்கானின் கிளமெந்தினா அறையில் இத்திங்களன்று சந்தித்து உரையாற்றிய திருத்தந்தை, அக்கறை கலாச்சாரத்தின் உதவிகொண்டு, புறக்கணிப்பு கலாச்சாரத்திற்கு எதிராய்ச் செல்படுமாறு கேட்டுக்கொண்டார்.
மக்கள் மற்றும், படைப்பைப் பாதுகாப்பதற்கிடையே நல்லிணக்கத்தை ஊக்குவிக்கும் அக்கறை கலாச்சாரம் நடைமுறைப்படுத்தப்படவேண்டும் என்று அழைப்புவிடுத்த திருத்தந்தை, மனிதருக்கும், படைப்புக்கும் இடையே புதியதொரு நல்லிணக்கத்தைக் மீண்டும் கண்டுணரவேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது என்றும் கூறியுள்ளார்.
இயற்கை மருந்துகளைக்கொண்டு ஒருங்கிணைந்த நலவாழ்வு பராமரிப்பை ஊக்குவிக்கும் மருந்துகளை விற்பனைசெய்வோரின் முயற்சிகள், தென் அமெரிக்காவில் அமேசான் பூர்வீக இன மக்களை நினைவுபடுத்துகின்றன என்று உரைத்துள்ள திருத்தந்தை, பூர்வீக இன மக்களின் கலாச்சாரங்கள், படைப்பு, மற்றும், சுற்றுச்சூழலோடு எப்போதும் நன்றாக வாழ்கின்ற ஒரு மனநிலையை கொண்டிருக்கின்றன என்றும், அவர்களின் வாழ்வு, மனிதர் மற்றும், அவர்களின் குடும்பங்கள், படைப்போடு நல்லிணக்கத்தில் வாழ்வதாக அமைந்துள்ளது என்றும் கூறியுள்ளார்.
ஒருங்கிணைந்த சூழலியல்
மருந்துகளை விற்பனைசெய்யும் இத்தாலிய அமைப்பினரின் ஒருங்கிணைந்த சூழலியல் பணிகள், இக்காலத்திற்கேற்றவை எனவும், தேசிய நலவாழ்வு அமைப்புகள், அந்தந்தப் பகுதி மக்களோடு தொடர்புகொண்டிருக்க உதவவேண்டும் எனவும் கேட்டுக்கொண்ட திருத்தந்தை, படைப்போடு நல்லிணக்கம் குறித்த சிந்தனைகளையும் எடுத்துரைத்தார்.
Source: New feed