பொதுக்காலம் பதினேழாம் வாரம் திங்கட்கிழமை
எரேமியா 13: 1-11
“கடவுளோடு உள்ள உறவை முறித்த மக்கள்”
நிகழ்வு
மலையடிவாரத்தில் விவசாயி ஒருவர் இருந்தார். இவர் தன்னுடைய மனைவி மற்றும் மகனோடு மிகவும் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தார். இந்த விவசாயினுடைய மகன் பக்கத்து ஊரில் இருந்த ஓர் அரசு பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்புப் படித்து வந்தான். அவன் படிப்பில் கெட்டிக்காரன் என்று ஊரே மெச்சியது. அதைக் கேட்கும்பொழுதெல்லாம் விவசாயி தன்னுடைய மகனை நினைத்து பெருமிதம் அடைந்தார்.
அந்த ஆண்டு தேர்வு முடிவுகள் வெளிவந்தன. அதில் விவசாயினுடைய மகன்தான் பள்ளியில் முதல் மதிப்பெண் பெற்றிருந்தான். இதனால் விவசாயி தன்னுடைய மகன் பக்கத்தில் படிப்பதை விடவும், பட்டணத்திற்குச் சென்று படித்தால் எதிர்காலத்தில் நல்ல நிலைக்கு வருவான் என்று நினைத்து, தன்னிடம் இருந்த கொஞ்ச நிலத்தையும் விற்று, அதைக்கொண்டு அவனைப் பட்டிணத்தில் இருந்த ஒரு பெரிய கல்லூரில் சேர்த்துப் படிக்க வைத்தார்.
தொலைபேசி வசதி அவ்வளவாக இல்லாத அந்தக் காலத்தில், மகனிடமிருந்து ஒவ்வொரு வாரமும் விவசாயிக்குக் கடிதம் வந்தது. இவர் அந்தக் கடிதத்தைப் படிக்கத் தெரிந்தவர்களிடம் கொடுத்து, படிக்கக் கேட்டு, உள்ளம் பூரிப்படைந்தார். மாதங்கள் மெல்ல உருண்டிய பொழுது, பட்டணத்தில் படித்துக்கொண்டிருந்த மகனிடமிருந்து கடிதம் வருவது குறைந்தது. ஒருகட்டத்தில் மகனிடமிருந்து விவசாயிக்குக் கடிதம் வருவது முற்றிலுமாக நின்றுபோனது. இதனால் தன்னுடைய மகனுக்கு என்ன ஆயிற்றோ என்ற பதற்றத்தில் இவர் அவனைப் பார்ப்பதற்காக, அவன் படித்து வந்த கல்லூரிக்குச் சென்றார்.
விவசாயி தன் மகன் படித்துவந்த கல்லூரிக்குச் சென்ற நேரம், காலை நேரம் என்பதால், கல்லூரி வாசலில் நின்றுகொண்டு, தன்னுடைய மகனுடைய வருகைக்காக் காத்துக் கொண்டிருந்தார். அந்தக் கல்லூரியில் படித்த மாணவர்கள் கூட்டம் கூட்டமாக வந்துகொண்டிருந்தார்கள். அந்தக் கூட்டத்திற்கு நடுவில் இரு நண்பர்களோடு சேர்ந்து மகன் வந்தான். இவர் அவனைப் பார்த்ததும் மட்டில்லா மகிழ்ச்சியோடு அவனை நோக்கி ஓடினார். தன்னுடைய தந்தையின் வருகையை, அதுவும் ஒரு சாதாரண உடையில் வந்து நின்றதைச் சற்றும் எதிர்பாராத மகன், “ஐயா! நீங்கள் யார்? உங்களுக்கு என்ன வேண்டும்?” என்று கேட்டுவிட்டு அப்படியே கடந்து சென்றுவிட்டான். அந்த ஏழை விவசாயிக்கு அங்கேயே செத்துவிடலாம் போல் இருந்தது. இருந்தாலும் தன்னுடைய மனத்தைக் கல்லாக்கிக் கொண்டு, வீட்டிக்கு வந்து, நடந்ததையெல்லாம் தன்னுடைய மனைவியிடம் சொல்லிச் சொல்லி அழுதார்.
இந்த நிகழ்வில் வரும் இந்தச் சாதாரண, அதே மிகுந்த அன்பு கொண்டிருந்த தந்தையை மகன் புறக்கணித்தது போல, இஸ்ரயேல் மக்களும் தங்கள்மீது பேரன்பு கொண்டிருந்த கடவுளை மறந்து, பிற தெய்வத்தை வழிபட்டார்கள். இதனால் அவர்களுக்கு என்ன நேரப்போகிறது என்பதை இறைவாக்கினர் எரேமியா நூலிலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய முதல் வாசகம் எடுத்துக்கூறுகின்றது. அதைக் குறித்து இப்பொழுது நாம் சிந்தித்துப் பார்ப்போம்.
இஸ்ரயேலைத் தனக்கு மிக நெருக்கமாக வைத்து அன்புசெய்த கடவுள்
எரேமியா இறைவாக்கினர் மக்களிடம் பேசுகின்றபொழுது உருவகம் வழியாகவே பேசுவார். அது அவருடைய தனிச்சிறப்பு. இன்றைய முதல் வாசகத்திலும் ஆண்டவர் சொன்னதற்கிணங்க, ஒரு நார்ப்பட்டானாலான கச்சையின் வழியாக ஒரு செய்தியைச் சொல்கின்றார். கச்சை என்பது ஒருவருடைய இடுப்பில், உடலோடு ஒட்டிக் கட்டப்படுகின்ற ஒரு துணி. ஆண்டவாகிய கடவுள் இஸ்ரயேல் மக்களைத் தன் சொந்த மக்களாக, தூய மக்களினமாகத் தேர்ந்தெடுத்து அன்புசெய்தார் (விப 19:6). கடவுள் தங்கள்மீது காட்டிய இந்தத் தனிப்பட்ட அன்பிற்கு இஸ்ரயேல் மக்கள் உண்மையுள்ளவர்களாக இருந்தார்களா? சிந்திப்போம்.
கடவுளின் அன்பைப் புறக்கணித்த இஸ்ரயேல் மக்கள்
கடவுள் சொன்னதற்கிணங்க, எரேமியா இறைவாக்கினர் நார்ப்பட்டாலான கச்சையைத் தன்னுடைய இடையில் கட்டுகின்றார். பின்னர் அவர் அந்தக் கச்சையைப் பேராத்துக்கு அருகில் இருந்த பாறையில் ஒளித்து வைத்து, மீண்டுமாக எடுத்துப் பார்க்கின்றார். அதுவோ ஒன்றுக்கும் உதவாததுபோல் இருக்கின்றது. ஒருகாலத்தில் உடலோடு ஒட்டி இருந்த கச்சை எப்படி ஒன்றுக்கும் உதவாமல், போனதோ, அதுபோன்று கடவுளுக்கு மிக நெருக்கமாக இருந்த இஸ்ரயேல் குறிப்பாக யூதாவில் இருந்த மக்கள், அவரை மறந்து பிற தெய்வத்தைத் தேடியதால், அதற்கான தண்டனையைப் பெறுவார்கள் என்று இறைவாக்கினர் எரேமியா வழியாக ஆண்டவர் கூறுகின்றார்.
நாம் நம்முடைய வாழ்க்கையைச் சற்று அலசிப் பார்ப்போம். பல நேரங்களில் நாமும்கூட கடவுளையும் அவரது அன்பையும் புறக்கணித்து, வேறு ஒன்றிற்கு முக்கியத்துவம் கொடுத்து வாழ்பவர்களாகவே இருக்கின்றோம் என்பது வேதனை கலந்த உண்மை. யோவான் நற்செய்தியில் இயேசு சொல்வது போல, கொடி திராட்சைச் செடியோடு இணைந்து இருந்தாலன்றித் தானாகக் கனிதர இயலாது. ஆகையால், நாம் எப்பொழுதும் ஆண்டவரோடு ஒன்றித்திருந்து, அவருடைய அன்பு மக்களாக வாழ முயற்சி செய்வோம். அதுவே சாலச் சிறந்த செயல்.
சிந்தனை
‘என்னை விட்டுப் பிரிந்து உங்களால் எதுவும் செய்ய இயலாது’ (யோவா 15: 5) என்பார் இயேசு. ஆகையால், நாம், நமக்கு எல்லாம் தெரியும்… எல்லாம் என்னிடத்தில் இருக்கின்றது, எனக்கு யாரும் தேவையில்லை என்ற ஆணவத்தில் ஆடாமல், இறைவனை விட்டுப் பிரிந்து நம்மால் ஒன்றும் செய்ய முடியாது என்ற உண்மையை உணர்ந்தவர்களாய், அவரோடு ஒன்றித்திருப்போம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.
Source: New feed