
அவர் வேண்டிக்கொண்டிருந்தபோது, அவரது முகத்தோற்றம் மாறியது.
+லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 9: 28b-36
அக்காலத்தில் இயேசு பேதுருவையும் யோவானையும் யாக்கோபையும் கூட்டிக் கொண்டு இறைவனிடம் வேண்டுவதற்காக ஒரு மலைமீது ஏறினார். அவர் வேண்டிக்கொண்டிருந்தபோது அவரது முகத்தோற்றம் மாறியது; அவருடைய ஆடையும் வெண்மையாய் மின்னியது. மோசே, எலியா என்னும் இருவர் அவரோடு பேசிக்கொண்டிருந்தனர். மாட்சியுடன் தோன்றிய அவர்கள் எருசலேமில் நிறைவேற இருந்த அவருடைய இறப்பைப்பற்றிப் பேசிக்கொண்டிருந்தார்கள். பேதுருவும் அவரோடு இருந்தவர்களும் தூக்கக் கலக்கமாய் இருந்தார்கள். அவர்கள் விழித்தபோது மாட்சியோடு இலங்கிய அவரையும் அவரோடு நின்ற இருவரையும் கண்டார்கள்.
அவ்விருவரும் அவரைவிட்டுப் பிரிந்து சென்றபோது, பேதுரு இயேசுவை நோக்கி, “ஆண்டவரே, நாம் இங்கேயே இருப்பது நல்லது. உமக்கு ஒன்றும் மோசேக்கு ஒன்றும் எலியாவுக்கு ஒன்றுமாக மூன்று கூடாரங்களை அமைப்போம்” என்று தாம் சொல்வது இன்னதென்று தெரியாமலே சொன்னார்.
இவற்றை அவர் சொல்லிக்கொண்டிருக்கும் போது ஒரு மேகம் வந்து அவர்கள்மேல் நிழலிட்டது. அம்மேகம் அவர்களைச் சூழ்ந்தபோது அவர்கள் அஞ்சினார்கள்.
அந்த மேகத்தினின்று, “இவரே என் மைந்தர்; நான் தேர்ந்து கொண்டவர் இவரே. இவருக்குச் செவிசாயுங்கள்” என்று ஒரு குரல் ஒலித்தது. அந்தக் குரல் கேட்டபொழுது இயேசு மட்டும் இருந்தார். தாங்கள் கண்டவற்றில் எதையும் அவர்கள் அந்நாள்களில் யாருக்கும் சொல்லாமல் அமைதி காத்தார்கள்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
———————————————–
பாடுகளின் வழியாக பரலோகம்
உயிரியல் ஆசிரியர் ஒருவர் தன்னுடைய மாணவர்களுக்கு கம்பளிப்புழு எப்படி வண்ணத்துப்பூச்சியாக மாறுகிறது என்பது குறித்து செய்முறைப் பாடம் நடத்திக்கொண்டிருந்தார். அவர் தன்னுடைய மாணவர்களிடம் கம்பளிப்புழு கூட்டைச் சுட்டிக்காட்டி, “இன்னும் ஒருசில மணித்துளிகளில் இந்தக் கூட்டில் இருக்கக்கூடிய கம்பளிப்புழு வண்ணத்துப்பூச்சியாக மாறும், அது எப்படி மாறுகிறது என்பதை கவனித்துக் கொண்டிருங்கள்” என்று சொல்லிவிட்டு வெளியே சென்றுவிட்டார். மாணவர்கள் யாவரும் கம்பளிப்புழு கூட்டையே பொறுமையாக பார்த்துக்கொண்டிருந்தார்கள். அப்போது கூட்டில் இருந்த கம்பளிப்புழு கஷ்டப்பட்டு வெளியே வந்துகொண்டிருந்தது. அதைப் பார்த்து இரக்கப்பட்ட மாணவன் ஒருவன், கூட்டிலிருந்து அதனை வெளியே எடுத்துவிட்டான். ஆனால் சிறுது நேரத்தில் வெளியே வந்த அந்த கம்பளிப்புழு இறந்துபோனது. மாணவன் என்ன செய்வதென்று தெரியாமல் திகைத்து நின்றான்.
இந்த நேரத்தில் வெளியே சென்ற ஆசிரியர் வகுப்புக்கு உள்ளே வந்தார். அவரிடத்தில் மாணவர்கள் அனைவரும் நடந்ததை எல்லாம் சொன்னார்கள். அதற்கு அவர், “அன்பு மாணவர்களே! கம்பளிப்புழு தன் கூட்டைவிட்டு வெளியேவரக் கஷ்டப்படுகிறது என்று நினைத்து நீங்கள் அதனை வெளியே எடுத்துவிட்டிருக்கிறீர்கள். ஆனால், உண்மையில் அந்த கம்பளிப்புழு கஷ்டப்பட்டு வெளியே வருகிறபோதுதான் அதனுடைய சிறகுகள் வலுபெறும். ஒரு முழு வண்ணத்துப்பூச்சியாக மாறும்” என்றார். தொடர்ந்து அவர் அவர்களிடம், “நமது வாழ்விலும் இப்படி கஷ்டங்களை, வலிகளை, துன்பங்களைத் தாங்கிக்கொண்டால்தான் உயர்ந்த லட்சியத்தை அடையமுடியும்” என்றார்.
நாம் சந்திக்கும் துன்பங்கள் நம்மைப் புடமிடுகின்றன; நமக்கு ஏற்படும் அவமானங்கள் நம்மைச் செதுக்குகின்றன. எப்படி உளியானது கல்லைச் செதுக்க அது சிற்பமாக மாறுகிறதோ அதுபோல” என்பார் எழுத்தாளர் வெ. இறையன்பு.
தவக்காலத்தின் இரண்டாம் ஞாயிற்றுக்கிழமையில் இருக்கும் நமக்கு இன்றைய நாள் வாசகங்கள் நமக்குத் தரும் சிந்தனை “பாடுகளின் வழியாகப் பரலோகம்” என்பதாகும். அதாவது சிலுவைச்சாவின் வழியேதான் நமக்கு மீட்பு உண்டு என்பதே இன்றைய வாசகங்களின் சாராம்சமாக இருக்கிறது. நற்செய்தி வாசகத்திலே ஆண்டவர் இயேசு உருமாற்றம் அடைகின்றார். அதில் மோசேயும், இறைவாக்கினர் எலியாவும் உடன் இருக்கிறார்கள். எருசலேமில் இயேசு மூப்பர்கள் மற்றும் மறைநூல் அறிஞர்கள் கையில் ஒப்புவிக்கப்பட்டு, கொலை செய்யப்படவும், மூன்றாம் நாளில் மாட்சியுடன் உயிர்த்தெழுவதன் முன் அடையாளமாக இந்த உருமாற்ற நிகழ்வு இருக்கிறது.
ஏற்கனவே சீடர்கள் இயேசு சிலுவைச்சாவைப் பற்றி மூன்றுமுறை முன்னறிவித்ததால் குழம்பிப்போய் இருந்தார்கள். இதனால் உருமாற்ற நிகழ்வு ஒருவிதத்தில் அவர்களையும் நம்பிக்கையில் உறுதிப்படுத்தியது என்றுகூடச் சொல்லலாம்.
இயேசுவின் சீடர்களைப் போன்றுதான் நாமும் பாடுகள், துன்பங்கள் இவையெல்லாம் எதற்கு என்று நினைக்கிறோம்; துன்பமில்லா இன்பமான வாழ்வு வாழ நினைக்கிறோம். ஆனால் ஆண்டவர் இயேசுவோ பாடுகளின் வழியேதான் நமக்கு மீட்பு என்பதை நற்செய்தியில் திரும்பத் திரும்ப வலியுறுத்துகிறார். யோவான் நற்செய்தி 12:24 ல் ஆண்டவர் இயேசு கூறுவார், “கோதுமை மணி மண்ணில் விழுந்து மடியாவிட்டால் அது அப்படியே இருக்கும். மடிந்தால்தான் மிகுந்த விளைச்சலை அளிக்கும்” என்று. ஆக கோதுமை மணியைப் போன்று நாமும் மடியவேண்டும், பாடுகளை அனுபவிக்கவேண்டும். அப்போதுதான் நாமும் இயேசுவின் மகிமையில் பங்குபெற முடியும்.
ஆனால் இன்றைக்கு நிலைமை முற்றிலும் வித்தியாசமாக இருக்கிறது. யாருக்கும் துன்பங்களை, சவால்களை எதிர்கொள்ள துணிவில்லை. எல்லாவற்றிலும் பாதுக்காப்பு தேடியே நமது வாழ்வானது ஓடிக்கொண்டிருக்கிறது. பாதுகாப்பான இடம், பாதுகாக்கப்பட்ட குடிநீர் என்று பழக்கப்பட்ட நமக்கு சாதாரண ஒரு பிரச்னையையும் எதிர்கொள்ள முடியவில்லை.
ஒருமுறை ஹங்கேரி நாட்டில் ஓர் ஆலயத்தில் பொது ஆராதனை நடைபெற்றுக் கொண்டிருந்தது. அப்போது திடிரென்று துப்பாக்கி ஏந்திய தீவிரவாதிகள் சிலர் ஆலயத்திற்குள் நுழைந்தார்கள். இதைப் பார்த்த மக்கள் அனைவரும் (குருவானவர் உட்பட) எங்கே தங்களுடைய உயிருக்கு ஆபத்து வந்துவிடுமோ என்று பதறியடித்துகொண்டு ஓடினார்கள்.
ஆனால் அந்த கூட்டத்தில் இருந்த ஒரே ஒரு தாத்தா, பாட்டி மட்டும் ஆலயத்தைவிட்டு நகராமல் அப்படியே இருந்தார்கள். “எல்லாரும் அலறியடித்துக் கொண்டு ஓடும்போது, நீங்கள் மட்டும் ஏன் இந்த ஆலயத்திலேயே இருக்கிறீர்கள்? உங்களுக்கு உயிர்மேல் பயமில்லையா? என்று அந்த முகமூடி அணிந்த தீவிரவாதிகள் அவர்களிடம் கேட்டார்கள். அதற்கு அவர்கள், “எங்கள் உயிரைப் பற்றி எங்களுக்குக் கவலையில்லை. நாங்கள் செத்தாலும் இந்த ஆலயத்திலே சாகிறோம்” என்றார்கள். இதைக்கேட்டு வியந்த அந்த தீவிரவாதிகள் அவர்களிடம், “நாங்கள் தீவிரவாதிகள் அல்ல, மாறாக யாராரெல்லாம் கிறிஸ்துவுக்காக எதையும் இழக்கத் துணிந்தவர்கள் என்பதைச் சோதித்துப் பார்க்க வந்த இயேசுவின் உண்மையான ஊழியர்கள்” என்றார்கள்.
இயேசுவுக்காக எதையும், ஏன் தங்களுடைய உயிரையும் இழக்கத் துணியும் இயேசுவின் உண்மையான சீடர்கள் குறைந்து போய்விட்டார்கள் என்பதை இந்த நிகழ்வானது நமக்கு எடுத்துக்காட்டுகிறது.
இந்த பின்னணியில்தான் நாம் இயேசுவின் உருமாற்றத்தையும், அது உணர்த்தும் ‘பாடுகளின் வழியே மீட்பு உண்டு’ என்று உண்மையையும் புரிந்துகொள்ள வேண்டும். இயேசு சாவைத் துணிவுடன் ஏற்றுக்கொண்டார். தன்னைப் பின்தொடர்ந்து வரும் சீடர்களும் சிலுவையை தூக்கிக்கொண்டு வரவேண்டும் என்கிறார்.
பிலிப்பியருக்கு எழுத்தப்பட்ட திருமுகத்திலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய இரண்டாம் வாசகத்தில் பவுலடியார் கூறுவார், “கிறிஸ்துவின் சிலுவைக்குப் பகைவர்களாய் நடப்போர் பலர் உள்ளனர்” என்று. ஆம், துன்பமில்லா, இன்பமான வாழ்வு வாழ நினைக்கும் ஒவ்வொருவரும்; பிறர்நலத்தை நாடாமல், தன்னலச் சேற்றில் மூழ்கிக் கிடக்கும் ஒவ்வொருவரும்; இந்த மண்ணுலகு சார்ந்தவை பற்றியே எண்ணுபவர்கள் யாவருமே இயேசுவின் சிலுவைக்கு பகைவர்கள்தான். ஏனெனில் சிலுவை மண்ணுலகு சார்ந்தவற்றை அல்ல விண்ணுலகு சார்ந்த காரியங்களையே நமக்கு நினைவூட்டுகிறது.
ஆகவே இயேசுவின் சீடர்களாக இருக்கும் நாம் ஒவ்வொருவரும் சிலுவை, பாடுகள், துன்பம் இவையெல்லாவற்றையும் ஒதுக்கித்தள்ளாமல், அவற்றைத் துணிவுடன் ஏற்றுக்கொண்டு, இயேசுவின் வழியில் நடக்க முயலுவோம்.
அடுத்ததாக நாம் இயேசுவின் பாடுகளின் வழியில் நடப்பதோடு மட்டுமல்லாமல், அவரோடு நல்லுறவு ஏற்படுத்திக்கொள்ள முன்வரவேண்டும். இரண்டாம் வாசகத்தில் பவுலடியார் கூறுகிறார், “ஆண்டவரோடு உள்ள உறவில் நிலைத்திருக்கள்” என்று. இந்த தவக்காலத்திலே ஆண்டவருக்கும், நமக்கும் உள்ள உறவில் நிலைத்திருப்பது மிகவும் சாலச் சிறந்த ஒன்றாகும். ஏனென்றால் நமது வாழ்க்கை வேலை, படிப்பு, உழைப்பு என்று சுழன்றுகொண்டிருக்கிறது. இதனால் கடவுளோடு உள்ள உறவில் தொய்வு ஏற்பட்டு, நமது வாழ்வே எந்திரத்தனமானதாக மாறிப்போய்விடுகிறது. இந்த சூழ்நிலையில்தான் நாம் இறைவனோடு உள்ள உறவில் வளர்வது மிகவும் தேவையானதாக இருக்கிறது.
சில ஆண்டுகளுக்கு முன்பாக ஒருவன் பொதுத்தொலைபேசி நிலையத்திற்குச் சென்று, வெளியூரில் இருக்கும் தன்னுடைய நெருங்கிய உறவினருக்கு தொலைபேசி வழியாகப் பேசினான். ஆனால் மறுமுனையிலிருந்து சத்தம் கேட்காததால் கொஞ்சம் சத்தமாகப் பேசினான். அப்போதும் அவனுக்கு மறுமுனையில் இருப்பவர் பேசும் சத்தம் கேட்கவில்லை. இதனால் அவன் இன்னும் அதிக சத்தமாகப் பேசினான்.
அதற்குள் பொதுத் தொலைபேசி நிலையத்தைச் சுற்றி பெருங்கூட்டமே கூடிவிட்டது. அவன் எதற்கு இவ்வளவு மக்கள் கூடியிருக்கிறார்கள் என்று புரியாமல் விழித்தான். அதன் பின்னர்தான் உண்மையை உணர்ந்தான் தான் தொலைபேசியை மாற்றி வைத்துப் பேசிக்கொண்டிருக்கிறோம் என்று.
மனிதர்களோடு உள்ள தொடர்பு சரியில்லாதபோதே மிகப்பெரிய குழப்பம் ஏற்படுகிறது என்று சொன்னால், கடவுளுக்கும், மனிதருக்கும் இடையே உள்ள உறவு சரியில்லாதபோது அது மிகப்பெரிய குழப்பத்திற்கும், ஆபத்துக்கும்தான் நம்மை இட்டுச் செல்லும். அதனால்தான் பவுலடியார், “ஆண்டவரோடு உள்ள உறவில் நிலைத்திருங்கள்” என்கிறார்.
இப்படி ஆண்டவரோடு உள்ள உறவில் நிலைத்திருந்ததற்கு நமக்கு மிகப்பெரிய உதாரணமாக இருப்பவர் முதல் வாசகத்தில் நாம் படிக்கக்கேட்கும் நமது முதுபெரும் தந்தை ஆபிரகாம். அவர் கடவுளின் வார்த்தைக்கு கீழ்படிந்து நடந்தார்; அவர்மீது ஆழமான நம்பிக்கை கொண்டு வாழ்ந்தார். அதனால்தான் கடவுள் ஆபிரகாமின் நம்பிக்கையைப் பார்த்து, “உன் மரபை வானத்து விண்மீன்களைப் போலவும், கடற்கரை மணலைப் போலவும் பெருகச் செய்வேன்” என்கிறார்.
எனவே இந்த தவக்காலத்தில் ஆபிரகாம் எப்படி ஆண்டவரோடு உள்ள உறவில் நிலைத்திருந்தாரோ அதுபோன்று நாமும் நமது நம்பிக்கையால், கீழ்படிதலுள்ள வாழ்வால் நல்லுறவில் நிலைத்திருப்போம். அத்தோடு இயேசுவைப் போன்று நமது வாழ்வில் வரும் துன்பங்களை, பாடுகளை துணிவுடன் ஏற்றுக்கொள்வோம். அதன் வழியாக இறையருளை நிறைவாய் பெறுவோம்.
“இதோ என் எதிரிலுள்ள கம்பத்தில் என்னைத் தூக்கிலிட்டாலும் சரி, துப்பாக்கியால் என்னைச் சுட்டாலும் சரி, நான் என் கொள்கைகளை எவருக்கும் விட்டுக்கொடுக்க மாட்டேன் – புரட்சியாளர் சேகுவேரா.
Source: New feed