
மனம் மாறி வாழ்வோம், மாபரன் அருள் பெறுவோம்
மின்சாரம் கண்டுபிடிக்கப்படாத அந்த காலத்தில் மக்கள் மின்விசிறிக்குப் பதிலாக சாதாரண விசிறியைத்தான் பயன்படுத்தினார்கள். ஒரு நாள் விசிறி விற்கக்கூடிய வியாபாரி வியாபாரத்திற்குப் புறப்பட்டான். அற்புதமான விசிறி, நூறு ஆண்டுகள் உழைக்கும் விசிறி, ஒரு விசிறியின் விலை நூறு ரூபாய் என்று தெருத் தெருவாக விற்கத் தொடங்கினான். அப்போது தன்னுடைய அரண்மனையிலிருந்து பார்த்துக்கொண்டிருந்த அரசன் அந்த வியாபாரிடம் விசிறியைப் பற்றித் தெரிந்துகொண்டு 5 விசிறிகளை வாங்கி வைத்துக்கொண்டான்.
அரசன் விசிறியை வாங்கிய புதிதில் ‘விசிறியை வீசினால் நன்றாகக் காற்று வருகிறது’ என்று ரொம்ப சந்தோசப்பட்டான். ஆனால் கொஞ்ச நாட்களிலேயே விசிறி கிழிய ஆரம்பித்துவிட்டது. அரசனுக்கு சரியான கோபம் வியாபாரி தன்னை ஏமாற்றிவிட்டானே என்று. எனவே வியாபாரியை அழைத்து அவனுக்கு தூக்குத்தண்டனை விதித்தான். வியாபாரி இழுத்துவரப்பட்டான். அப்போது வியாபாரி அரசனிடம், “அரசே நீங்கள் என்னைத் தூக்கில் போடப்போகிறீர்கள், அதை நினைத்து எனக்குக் கவலை இல்லை. ஆனால், அதற்கு முன்னால், விசிறியை எப்படி பயன்படுத்தினீர்கள் என்று தெரிந்து கொள்ள ஆசை என்றான்”. அரசன் தான் பயன்படுத்திய விதத்தைச் சொன்னார். உடனே அவன், “அரசே, விசிறியை இப்படி வீசக்கூடாது, விசிறியை அப்படியே வைத்துக்கொண்டு நாம்தான் தலையை அங்கும் இங்கும் ஆட்டவேண்டும்” என்றான்.
மனிதர்கள் தன்னுடைய தவறை ஏற்றுக்கொள்ளாமல், அதனை எப்படியெல்லாம் நியாயப்படுத்துகிறார்கள் என்பதற்கு மேலே சொன்ன கதை ஓர் உதாரணம்.
நமது முன்னாள் திருத்தந்தை இரண்டாம் யோவான் பவுல் சொல்வதுபோன்று இன்றைக்கு மனிதன் பாவம், குற்றம் என்ற உணர்வே இல்லாமல் பாவம் செய்துகொண்டிருக்கிறான். இத்தகைய சூழலில் நாம் நம்முடைய குற்றத்தை ஏற்றுக்கொண்டு மனம் மாறி வாழ இன்றைய இறைவார்த்தை நம்மை அழைக்கிறது.
இன்றைய முதல் வாசகத்தில் யோனா, நினிவே நகர மக்களைப் பார்த்து மனம் மாற அழைப்பு விடுக்கின்றார். நற்செய்தியில் இயேசு, “காலம் நிறைவேறிவிட்டது, இறையாட்சி நெருங்கி வந்துவிட்டது, மனம் மாறி நற்செய்தியை நம்புங்கள் என்கிறார்.
சிலர் கேட்கலாம் ‘நான் என்ன பெரிய தவறு செய்துவிட்டேன் மனம்திருப்ப”. இறைவார்த்தை சொல்கிறது, “தன்னில் பாவம் இல்லை என்று சொல்பவன் பொய்யன்” (1யோவா 1;), அதைப்போல “நேர்மையாளர் ஒரு நாளில் ஏழுமுறை தவறு செய்கிறார்” (நீதி 24; 16) என்றும் கூறுகிறது. எனவே இதன் அடிப்படையில் பார்த்தல் நாம் குற்றம் இழைப்பவர்களே. ஆதலால் நாம் நம்முடைய தவறான வழியிலிருந்து மனம் மாறவேண்டும்.
ஒவ்வொரு நாளும் நாம் நம்முடைய சிந்தனை, சொல், செயல் இவற்றாலும் தவறு செய்கிறோம். அதனால் இதிலிருந்து நாம் மாறவேண்டும். திருச்சபை ஏழு தலையாய பாவங்களைப் பட்டியல் இடுகிறது. அவையாவன: ஆணவம், கோவம், பேராசை, பொறாமை, சோம்பல், கட்டுப்பாடற்ற பாலுணர்வு, பெருந்தீனி. எனவே இத்தகைய பாவங்களிலிருந்தும் நாம் மாறவேண்டும்.
ஒருமுறை காடு வழியாக ஒரு சாது நடந்து சென்றுகொண்டிருந்தார். அப்போது அங்கே வேலை பார்த்துக்கொண்டிருந்த ஒரு சிலர் அந்த சாதுவிடம், “இந்தக் காட்டில் மனிதர்களைப் பிடித்துத் தின்னும் அரக்கன் ஒருவன் இருக்கிறான், அதனால், நீங்கள் இந்தப் பக்கம் போகாதீர்கள்” என்று எச்சரித்தார்கள். அதற்கு சாது, “சரி நான் பார்த்துக்கொள்கிறேன் என்று தொடர்ந்து நடந்து சென்றார். அப்போது அந்த அரக்கன் சாதுவுக்கு எதிரே வந்து நின்றான். கோபத்தோடு சாதுவை அடிக்க கையை ஓங்கினான். அப்போது சாது அவனிடம், “கொஞ்ச நேரம் பொறு, நான் உன்னிடம் ஒன்று சொல்லிக்கொள்ள ஆசைப்படுகிறேன், நான் அதைச் சொன்ன பிறகு நீ என்னை என்னவேண்டுமானாலும் செய்துகொள்ளலாம். என்று சொன்னார். அரக்கனும் அதற்குச் சரி என்று ஒப்புக்கொண்டான். சாது அருகிலிருந்த மரத்தின் கிளையை ஒடித்து, இந்த கிளையை ஒடித்திருக்கிறேன், இதை மீண்டும் மரத்தில் ஒட்ட வைக்க முடியுமா” என்று கேட்டார். அவன் முடியாது என்றான். அப்போது சாது, “உன்னால் மனிதர்களை அழிக்க மட்டும்தான் முடியும், ஆக்கமுடியாது” என்று சொன்னதும் அந்த அரக்கன் தன்னுடைய தவறை உணர்ந்து சாதுவின் காலில் விழுந்தான். அன்றிலிருந்து அவன் புதிய மனிதனாக வாழ்ந்தான். நாமும் இந்த மனிதனைப் போன்று மனம் மாறி நடக்க வேண்டும்.
நாம் மனம் மாறி நடந்தால் அது நமக்கு மட்டுமல்ல விண்ணகத்திலும் மகிழ்ச்சி (லூக்15: 7,10) எனவே இதுவே சரியான காலம் என்று நாம் நம்முடைய தவறுகளை ஏற்றுக்கொண்டு, மனம் வருந்தி, இறை வழியில் நடப்போம் எல்லா ஆசிரையும் பெறுவோம்.
Source: New feed