உலக மறைபரப்புப்பணி நாள் பற்றி, நற்செய்தி அறிவிப்புப்பணி பேராயத்தின் செயலர், பேராயர் Protase Rugambwa அவர்கள் தலைமையில், அக்டோபர் 16, இவ்வெள்ளியன்று செய்தியாளர் கூட்டத்தில் விளக்கப்பட்டது.
“இதோ நான் இருக்கிறேன், என்னை அனுப்பும்” என்ற தலைப்பில் இந்த உலக மறைபரப்புப்பணி நாள் சிறப்பிக்கப்படுகின்றது என்றும், இந்த தலைப்பே, திருஅவையின் உறுப்பினர்களாகிய நாம் அனைவரும், இன்றைய உலகில் நற்செய்தியை அறிவிக்கவேண்டிய நம் அழைப்பைச் சுட்டிக்காட்டுகின்றது என்றும், பேராயர் Rugambwa அவர்கள் கூறினார்.
கோவிட்-19 கொள்ளைநோய் விதிமுறைகளுக்கு உட்பட்டு, வருகிற ஞாயிறன்று இந்த உலக நாள் கொண்டாடப்படுகின்றது என்றும், இயேசுவால் திருஅவையிடம் ஒப்படைக்கப்பட்ட இந்த மறைப்பணி, ஒருபோதும் நிறுத்தப்படாது என்றும் கூறிய பேராயர் Rugambwa அவர்கள், இந்த பணியை முன்னெடுத்துச் செல்வதற்கு தூய ஆவியார் துணிவைத் தருகின்றார், எனவே அஞ்சாமல் மறைப்பணியாற்றவேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
மனித சமுதாயம் மற்றும், படைப்பைப் பாதுகாக்கும்பொருட்டு, குடும்பங்கள், பணித்தளங்கள், தொழிற்சாலைகள், பள்ளிகள், அரசியல், சுற்றுச்சூழல் போன்ற எல்லா நிலைகளையும், நம் மறைப்பணி தொடவேண்டும் மற்றும், மாற்றம் பெறச் செய்யவேண்டும் என்றும், பேராயர் Rugambwa அவர்கள் கூறினார்.
மேலும், பேராயர் Rugambwa அவர்கள் உரையாற்றியபின், பாப்பிறை மறைபரப்புப்பணி கழகங்களின் தலைவர் அருள்பணி Giampietro Dal Toso மற்றும், நம்பிக்கை பரப்பு பாப்பிறை பணிகள் அமைப்பின் (POPF) பொதுச் செயலரான அமலமரி தியாகிகள் சபையின் அருள்பணி Tadeusz J. Nowak ஆகிய இருவரும் இந்த செய்தியாளர் கூட்டத்தில் தங்களின் கருத்துக்களைப் பதிவுசெய்தனர்.
பாப்பிறை மறைபரப்புப்பணி கழகங்களின் பணிகளை விளக்கிய அருள்பணி Giampietro Dal Toso அவர்கள், தற்போதைய கொள்ளைநோய் காலத்தில், துன்புறும் திருஅவைகளுக்காக, திருத்தந்தையின் பெயரில் உருவாக்கப்பட்டுள்ள நிதியகத்தின் வழியாக, பல்வேறு நாடுகளின் 250 திட்டங்களுக்கு, ஏறத்தாழ 13 இலட்சம் டாலர் வழங்கப்பட்டுள்ளது என்று அறிவித்தார்.
இந்த நிதியகத்திற்கு, இஸ்பெயின், பிரான்ஸ், தென் கொரியா போன்ற திருஅவைகள் அதிகம் உதவியுள்ளன, அதேநேரம், ருவாண்டா, பங்களாதேஷ் போன்ற வறிய நாடுகளும் உதவியுள்ளன என்றும், அருள்பணி Dal Toso அவர்கள் அறிவித்தார்.