
நமது சமூகத்தை மாற்றியமைப்பதற்கும் மனித வர்த்தகம் என்ற கொடுஞ்செயலைத் தடுப்பதற்கும் பாதைகளைத் தேடுவதில் சோர்வடைய வேண்டாம் என்று கேட்டுக்கொண்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
பிப்ரவரி 8, இப்புதனன்று மனித வர்த்தகத்திற்கு எதிரான 9-வது அனைத்துலக இறைவேண்டல் மற்றும் விழிப்புணர்வு தினத்திற்கான காணொளிச் செய்தியில் இவ்வாறு கூறியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
மனித கடத்தலால் பாதிக்கப்படுவர்களின் பாதுகாவலியான புனித Josephine Margaret Bakhita- வை இன்று நாம் நினைவுகூருகிறோம் என்றும், மனித வர்த்தகத்திற்கு எதிரான அனைத்துலக இறைவேண்டல் மற்றும் விழிப்புணர்வு தினத்தை ‘மாண்புடன் பயணித்தல்’ என்ற கருப்பொருளில், இளைஞர்களை முக்கிய பங்களிப்பவர்களாக ஈடுபடுத்துவதில் நான் உங்களுடன் இணைகின்றேன் என்றும் கூறியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
மனித வர்த்தகம் மனித மாண்பை சிதைக்கிறது. சுரண்டல் மற்றும் அடிபணியவைத்தல் ஆகியவை மனித சுதந்திரத்தை ஒரு எல்லைக்கு உட்படுத்துகின்றன மற்றும் மக்களைப் பயன்படுத்துவதற்கும் நிராகரிப்பதற்குமான பொருள்களாக மாற்றுகின்றன என்றும் எடுத்துரைத்துள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அநீதி மற்றும் அக்கிரமத்தின் இலாபங்களை விரும்பும் அமைப்புகள் இலட்சக்கணக்கான மக்களைப் பாதிக்கப்படக்கூடிய சூழ்நிலைகளில் வாழக் கட்டாயப்படுத்துகின்றன என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.
Source: New feed