
திருமுழுக்கு அருளடையாளத்தைப் பெற்றுள்ள ஒவ்வொருவரும் புனிதராக வாழ அழைக்கப்பட்டுள்ளனர் என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், நவம்பர் 11, இவ்வெள்ளியன்று கூறியுள்ளார்.
புனிதர் என்பவர், வரலாற்றின் ஆண்டவரின் சுடர்மிகு பிரதிபலிப்பாகும். புனிதத்தின் பாதை எல்லாருக்கும் உரியது. அனைவருக்கும் அழைப்புவிடுக்கின்ற அப்பாதை, திருமுழுக்கோடு தொடங்குகிறது, அது தனித்துவமிக்கது, மற்றும், ஒவ்வொரு மனிதருக்காகவும் திரும்பத் திரும்பக் கூற முடியாதது என்ற சொற்கள், திருத்தந்தையின் டுவிட்டர் செய்தியில் வெளியாகியிருந்தன.
திருத்தந்தையின் சந்திப்புகள்
மேலும், ஆயர்கள் ஐந்தாண்டுக்கொருமுறை திருத்தந்தையைச் சந்திக்கும் “அத் லிமினா” சந்திப்பாக, நெதர்லாந்து ஆயர்களும், இயேசு சபை அருள்பணி ஜேம்ஸ் மார்ட்டின் அவர்களும், நவம்பர் 11, இவ்வெள்ளியன்று, திருப்பீடத்தில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களைச் சந்தித்துள்ளனர்.
திருத்தந்தை, ஜோர்டன் அரசர் சந்திப்பு
இன்னும், ஜோர்டனில் கத்தோலிக்கத் திருஅவை, தனது மறைப்பணியைச் சுதந்திரமாக ஆற்றலாம் என்று, ஜோர்டன் அரசர் இரண்டாம் அப்துல்லா அவர்கள், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களிடம், நவம்பர் 10, இவ்வியாழனன்று உறுதிகூறியுள்ளார்.
ஜோர்டன் அரசர் இரண்டாம் அப்துல்லா பின் அல்-ஹூசேன் அவர்களும், அரசி ரானியா அல்-அப்துல்லா அவர்களும் இவ்வியாழனன்று திருப்பீடத்தில் திருத்தந்தையைச் சந்தித்து உரையாடுகையில் இவ்வாறு, அரசர் உறுதி கூறினார் என்று, திருப்பீட செய்தித் தொடர்பகம் அறிவித்துள்ளது.
Source: New feed