அஞ்சாதிருங்கள்; அஞ்சுங்கள்
நிகழ்வு
1989 ஆம் ஆண்டு, ஏப்ரல் திங்கள் 12 ஆம் நாள் அமெரிக்காவைச் சார்ந்த ரே ப்ளான்கென்ஷிப் (Ray Blankenship) என்பவருக்கு அமெரிக்க அரசாங்கம் ‘Coast Guard’s Silver LIfesaving Medal’ என்ற மிக உயரிய விருதை வழங்கிச் சிறப்பித்தது. இதற்கு முக்கியக் காரணமாக இருந்த நிகழ்வு இதுதான்:
ரே ப்ளான்கென்ஷிப், ஆற்றங்கரையோரமாக இருந்த தன்னுடைய வீட்டில் இருந்து, சாளரத்தின் வழியாக எதிரே இருந்த ஆற்றையே உற்றப் பார்த்துக்கொண்டிருந்தார். அன்றைய நாளில் ஆற்றில் நீர்வரத்து மிக அதிகமாக இருந்தது. அப்பொழுதுதான் அந்த எதிர்பாராத நிகழ்வு நடைபெற்றது. ஆம், ஆற்று வெள்ளத்தில் சிறுமி ஒருத்தி வேகமாக இழுத்துக் கொள்ளப்பட்டு வந்தாள் அதைப் பார்த்ததும் ரே ப்ளான்கென்ஷிப்பிற்கு ஒன்றும் ஓடவில்லை. பிறகு மனத்தில் துணிவை வரவழைத்துக் கொண்டு, ஆற்றில் குதித்தார். ஆற்றில் வேகமாக இழுத்துச் செல்லப்பட்ட சிறுமியைக் காப்பாற்றுவது ரே ப்ளான்கென்ஷிப்பிற்கு மிகவும் சிரமமாக இருந்தது. இருந்தாலும், தன்னுடைய உயிரை ஒரு பொருட்டாக எண்ணாமல், அந்தச் சிறுமியைக் காப்பாற்றி, கரைக்குக் கொண்டு வந்தார். இதனால்தான் ரே ப்ளான்கென்ஷிப்பிற்கு அமெரிக்க அரசாங்கம் மிக உயரிய விருதை வழங்கிச் சிறப்பித்தது.
இதில் வியப்பூட்டும் உண்மை என்னவென்றால், ஆற்றில் இழுத்துச் செல்லப்பட்ட சிறுமியின் உயிரைக் காப்பாற்றிய ரே ப்ளான்கென்ஷிப்பிறகு நீச்சலே தெரியாது என்பதுதான். ஆம், தனக்கு நீச்சல் தெரியாதபோதும், ரே ப்ளான்கென்ஷிப் அதைப் பற்றிக் கவலைப்படாமல், அஞ்சாமல், ஆற்றில் குதித்து சிறுமியின் உயிரைக் காப்பாற்றினார். அதனாலேயே அவருக்கு உயரிய விருந்து வழங்கப்பட்டது. இயேசுவின் சீடராக இருக்கின்ற ஒவ்வொருவரும், யாருக்கும் அஞ்சாமல், இயேசுவுக்குச் சான்று பகர்ந்து வந்தால், ஆண்டவர் அதற்கேற்ற கைம்மாறு தருவார்! பொதுக்காலத்தின் பன்னிரண்டாம் ஞாயிறான இன்று நாம் வாசிக்கக்கேட்ட இறைவார்த்தை, அஞ்சாமல் ஆண்டவர் இயேசுவுக்குச் சான்று பகர்ந்து வாழவேண்டும் என்ற செய்தியைத் தருகின்றது. அது குறித்து இப்பொழுது நாம் சிந்திப்போம்.
மனிதர்களுக்கு அஞ்சாதிருங்கள்
இயேசு தன்னுடைய சீடர்களைப் பணித்தளங்களுக்கு அனுப்புகின்றார். அவ்வாறு அனுப்புகின்றபொழுது, அவர்களுக்கு என்ன மாதிரியான சவால்களும் ஆபத்துகளும் வரும்; அவற்றை அவர்கள் எவ்வாறு எதிர்கொள்ளவேண்டும் என்பதைப் பற்றிப் பேசுகின்றார். அதுதான் இன்றைய நற்செய்தி வாசகமாக இருக்கின்றது.
இன்றைய நற்செய்தியில் இயேசு தன்னுடைய சீடர்களுக்குச் சொல்லும் முதலாவது செய்தி, ‘உடலை மட்டுமே கொல்பவர்களுக்கு அஞ்சவேண்டாம்’ என்பதாகும். கடவுளின் வார்த்தையை எடுத்துரைக்கின்றபொழுது மனிதர்களிடமிருந்து எதிர்ப்புகள் வரலாம். ஏனெனில், அவர்கள் இவ்வுலகைச் சார்ந்தவர்கள் அல்லர்; அதனால் உலகம் அவர்களை வெறுக்கும், கொல்லவும் கொல்லவும் செய்யும் (யோவா 17: 14) அதனால்தான் இயேசு இவ்வுலகைச் சார்ந்தவர்களுக்கு அல்லது உடலை மட்டுமே கொல்பவர்களுக்கு அஞ்சவேண்டாம் என்கின்றார்.
இப்படி உடலை மட்டுமே கொல்பவர்களுக்கு அஞ்சாமல் ஆண்டவருக்குப் பணிசெய்தவர்கள், பணி செய்கின்றவர்கள் பலர் இருக்கின்றார்கள். இவர்களில் மிகவும் குறிப்பிடத்தகுந்தவர் புனித தெர்த்துலியன். இரண்டாம் நூற்றாண்டில் யாருக்கும் அஞ்சாமல், கடவுளுக்குப் பணிசெய்த இவர் சொல்லக்கூடிய வார்த்தைகள் மிகவும் கவனிக்கத்தக்கவை. “நீங்கள் எங்களைக் கொல்லலாம், துன்புறுத்தலாம், சித்திரவதை செய்யலாம். எந்தளவுக்கு நீங்கள் எங்களைத் துன்புறுத்துவீர்களோ, அந்தளவுக்கு நாங்கள் வளருவோம். ஏனெனில், மறைச்சாட்சிகளின் இரத்தம், திருஅவையின் வித்து. மறைச்சாட்சிகளின் ஒவ்வொரு துளி இரத்தத்திலிருந்தும் முப்பது மடங்காக, அறுபது, மடங்காக, நூறு மடங்காக நம்பிக்கையாளர்களை ஆண்டவர் பெருகச் செய்வார்.” ஆம், ஆண்டவர் நம்பிக்கையாளர்களைப் பெருகச் செய்துகொண்டே இருப்பார். நாம் செய்யவேண்டியதெல்லாம், உடலைக் கொல்பவர்களுக்கு அஞ்சாமல் அவருடைய பணிசெய்வதுதான்.
ஆண்டவருக்கு அஞ்சுங்கள்
ஆன்மாவைக் கொல்ல இயலாமல், உடலை மட்டுமே கொல்பவர்களுக்கு அஞ்சவேண்டாம் என்று குறிப்பிட்ட இயேசு, ஆன்மாவையும் உடலையும் நரகத்தில் அழிக்க வல்லவருக்கு அஞ்சுங்கள் என்கின்றார். இங்கு இயேசு கிறிஸ்து, ‘ஆண்டவருக்கு அஞ்சுகள்’ என்று சொல்வதன் பொருள் என்ன என்று சிந்தித்துப் பார்ப்பது நல்லது. ஆண்டவருக்கு அஞ்சுதல் என்றால், அவரிடம் நம்மை முழுவதும் ஒப்படைத்துவிட்டு, அவருடைய திருவுளத்திற்குப் பணிந்து வாழ்தல் ஆகும். இன்றைய முதல் வாசகத்தில், கடவுளின் வார்த்தையை எடுத்துரைத்த இறைவாக்கினர் எரேமியாவிற்கு பலரிடமிருந்து எதிர்ப்புகள் வருகின்றன. அப்படிப்பட்ட சூழலில் அவர் யாருக்கும் அஞ்சாமல், “ஆண்டவர் வலிமை வாய்ந்த வீரரைப் போல் என்னோடு இருக்கின்றார்; அவர் வறியோரின் உயிரைத் தீயோரின் பிடியினின்று விடுவிக்கின்றார்” என்று சொல்லி துணிவோடு தன்னுடைய பணியைச் செய்கின்றார்.
ஆம், நாம் ஆண்டவருக்கு அஞ்சி வாழ்கின்றோம் எனில், அவருடைய பாதுகாப்பிலும் பராமரிப்பிலும் நம்பிக்கை கொண்டு வாழ்க்கையை அணுகுகின்றோம் என்பதே பொருள். ஏனெனில், கடவுள் சாதாரண சிட்டுக் குருவிகளைக்கூட தரையில் விழாமல் பார்த்துக் கொள்கின்றார். அப்படிப்பட்டவர் தனக்கு அஞ்சி வாழ்வோரை எப்படி எல்லாம் பாதுகாப்பார் என்பதை நாம் சிந்தித்துப் பார்த்துக் கொள்ளலாம். ஆகையால், நாம் மனிதர்களுக்கு அல்ல, ஆண்டவருக்கு அஞ்சி வாழ்பவர்களாய் இருப்போம்.
Source: New feed