பொதுக்காலம் பத்தொன்பதாம் ஞாயிறு (ஆகஸ்ட் 11)

I சாலமோனின் ஞானம் 18: 6-9
II எபிரேயர் 11: 1-2, 8-12
III லூக்கா 12: 32 – 48

“சிறு மந்தையாகிய நீங்கள் அஞ்சவேண்டாம்”

நிகழ்வு

தூர்ஸ் நகரத் தூய மார்டின் இளைஞனாக இருந்தபோது, ஒருநாள் ஆல்ப்ஸ் மலையடிவாரம் வழியாகத் தனியாக நடந்துசென்றுகொண்ருந்தார். வழக்கமாக அந்த வழியாக யாரும் நடந்துசெல்வது கிடையாது. வழிப்பறிக் கொள்ளையர்கட்கு அஞ்சி, வேறொரு வழியாகச் சென்றுவிடுவர். ஆனால், மார்டினோ யார்க்கும் அஞ்சாமல் அவ்வழியாக நடந்துசென்றுகொண்டிருந்தார்.

போகிற வழியில் ஒரு திருப்பம் வந்தது. அந்தத் திருப்பத்தில் அவர் திரும்பியபோது, புதரில் மறைந்திருந்த வழிப்பறிக் கொள்ளையர்கள் அவரைச் சுற்றி வளைத்துக்கொண்டார்கள். பின்னர் அந்தக் கூட்டத்தில் இருந்த ஒரு திருடன் மார்டினின் கழுத்தில் கத்தியை வைத்து, அவரைக் கொல்வதற்கு முயன்றான். அவரோ, தன்னுடைய கழுத்தில் கத்தி இருக்கின்றதே… இன்னும் சிறிதுநேரத்தில் தன்னுடைய உயிர் போகப் போகிறதே… என்பது பற்றியெல்லாம் கவலைப்படாமல், மிகவும் அமைதியாகவும் அதே நேரத்தில் துணிவோடும் இருந்தார்.

இதைப் பார்த்த அந்த வழிப்பறிக் கூட்டத்தில் இருந்த இன்னொரு திருடன் மார்டினிடம் வந்து, “உன்னுடைய கழுத்தில் கத்தி இருக்கின்றது… இன்னும் சிறிதுநேரத்தில் உன்னுடைய உயிர் உன்னைவிட்டுப் போகப்போகின்றது… அப்படியிருக்கையில் எப்படி உன்னால் இவ்வளவு அமைதியாகவும் அச்சமின்றியும் இருக்க முடிகின்றது” என்றான். மார்டின் தன்னுடைய கண்களில் ஒளிபொங்க அவனிடம் சொன்னார்: “கடவுளின் மகனாகிய என்னை அவர், எல்லாச் சூழ்நிலையிலும் என்னோடு இருந்து பாதுகாத்து வருகின்றார். அப்படியிருக்கும்போது நான் எதற்கு யார்க்கும் அஞ்சவேண்டும்.” மார்டின் இவ்வளவு துணிவோடு பேசியதைப் பார்த்துவிட்டு அந்த வழிப்பறிக் கொள்ளையர்கள் அவரை ஒன்றும் செய்யாமல் விட்டுவிட்டனர்.
நாம் அனைவரும் கடவுளின் மக்களாக இருக்கின்றபோது, அவர் ஒரு தந்தையைப் போன்று நம்மோடு இருக்கின்றபோது, நாம் எதற்கு அஞ்சவேண்டும் என்ற உண்மையை எடுத்துச் சொல்லும் இந்த நிகழ்வு நமது சிந்தனைக்குரியது. பொதுக்காலத்தின் பத்தொன்பதாம் ஞாயிற்றுக்கிழமையில் இருக்கும் நமக்கு, இன்றைய நாள் நற்செய்தி வாசகம் ‘சிறு மந்தையாகிய நாம் யார்க்கும் அஞ்சவேண்டாம்’ என்ற சிந்தனையைத் தருகின்றது. நாம் அதைக் குறித்து சிந்தித்துப் பார்த்து நிறைவுசெய்வோம்.

‘சிறுமந்தை’ எனப்படுவோர் யார்?

லூக்கா எழுதிய நற்செய்தி நூலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய நற்செய்தி வாசகத்தில், இயேசு, “சிறுமந்தையாகிய நீங்கள் அஞ்சவேண்டாம்” என்று கூறுகின்றார். இயேசு இங்கு குறிப்பிடுகின்ற ‘சிறுமந்தை’ யார் யாரையெல்லாம் உள்ளடக்கி இருக்கின்றது என்று சிந்தித்துப் பார்ப்பது மிகவும் இன்றியமையாதது.

இயேசு செய்த அருமடையாளங்களையும் வல்ல செயல்களையும் பார்த்துவிட்டு, ஆயிரக்கணக்கான மக்கள் அவரைப் பின்தொடர்ந்து வந்தார்கள். அவர்களெல்லாம் இயேசு சொல்கின்ற ‘சிறுமந்தை’யில் அடங்கிவிடுவார்களா? என்றால் நிச்சயமாக இல்லை என்றுதான் சொல்லவேண்டும். ஏனெனில், இயேசுவைப் பின்பற்றிய பலர், வயிறார உணவு கிடைக்கும் (யோவா 6: 26) என்றும் தங்களுடைய உடல் உள்ளத் தேவைகள் நிறைவுபெறும் (லூக் 9: 11) என்றும் அவரைப் பின்தொடர்ந்தார்கள், தேடினார்கள். இவர்களெல்லாம் இயேசு சொல்கின்ற ‘சிறுமந்தையில்’ அடங்குவதில்லை.

அப்படியானால் யார் இயேசு சொல்கின்ற சிறுமந்தையில் அடங்குவார்கள் எனில், அவருடைய குரலுக்குச் செவிமடுக்கின்ற அவருடைய உண்மையான சீடர்கள் அல்லது ஆடுகள்… (யோவா 10: 27), அனைத்திற்கும் மேலாக அவருடைய ஆட்சியையும் அவர்க்கு ஏற்புடையவற்றையும் நாடுகின்றவர்கள் (மத் 6: 33). இவர்களே ‘சிறுமந்தையில்’ இடம்பெறுவார்கள். நாம் இயேசுவின் சிறுமந்தையில் இடம்பெற வேண்டும் என்றால், அவருடைய குரலுக்குச் செவிமடுத்து, அவர்க்கு ஏற்புடையவற்றை நாடவேண்டும். அது மிகவும் முக்கியமானது.

சிறுமந்தையாக இருக்கின்றோம் என்பதற்காக அஞ்சத் தேவையில்லை

சிறுமந்தை எனப்படுவோர் யாரெனத் தெரிந்துகொண்ட நாம், ‘அஞ்சவேண்டாம்’ என்று இயேசு சொல்வதைக் குறித்து சிந்தித்துப் பார்ப்போம். இயேசுவைப் பலர் பின்தொடர்ந்தாலும் அவருடைய உண்மையான சீடர்கள் குறைவுதான்!. அவர்கள் சிறுமந்தைதான்! எனவே அவர்கள், ‘ஐயோ! நாங்கள் சிறுமந்தையாக இருக்கின்றோமே… எங்கட்கு ஏதாவது ஆகிவிடுமோ…’ என்று நினைத்து அஞ்சி வாழ்ந்துகொண்டிருக்காமல், துணிவோடு இருக்கவேண்டும் என்பதற்குத்தான் இயேசு ‘அஞ்சவேண்டாம்’ என்று சொல்கின்றார்.

இயேசு இங்கு சொல்வதுபோல் ‘சிறுமந்தை’ ஏன் அஞ்சவேண்டாம் என்பதற்கான காரணத்தை இப்பொழுது தெரிந்துகொள்வோம். முதலில், அவர்கள் – சிறுமந்தையைச் சார்ந்தவர்கள் – கடவுளின் பார்வையில் விலையேறப் பெற்றவர்களாக, மதிப்புமிக்கவர்களாக (எசாயா 43: 4) இருக்கின்றார்கள். சாதாரண சிட்டுக்குருவிகளை அற்புதமாகக் காத்துப் பராமரிக்கின்ற கடவுள், தன்னுடைய பார்வையில் விலையேறப் பெற்றவர்களாக, மதிப்புமிக்கவர்களாகத் திகழ்பவர்களை எந்தளவுக்குப் பராமரிப்பார் என்பதால்தான், இயேசு அவர்களைப் பார்த்து அஞ்சவேண்டாம் என்று சொல்கின்றார். அடுத்ததாக, சிறுமந்தையில் இருப்பவர்கள் அவருடைய மக்கள் (யோவா 1: 12). அவருடைய மக்களாக இருக்கின்றபோது எதற்கு யார்க்கும் அஞ்சவேண்டும் என்பதால்தான் இயேசு ‘அஞ்சவேண்டாம்’ என்று சொல்கின்றார். இதைவிடவும் இன்னொரு முக்கியமான ஒரு விடயம் இருக்கின்றது. அதைக் குறித்து இப்பொழுது சிந்தித்துப் பார்த்து நிறைவுசெய்வோம்.

சிறுமந்தையைத் தன் ஆட்சிக்கு உட்படுத்தும் இறைவன்

இயேசு தன் சீடரிடம், “சிறுமந்தையாகிய நீங்கள் அஞ்சவேண்டாம்” என்று சொன்னதோடு மட்டும் நின்றுவிடவில்லை. தொடர்ந்து அவர் அவர்களிடம், “உங்கள் தந்தை உங்களைத் தம் ஆட்சிக்கு உட்படுத்தத் திருவுளம் கொண்டுள்ளார்” என்கின்றார். எத்துணை இனிமையான, நம்பிக்கை நிறைந்த வார்த்தைகள் இவை!. யார் யாரெல்லாம் தந்தையாம் கடவுளின் குரலைக் கேட்டு, அவர்க்கு ஏற்புடையவற்றை நாடி, அதனால் அவருடைய ‘சிறு மந்தையாகின்றார்களோ’, அவர்களை அவர் தன் ஆட்சிக்கு உட்படுத்துவது எவ்வளவு பெரிய பேறு. அத்தகைய பேறு சிறுமந்தைக்குக் கிடைக்க இருப்பதால், இயேசு சிறுமந்தையாகிய நீங்கள் அஞ்சவேண்டாம் என்று சொல்கின்றார்.

இங்கு நாம் இன்னொரு விடயத்தையும் நம்முடைய கவனத்தில் இருத்துவது நல்லது. அது என்னவெனில், சிறுமந்தையை கடவுள் இவ்வுலக ஆட்சிக்கு உட்படுத்தத் திருவுளம் கொண்டுள்ளார் என்று இயேசு சொல்லவில்லை. மாறாக, உண்மையும் நீதியும் அன்பும் கொண்ட தம் ஆட்சிக்கு (யோவா 18: 36, 37) உட்படுத்தத் திருவுளம் கொண்டுள்ளதாகச் சொல்கின்றார். ஆகையால், இப்படியோர் ஆட்சிக்குத் தம் சிறுமந்தையை கடவுள் உட்படுத்தத் திருவுளம் கொண்டுள்ளார் எனில் அவர்கள் எதற்கும் யார்க்கும் அஞ்சத் தேவையில்லை என்பதுதான் நாம் புரிந்துகொள்ளவேண்டிய செய்தியாக இருக்கின்றது.

இன்றைக்குப் பலர் ‘நான் சிறியவனாயிற்றே… வறியவனாயிற்றே… எளியவனாயிற்றே… என்னால் எப்படி இதையெல்லாம் செய்யமுடியும்… என்னால் எப்படி இதையெல்லாம் சாதிக்க முடியும்’ என்று அஞ்சி நடுவதைப் பார்க்க முடிகின்றது. இப்படிப்பட்ட நிலையில் ‘நான் சிறுவனாயிருந்தாலும் கடவுளின் அன்புமகனாக இருக்கின்றேன்’ என்பதை அவர்கள் உணர்ந்து வாழ்ந்தால், எப்படிப்பட்ட சூழ்நிலையையும் எதிர்கொள்ள முடியும் என்பதில் ஐயமில்லை.

சிந்தனை

‘வீறுகொள்! துணிந்து நில்! அஞ்சாதே! கவலைப்படாதே! ஏனெனில் உன் கடவுளும் ஆண்டவருமான நான் நீ செல்லுமிடமெல்லாம் உன்னோடு இருப்பேன்” (யோசு 1: 9) என்று ஆண்டவர் யோசுவைப் பார்த்துக் கூறுவார். ஆண்டவர் யோசுவாவிற்குச் சொல்லும் அதே வார்த்தைகளைத் தான் இன்று நமக்கும் சொல்கின்றார். ஆகையால், ஆண்டவரின் அவ்வார்த்தைகளில் நம்பிக்கைகொண்டு, எதற்கும் அஞ்சாமல் துணிவோடு இருப்போம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.

Source: New feed