
I இணைச்சட்டம் 18: 15-20
II 1 கொரிந்தியர் 7: 32-35
III மாற்கு 1: 21-28
“நம் நடுவே பெரிய இறைவாக்கினர்”
நிகழ்வு
இலண்டன் மாநகர் வழியாக ஓடும் ‘தேம்ஸ்’ ஆற்றில் கப்பல் போக்குவரத்து சிறப்பான முறையில் நடந்ததால், பலரும் அங்கு வருவதும் போவதுமாக இருந்தார்கள். அவர்கள் நடுவில் இறைவார்த்தையை எடுத்துரைக்க முடிவுசெய்தார் அருள்பணியாளர் ஒருவர். அதற்காக அவர் ஒரு சுமைதூக்கும் தொழிலாளியைப் போன்று உடை அணிந்துகொண்டு, உடைமைகளை கப்பலிலிருந்து எடுத்து, அந்த உடைமைகளின் உரிமையாளர் போகவேண்டிய இடம்வரைக்கும் கொண்டுசென்று, போகிற வழியிலேயே இறைவாக்கு உரைத்து வந்தார். இது பெரிய பலனைத் தந்தது.
இதைக் கவனித்து வந்த ஒருவன், சுமைதூக்கும் தொழிலாளி உடையில் இருந்த அருள்பணியாளரை அவமானப்படுத்த நினைத்தான். அதற்காக அவன் தக்க தருணத்திற்காகக் காத்துக் கொண்டிருந்தான். ஒருநாள் அருள்பணியாளர் கப்பலிலிருந்து ஒரு செல்வச் சீமாட்டியின் உடைமைகளை தூக்கிக்கொண்டு, கப்பலுக்கும் துறைமுகத்திற்கும் இடையே போடப்பட்டிருந்த பலகை வழியாக நடந்துவந்துகொண்டிருக்கும்பொழுது, இவன் அவர்மீது மோத, அவர் செல்வச் சீமாட்டியின் உடைமைகளோடு கடலுக்குள் விழுந்தார். இதைச் சுற்றி இருந்து பார்த்துக்கொண்டிருந்த அனைவரும் சத்தமாகச் சிரித்தனர்.
இதையடுத்து, உடைமைகளோடு கடலுக்குள் விழுந்த சுமைதூக்கும் தொழிலாளியின் உடையில் இருந்த அருள்பணியாளர் என்ன செய்யப் போகிறார் என்று அங்கிருந்தவர்கள் அவரையே பார்த்துக்கொண்டிருக்கும்பொழுது, அவர் உடைமைகளோடு யோடு நீந்திக் கரையை வந்தடைந்தார். ‘தன்னால் கடலுக்குள் தள்ளிவிடப்பட்ட அருள்பணியாளர் கரைக்கு வந்துவிட்டாரே, இனி அவர் என்னை என்னச் செய்யப் போகிறாரோ!’ என்று அவரைத் தள்ளிவிட்டவன் அச்சத்தோடு நின்றுகொண்டிருக்கும்பொழுது, அருள்பணியாளர் அவனுக்கு மிகவும் அன்போடு இறைவார்த்தையை எடுத்துரைத்து, அவன் ஆண்டவர் இயேசுவின்மீது நம்பிக்கை கொள்ளச் செய்தார். இப்படிப் பலருக்கும் இறைவார்த்தையை எடுத்துரைத்து, அவர்களை ஆண்டவர் இயேசுவின்மீது நம்பிக்கைகொள்ளச் செய்தார் சுமைதூக்கும் தொழிலாளியின் உடையில் இருந்த அந்த அருள்பணியாளர்.
ஒரு சாதாரண சுமை தூக்கும் தொழிலாளியைப் போன்று உடையடைந்து, தேம்ஸ் ஆற்றின் வழியாகப் பயணம் செய்தோருக்கு இறைவார்த்தையை அறிவித்த அருள்பணியாளரின் செயல் உண்மையிலேயே பாராட்டிற்குரியது. பொதுக்காலம் நான்காம் ஞாயிறான இன்று நாம் வாசிக்கக்கேட்ட இறைவார்த்தை, ‘இயேசு என்னும் பெரிய இறைவாக்கினர்’ மக்கள் நடுவில் இறையாட்சிப் பணி செய்வதைக் குறித்து எடுத்துக்கூறுகின்றது. இயேசு ஆற்றிய இறையாட்சிப் பணி நமக்கு எத்தகைய செய்தியைத் தருகின்றது என்பதைக் குறித்து நாம் சிந்தித்துப் பார்ப்போம்.
இறைவாக்கினரை ஏற்படுத்தப்போவது பற்றிய முன்னறிவிப்பு
இணைச்சட்ட நூலிலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய முதல் வாசகம், ஆண்டவராகிய கடவுள் மக்கள் நடுவினின்று ஓர் இறைவாக்கினரை ஏற்படுத்தப் போவதைப் பற்றி எடுத்துக்கூறுகின்றது. இது குறித்து நாம் இன்னும் தெளிவாகப் புரிந்துகொள்வதற்கு இணைச்சட்ட நூல் 13: 1-5 இல் இடம்பெறுகின்ற இறைவார்த்தை இணைத்துச் சிந்தித்துப் பார்ப்பது நல்லது.
இப்பகுதியில் போலி இறைவாக்கினனைப் பற்றிச் சொல்லப்படும். அந்தப் போலி இறைவாக்கினன், அடிமைத்தன வீடாக எகிப்திலிருந்து, வாக்களிக்கப்பட்ட கானான் நாட்டிற்கு அழைத்துவரும் கடவுளுக்கு எதிராக மக்களைத் திசை திருப்புபவனாக இருப்பான். இதனால் அந்தப் போலி இறைவாக்கினன் கொல்லப்படுவான் என்று அங்குச் சொல்லப்படும்; ஆனால், ஆண்டவர் ஏற்படுத்தப்போவதாக இன்றைய முதல் வாசகத்தில் சொல்லப்படும் இறைவாக்கினரோ, ஆண்டவர் கட்டளையிடுவதை மட்டுமே மக்களுக்கு சொல்பவாராக இருப்பார். மேலும் அவர் ஆண்டவரின் நெஞ்சத்திற்கு மிக நெருக்கமாக இருந்து, மக்களை ஆண்டவரின் கொண்டு வருவார்.
இந்தப் பின்னணியில் “வரவேண்டிய இறைவாக்கினர் இவர்தான்” (யோவா 6: 14, 7:40) என்று மக்கள் இயேசுவைப் பற்றிச் சொல்கின்ற வார்த்தைகளை இணைத்துச் சிந்தித்துப் பார்ப்பது நல்லது.
இயேசுவே வரவேண்டிய இறைவாக்கினர்
மோசே வழியாக ஆண்டவர் உரைத்த “ஓர் இரைவாக்கினனை நான் அவர்களுக்கு ஏற்படுத்துவேன்” என்ற வார்த்தைகள் இயேசுவில் நிறைவேறுகின்றன. அதற்குச் சான்றாக இருப்பதுதான் இன்றைய நற்செய்தி வாசகம். நற்செய்தி வாசகத்தில் ஆண்டவர் இயேசு, ஓய்வுநாளில் கப்பர்நாகுமில் உள்ள தொழுகைக்கூடத்தில் போதிக்கின்றார். இயேசுவின் போதனையைக் கேட்ட மக்கள் வியப்பில் ஆழ்கின்றார்கள்.
இயேசுவின் போதனையைக் கேட்டு மக்கள் வியப்பில் ஆழ்வதற்கு இரண்டு முதன்மையான காரணங்களைச் சொல்லலாம். ஒன்று, இயேசு தானாக எதையும் பேசவில்லை; தன்னை அனுப்பிய தந்தை என்ன சொல்லவேண்டும், என்ன பேசவேண்டும் என்று கட்டளையிட்டிருந்தாரோ, அதைப் பற்றியே பேசினார் (யோவா 12: 49). இன்றைய முதல் வாசகத்தில் இறைவாக்கினரை ஏற்படுத்தப்போவதாகச் சொல்லும் கடவுள், தான் கட்டளையிடும் அனைத்தையும் அவன் அவர்களுக்குச் சொல்வான் என்பார். அந்த அடிப்படையில் இயேசு, தந்தைக் கடவுள் தனக்குச் சொன்னதையே பேசியதால், அவருடைய போதனையைக் கேட்ட மக்கள் வியப்புறுகின்றார்கள்.
இரண்டு, இயேசு மறைநூல் அறிஞரைப் போலன்றி, அதிகாரத்தோடு போதித்தார். இயேசு அதிகாரத்தோடு போதித்ததற்கு, அவருடைய வாழ்வும் ஒரு காரணமாக இருந்தது என்று சொல்லலாம். ஏனெனில், பரிசேயர்கள் சொன்னார்கள்; அதைச் செயலில் காட்டவில்லை (மத் 23: 4). இயேசு அப்படியில்லை. அவர் சொன்னதைச் செய்தார்; சொல்லிலும் செயலிலும் வல்ல இறைவாக்கினராக இருந்தார் (லூக் 24: 19). இதனாலேயே இயேசுவின் போதனையைக் கேட்டு மக்கள் வியந்தார்கள்.
தீய ஆவிகளின்மீதும் அதிகாரம் கொண்ட இயேசு
கப்பர்நாகுமில் உள்ள தொழுகைக்கூடத்தில் இருந்தவர்கள் இயேசுவின் போதனையைக் கேட்டு வியப்புற்றுக்கொண்டிருக்கும்பொழுதே, அவர்கள் மேலும் வியப்புறும் வகையில் இயேசு வேறொரு செயலைச் செய்கின்றார். அதுதான் அங்கிருந்த தீய ஆவி பிடித்திருந்த மனிதரிடமிருந்து தீய ஆவியை விரட்டியது. இயேசுவின் காலத்தில் வாழ்ந்த பலர் தீய ஆவிகளை விரட்டினார்கள்; ஆனால், அவர்கள் தன்னலத்திற்காகத் தீய ஆவியை விரட்டினார்கள்; தீய ஆவி உட்பட எல்லாவற்றின்மீதும் அதிகாரம்கொண்டிருந்த இயேசுவோ தீய ஆவியை விரட்டியதன் மூலம் சாத்தானின் ஆட்சி முடிவுக்கு வந்துவிட்டது, இறையாட்சி தொடங்கிவிட்டது என்பதை உரக்கச் சொல்லி ஆண்டவருக்குப் பெருமை சேர்த்தார். நாம் எந்தவொரு செயலைச் செய்தாலும், அதில் நமக்குப் பெருமையும் புகழும் சேரவேண்டும் என்று எண்ணிச் செய்யாமல், கடவுளுக்குச் சேர வேண்டும் என்று எண்ணிச் செயல்பட்ட இயேசுவைப் போன்று செயல்பட வேண்டும்.
எனவே, நாம் பெரிய இறைவாக்கினராய் மக்கள் நடுவில் பணியாற்றிய இயேசுவைப் போன்று சொல்லிலும் செயலிலும் வல்லவர்களாய் விளங்கி, இறையாட்சி இம்மண்ணில் வர ஒரு கருவியாய் இருப்போம்.
சிந்தனை
‘பிள்ளைகளே, நாம் சொல்லிலும் பேச்சிலும் அல்ல, செயலில் உண்மையான அன்பை விளங்கச் செய்வோம்’ (1 யோவா 3: 18) என்பார் திருத்தூதர் புனித யோவான். ஆகையால், நாம் செயலில் தன் அன்பை வெளிப்படுத்தி, வாழ்ந்ததையே போதித்த, பெரிய இறைவாக்கினராகிய இயேசுவின் வழியில் நடப்போம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.
Source: New feed