I விடுதலைப் பயணம் 12: 1-8, 11-14
II 1 கொரிந்தியர் 11: 23-26
III யோவான் 13: 1-15
பணிவோடு வாழச் சொல்லும் நற்கருணை
நிகழ்வு
‘கத்தோலிக்கத் திருஅவையின் மூத்தமகள்’ என அழைக்கப்படும் பிரான்ஸ் நாட்டை இறைநம்பிக்கையிலும் – இறையன்பிலும் – பிறரன்பிலும் வளர்த்துவந்தவர் ஒன்பதாம் லூயிஸ் என்ற பேரரசர்.
ஒருநாள் அவருடைய அரண்மனையில் பணியாற்றிவந்த பணியாளர் ஒருவர் அவரிடம் வேகமாக ஓடிவந்து, “அரசே! சீக்கிரமாக வாருங்கள்… நம்முடைய ஆலயத்தில் அதிசயம் ஒன்று நடந்துகொண்டிருக்கின்றது” என்றார். “அதிசயமா? அப்படி என்ன அதிசயம்?” என்று வியப்போடு கேட்டார் அரசர். “அரசே! பேராலயத்தில் நடந்துகொண்டிருந்த திருப்பலியில், குருவானவர் அப்பத்தை எடுத்து, வசீகர வார்த்தைகளைச் சொல்லி, அதை உயர்த்திப் பிடித்தபொழுது, அதில் இயேசு கிறிஸ்துவின் திருமுகம் தெரிந்தது. அதைச் சொல்வதற்காகத்தான் நான் இவ்வளவு வேகமாக ஓடிவந்தேன்” என்றார்.
அந்தப் பணியாளர் சொன்னதை அமைதியாகக் கேட்டுவிட்டு அரசர் மிகவும் பொறுமையாகச் சொன்னார், “அந்த அதிசயத்தைப் பார்க்க ஆலயத்திற்கு நான் வரவில்லை. ஏனெனில், நற்கருணையில் இயேசுவின் உடனுறைதல் (பிரசன்னம்) இல்லையென்று சொல்பவர்தான் அதைப் பார்க்கவரவேண்டும்… நான் நற்கருணையில் இயேசுவின் உடனுறைதல் இருக்கின்றது என்று உண்மையாகவே நம்புகின்றவன். மேலும் நற்கருணை ஆண்டவரை ஒவ்வொரு நாளும் நம்பிக்கைக் கண்களால் – ஞானக் கண்களால் – பார்த்து மகிழ்கின்றவன். அதனால் நான் இப்பொழுது ஆலயத்தில் நடைபெறும் அதிசயத்தைப் பார்க்க வரவில்லை.”
பேரரசர் ஒன்பதாம் லூயிஸின் இவ்வார்த்தைகள், நற்கருணை ஆண்டவர்மீது அவர் கொண்டிருந்த நம்பிக்கையையும் நற்கருணையில் இயேசு உண்மையாகவே உடனுறைந்திருக்கின்றார் என்பதையும் மிகத் தெளிவாக எடுத்துக்கூறுகின்றன.
இன்றைய நாள், திருஅவையில் மிகவும் முக்கியமான நாள். ஏனெனில், இன்றைய நாளில்தான் இயேசு தன்னுடைய சீடர்களின் பாதங்களை கழுவினார்; இன்றைய நாளில்தான் இயேசு தன்னுடைய நண்பர்களுள் (யோவா 15:15) ஒருவரால் காட்டிக்கொடுக்கப்பட்டார்; இன்றைய நாளில்தான் இயேசு குருத்துவத்தையும் நற்கருணையையும் ஏற்படுத்தினார். ஆகவே, இத்தகைய சிறப்புமிக்க நாளில், நாம் இயேசு கிறிஸ்து ஏற்படுத்திய நற்கருனையைக் குறித்து சிந்தித்துப் பார்ப்பது நல்லது.
இயேசு என்னும் புதிய பாஸ்கா ஆடு
இயேசு, தன்னுடைய இறுதி இராவுணவின்போது ஏற்படுத்திய நற்கருணையின் மேன்மையைக் குறித்துத் தெரிந்துகொள்ளவேண்டுமெனில், யூதர்கள் பாஸ்கா விழாவினை எப்படிக் கொண்டாடினார்கள் என்று தெரிந்துகொள்வது நல்லது.
யூதர்கள், தலைமாதத்தின் பதினான்காம் நாளில், ஏற்கனவே தேர்வுசெய்து வைக்கப்பட்டிருக்கும் குறைபாடிலில்லாத ஒரு கிடாயை வெட்டி, அதைத் தீயில் வாட்டி, இடையில் கச்சை கட்டிக்கொண்டு, கால்களில் காலணி அணிந்துகொண்டு, கையில் கோல் பிடித்தவாறு தங்கள் குடும்பத்தினரோடு விரைவாக உண்டார்கள். கூடவே புளிப்பற்ற அப்பத்தையும் கசப்புக் கீரையும் உண்டார்கள். கிடாயின் இரத்தத்தையோ வீட்டின் இரு கதவு நிலைகளிலும் மேல்சட்டத்திலும் பூசினார்கள். இதில் நாம் கவனிக்கவேண்டியது, பாஸ்கா விருந்திற்காக அவர்கள் தேர்ந்துகொண்ட குறைபாடில்லாத ஆடுதான்.
யூதர்கள் தாங்கள் கொண்டாடிய (பழைய) பாஸ்காவிற்கு விருந்திற்கு குறைபாடில்லாத ஆட்டினைத் தேர்ந்துகொண்டார்கள் எனில், இயேசுவோ புதிய பாஸ்கா விருந்திற்கு ஒரு பாவமும் இல்லாத (1 யோவா 3:5) தன்னையே தேர்ந்துகொண்டு, உயிரளிக்கும் உணவாகத் (யோவா 6:51) தருகின்றார். இயேசுதான் புதிய பாஸ்கா ஆடு என்பதை திருமுழுக்கு யோவான் (யோவா 1:39), பிலிப்பு (திப 8: 32-35), பவுல் (1 கொரி 5:7), பேதுரு (1 பேது 1: 18-20) யோவான் (திவெ 5: 5-6) என ஏராளமான பேர் சான்றுபகர்கிறார்கள். அப்படிப்பட்ட புதிய பாஸ்கா ஆடாய், உயிரளிக்கும் உணவாய் விளங்கும் நற்கருணை ஆண்டவர் நமக்குத் தருகின்ற செய்தி என்னவென்று இப்பொழுது சிந்தித்துப் பார்ப்போம்.
நற்கருணை நாதரின் நினைவாகச் செய்யவேண்டியவை
ஆண்டவர் இயேசு, காட்டிக்கொடுக்கப்பட்ட அந்த இரவில் அப்பத்தை எடுத்து, “இது என் உடல்” என்றும் கிண்ணத்தை எடுத்து, “என் இரத்தத்தால் நிலைப்படுத்தப்படும் புதிய உடன்படிக்கை” என்றும் சொல்லிவிட்டு “என் நினைவாகச் செய்யுங்கள்” என்பார். ஆனால், யோவான் நற்செய்தியிலோ (இன்றைய நற்செய்தி வாசகம்) இயேசு நற்கருணையை ஏற்படுத்திய நிகழ்வு இடம்பெறாது. மாறாக, இயேசு தன்னுடைய சீடர்களின் காலடிகளைக் கழுவுகின்ற நிகழ்வு நடைபெறும். அப்படியானால் ஒத்தமை நற்செய்தி நூல்களிலும் இன்றைய இரண்டாம் வாசகத்திலும் இடம்பெறும் ‘இயேசு நற்கருணை ஏற்படுத்தியதையும்’ யோவான் நற்செய்தியில் இடம்பெறும் ‘இயேசு சீடர்களின் பாதங்களைக் கழுவியதையும்’ இணைத்துச் சிந்தித்துப் பார்த்தால், ஓர் உண்மை நமக்குப் புலப்படுகின்றது. அது என்னவெனில், யாராரெல்லாம் உயிரளிக்கும் உணவாம் நற்கருணை விருந்தில் கலந்துகொள்கிறார்களோ அவர்கள் அனைவரும் இயேசுவைப் போன்று தன்னை விடக் கீழே உள்ளவர்களுக்குப் பணிவிடை செய்யவேண்டும் அல்லது பணிவோடு இருக்கவேண்டும்.
காலடிகளைக் கழுவுவது என்பது புறவினத்தார் அல்லது அடிமைகள் செய்கின்ற வேலை. யூதர்கள் எப்போதாவது (!) தங்களுடைய வீட்டிற்கு வரும் விருந்தாளிகளின் காலடிகளைக் கழுவுவது உண்டு. அத்தகைய – அடிமைகள் செய்கின்ற – வேலையை இயேசு தன்னுடைய சீடர்களுக்குச் செய்கின்றார் எனில், அவர்களும் தன்னைப் போன்று தாழ்ச்சியோடும் பணிவோடும் இருக்கவேண்டும் என்பத்ரகாகவே அவர் அவர்களுடைய காலடிகளைக் கழுவுகின்றார். இயேசு தன்னுடைய சீடர்களின் காலடிகளைக் கழுவுவதற்கு முன்பாக, அவர்கள் தங்களுக்குள் யார் பெரியவர் என்ற வாக்குவாதத்தில் ஈடுபட்டிருந்தார்கள் (லூக் 22: 24-30). அப்படிப்பட்டவர்களுக்கு, பெரியவர் என்பவர் அதிகாரத்தைக் கையில் வைத்திருப்பவர் அல்ல, எல்லாருக்கும் தாழ்ச்சியோடு பணிவிடை செய்பவரே என்பதைக் கற்பிப்பதற்காக இயேசு அவர்களுடைய காலடிகளைக் கழுவுகின்றார்.
பணிவைக் குறித்து இன்னொரு செய்தியையும் நாம் நம்முடைய கவனத்தில் கொள்ளவேண்டும். அது என்னவெனில், உண்மையான பணிவு என்பது தனக்கு மேலே உள்ளவர்களிடம் மட்டும் பணிவாக இருப்பது அல்ல, தனக்குக் கீழே உள்ளவர்களிடமும் பணிவாக இருக்கவேண்டும். அதுதான் உண்மையான பணிவாகும். இயேசு செல்வராய் இருந்தார் (2 கொரி 8:9), எல்லா அதிகாரமும் கொண்டிருந்தார். அப்படியிருந்தும் அவர் பணிவோடு இருந்தார்; பணிவோடு தன் சீடர்களின் காலடிகளைக் கழுவினார். எனவே, நற்கருணை விருந்தில் கலந்துகொள்கின்ற ஒவ்வொருவரும் இயேசுவைப் போன்று தனக்குக் கீழ் உள்ளவர்களிடம் பணிவோடு இருக்கவேண்டும்; பணிவோடு பணிவிடை செய்யவேண்டும்.
பணிந்து போவதில்தான் பெருமை இருக்கின்றது
ஒருசமயம் ஒருவர் மட்டுமே நடக்கக்கூடிய ஒரு குறுகிய பாலத்தில் இருவர் எதிரெதிரே வந்தனர். இருவரும் அருகில் வந்ததும், “நான்தான் பலசாலி! நீயெனக்கு வழிவிடு” என வாக்குவாதத்தில் இறங்கினர். சிறிதுநேரம் கழித்து அவர்களில் ஒருவர், “நான் படுத்துக்கொள்கிறேன்… நீ என்மேல் நடந்துசெல்” என்றார். உடனே மற்றவர் அவர்மேல் ஏறிச் சென்று, “நான்தான் பலசாலி! இவன் கோழை! அதனால்தான் இவன் என்னைப் பார்த்துப் பயந்துவிட்டான்” என்றார். இதையெல்லாம் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த ஊர்ப்பொதுமக்கள், “உன் மொத்த எடையையும் தாங்கினாரே! அவர்தான் பலசாலி… பெருமை நான்தான் ‘பெரியவன்’, ‘பலிசாலி’ என்று சொல்லிக்கொள்வதில்லை. அது பணிந்துபோவதில் இருக்கின்றது” அவருக்கு அவர்கள் புத்திமதி சொன்னார்கள்
Source: New feed