பாஸ்கா காலம் ஐந்தாம் வாரம் (மே 02)

I திருத்தூதர் பணிகள் 9: 26-31
II 1 யோவான் 3: 18-24
III யோவான் 15: 1-8
ஆண்டவரோடு ஒன்றித்திருப்போம்
நிகழ்வு
தன்னுடைய வாழ்க்கையில் துன்பங்களுக்குமேல் துன்பங்களைச் சந்தித்து, உடலளவிலும் உள்ளத்தளவிலும் பெரிதும் பாதிக்கப்பட்ட பெண்மணி ஒருவர் இருந்தார். இவர் நகரில் இருந்த ஒரு பிரபல மருத்துவரைச் சந்தித்துத் தன் பிரச்சனைகளை அவரிடம் எடுத்துச் சொன்னார். எல்லாவற்றையும் பொறுமையாகக் கேட்டுக்கொண்டிருந்த மருத்துவர் அவரிடம், “ஒரு நாளைக்கு ஒரு மணிநேரம் விகிதம் ஒரு மாதத்திற்குத் திருவிவிலியத்தை வாசியுங்கள். ஒரு மாதம் கழித்து என்னை வந்து சந்தியுங்கள்” என்றார். “எனக்குப் பல பிரச்சனைகள் இருக்கின்றன. அவற்றிற்கெல்லாம் இந்தத் திருவிவிலியம் எப்படித் தீர்வாக இருக்க முடியும்?” என்று இவர் சற்றுத் தயக்கத்தோடு கேட்டபொழுது, மருத்துவர் இவரிடம், “வேறு ஏதாவது மருந்து மாத்திரைகளை நான் எழுதிக்கொடுத்தால், அவற்றை நீங்கள் உண்பீர்கள்தானே! அதை மனத்தில் வைத்துக்கொண்டு ஒரு மாதத்திற்குத் திருவிவிலியம் வாசியுங்கள்” என்று சொல்லி அனுப்பி வைத்தார்.
ஒருமாதம் கழித்து இவர் மருத்துவரைப் போய்ப் பார்த்தார். அப்பொழுது இவருடைய முகத்தில் தெரிந்த மாற்றத்தைப் பார்த்துவிட்டு மருத்துவர் இவரிடம், “உங்களுடைய முகத்தைப் பார்க்கின்றபோதே தெரிகின்றது நீங்கள் நான் சொன்னதைக் கடைப்பிடித்திருக்கின்றீர்கள் என்று… தொடர்ந்து நான் சொன்னதைக் கடைப்பிடித்து வாருங்கள். உங்களுடைய வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக இருக்கும்” என்றார். “அதுசரி, திருவிவிலியம்தான் என்னுடைய பிரச்சனைகளுக்குத் தீர்வு தரும் என உங்களுக்கு எப்படித் தெரியும்?” என்று இவர் மருத்துவரிடம் கேட்க, மருத்துவர் தன் மேசையிலிருந்த திருவிவிலியத்தை எடுத்துக் காட்டி, “இந்தத் திருவிவிலியம்தான் எனக்குப் பல ஆண்டுகளாக ஆற்றலின் ஊற்றாக இருக்கின்றது. இதை நான் வாசிக்கின்றபொழுது ஆறுதலையும் ஆற்றலையும் மன அமைதியையும் பெறுகின்றேன். அதனால்தான் நீங்கள் என்னிடம் பிரச்சனையோடு வந்தபொழுது, உங்களைத் திருவிவிலியம் வாசிக்கச் சொன்னேன்” என்றார்.
ஆம், கடவுளின் வார்த்தையை ஒவ்வொரு நாளும் வாசித்து, அவரோடு ஒன்றிருத்திருப்பதன் மூலம் அல்லது இணைந்திருப்பதன் மூலம் நாம் நம்முடைய வாழ்விற்குத் தேவையான ஆற்றலையும் ஆறுதலையும் பெற்றுக்கொள்ளலாம் என்பதை இந்த நிகழ்வு நமக்கு எடுத்துக்கூறுகின்றது. பாஸ்கா காலத்தின் ஐந்தாம் ஞாயிறான இன்று நாம் வாசிக்கக்கேட்ட இறைவார்த்தை ஆண்டவரோடு ஒன்றித்திருப்போம் என்ற செய்தியை நமக்கு எடுத்துக்கூறுகின்றது. அது குறித்து நாம் சிந்திப்போம்.
ஒன்றித்திருந்தால் கனிதர முடியும்
“வாழ்வு தரும் உணவு நானே” (யோவா 6: 35), “உலகின் ஒளி நானே” (யோவா 8: 12), “ஆடுகளுக்கு வாயில் நானே” (யோவா 10: 7), “நல்ல ஆயன் நானே” (யோவா 10: 10), “உயிர்த்தெழுதலும் வாழ்வும் நானே” (யோவா 11: 25), “வழியும் உண்மையும் வாழ்வும் நானே” (யோவா 14: 6) என்று சொல்லி வந்த இயேசு, இறுதியாக இன்றைய நற்செய்தியில், “உண்மையான திராட்சைக் கொடி நானே” (யோவா 15: 1) என்கிறார்.
இயேசு தன் சீடரிடம், “உண்மையான திராட்சைக் கொடி நானே” என்று சொன்னபொழுது அவர்களுக்குச் சற்று வியப்பாக இருந்திருக்கலாம். ஏனெனில், திராட்சைக் கொடி அல்லது திராட்சைத் தோட்டமானது இஸ்ரயேல் மக்களோடு தொடர்புபடுத்திப் பேசப்பட்டது (எசா 5: 1-7). இஸ்ரயேல் மக்கள் ஆண்டவரோடு உள்ள உறவில் நிலைத்து இருந்திருந்தால் அல்லது அவரோடு ஒன்றித்து இருந்திருந்தால் அவர்கள் மிகுந்த கனிதந்திருக்கலாம்; ஆனால், அவர்கள் ஆண்டவரோடு ஒன்றித்திராததால், அவர்களால் கனிகொடுக்க முடியாமலே போயிற்று. இந்நிலையில் தந்தைக் கடவுளோடு ஒன்றித்திருந்த இயேசு தன்னை, “உண்மையான திராட்சைக் கொடி நானே” என்றும், “ஒருவர் என்னுடனும் நான் அவருடனும் ஒன்றிருத்திருந்தால் அவர் மிகுந்த தருவார்” என்றும் கூறுகின்றார்.
திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய முதல்வாசகம் புனித பவுலைப் பற்றிக் கூறுகின்றது. தொடக்கத்தில் கிறிஸ்துவர்களைப் பிடித்துத் துன்புறுத்தியவரான இவர், தமஸ்கு நோக்கிச் செல்லும் வழியில் ஆண்டவர் இயேசுவால் தடுத்தாட்கொள்ளப்படுகின்றார். பின்பு இவர் திருத்தூதர்களோடு அல்லது இயேசுவோடு ஒன்றித்திருந்து, அவருடைய வார்த்தையை மக்களுக்கு அறிவிக்கின்றார். இதனால் திருஅவை வேகமாகப் பரவுகின்றது. ஆம், எப்பொழுது நாம் புனித பவுலைப் போன்று ஆண்டவரோடு ஒன்றித்திருக்கின்றோமோ, அப்பொழுது நம்மால் மிகுந்த கனி தர முடியும்.
ஒன்றித்திருந்தால் விரும்பிக் கேட்பதெல்லாம் நடக்கும்
தன்னோடு ஒன்றித்திருந்தால் மிகுந்த கனிதர முடியும் என்று சொன்ன இயேசு, தொடர்ந்து தன் சீடர்களிடம், “நீங்கள் என்னுள்ளும் என் வார்த்தைகள் உங்களுள்ளும் நிலைத்திருந்தால் நீங்கள் விரும்பிக் கேட்பதெல்லாம் நடக்கும்” என்கிறார். இதை நாம் வேறு வார்த்தைகளில் சொல்லவேண்டும் என்றால், இயேசுவோடு நாம் ஒன்றித்திருந்தால், விரும்பிக் கேட்பதெல்லாம் நடக்கும் என்று சொல்லலாம்.
இப்பொழுது நமக்கு, நாம் விரும்பிக் கேட்பதெல்லாம் நடக்குமா? என்ற கேள்வி எழலாம். இதற்கான பதிலைத் திருத்தூதர் புனித பவுலும், புனித யோவானும் நமக்கு அளிக்கின்றார்கள். “எதற்காக, எப்படி நாம் இறைவனிடம் வேண்டுவது என்று நமக்குத் தெரியாது. தூய ஆவியார் தாமே சொல்வடிவம் பெற முடியாத நம்முடைய பெருமூச்சுகளின் வாயிலாய் நமக்குப் பரிந்துபேசுகின்றார்” (உரோ 8: 26) என்று புனித பவுல் உரோமையருக்கு எழுதிய திருமுகத்தில் கூறுவார். இதன்படி இறைவனிடம் நாமல்ல, தூய ஆவியாரே பரிந்து பேசுகின்றார் என்பது உறுதியாகின்றது. தூய ஆவியார் நமக்காகப் பரிந்து பேசும்பொழுது, நாம் விரும்பிக் கேட்பது நடக்கும் என்பது உறுதி. அடுத்ததாக, “நாம் கேட்பது தந்தையின் திருவுளத்திற்கு ஏற்ப அமைந்திருப்பின், அவர் நமக்குச் செவிசாய்க்கிறார்” (1 யோவா 5: 14) என்பார் புனித யோவான். இதன்படி கடவுளின் திருவுளத்திற்கு ஏற்ப நமது வேண்டுதல் அமைந்திருக்கும்பொழுது, நாம் கேட்பதெல்லாம் நடக்கும் என்று சொல்லலாம்.
இவ்வாறு நமது வேண்டுதல் கடவுளின் திருவுளத்திற்கு ஏற்ப அமைந்திருக்கவும், தூய ஆவியார் நமக்காகப் பரிந்து பேசவும் நாம் கடவுளோடு ஒன்றிருப்பது மிகவும் இன்றியமையாததாக இருக்கின்றது. நாம் எப்படிக் கடவுளோடு ஒன்றித்திருப்பது என்று சிந்திப்போம்.
ஒன்றித்திருந்தால் கடவுளை மாட்சிப்படுத்த முடியும்
திருத்தூதர் புனித யோவான் எழுதிய முதல் திருமுகத்திலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய இரண்டாம் வாசகத்தில், “கடவுளுடைய கட்டளைகளைக் கடைப்பிடிப்பவர் அவரோடு ஒன்றித்திருக்கின்றார்” என்கிறார். ஆம். ஒருவர் கடவுளின் கட்டளைகளின் கடைப்பித்து, அவரோடு ஒன்றித்திருக்கும்பொழுது அவர் மிகுந்த கனிதருகின்றார். மட்டுமல்லாமல், அவர் தந்தையை மாட்சிப் படுத்துபவராகவும் ஆகின்றார். ஆண்டவராகிய இயேசு, தந்தை தன்னிடம் செய்யுமாறு ஒப்படைத்திருந்த வேலையைச் செய்து முடித்து, உலகில் அவரை மாட்சிப்படுத்தினார் (யோவா 17: 4) அது போல நாமும் கடவுளின் கட்டளைகளைக் கடைப்பிடித்து, அவரோடு ஒன்றித்திருப்பதன் மூலம் மிகுந்த கனி தந்து, தந்தையை மாட்சிப்படுத்த முடியும். எனவே, நாம் நமது சொல், செயல் ஆகியவற்றின் மூலம் தந்தையை மாட்சிப்படுத்த முயற்சி செய்வோம்.
சிந்தனை:
‘நாம் பகுதிநேரக் கிறிஸ்தவர்களாக இருக்க முடியாது. நமது நம்பிக்கையை ஒவ்வொரு நாளும் நாழிகையும் வாழ்வாக்க வழிகளைத் தேட வேண்டும்’ என்பார் திருத்தந்தை பிரான்சிஸ். எனவே, நாம் உண்மையான கிறிஸ்தவர்களாக இருக்க, கடவுளின் கட்டளைகளைக் கடைப்பிடித்து, அவரோடு ஒன்றித்திருந்து, அவரைப் மாட்சிப்படுத்துவோம். அதன்வழியாக இறையருள் நிறைவாகப் பெறுவோம்.

Source: New feed