
என் பெயரின் பொருட்டு எல்லாரும் உங்களை வெறுப்பார்கள். இருப்பினும் உங்கள் தலைமுடி ஒன்றுகூட விழவே விழாது.
✠ லூக்கா எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 21: 12-19
அக்காலத்தில்
இயேசு தம் சீடர்களுக்குக் கூறியது: “அனைத்தும் நடந்தேறுமுன் அவர்கள் உங்களைப் பிடித்துத் துன்புறுத்துவார்கள்; தொழுகைக் கூடங்களுக்குக் கொண்டு செல்வார்கள்; சிறையில் அடைப்பார்கள்; என் பெயரின் பொருட்டு அரசரிடமும் ஆளுநரிடமும் இழுத்துச் செல்வார்கள். எனக்குச் சான்று பகர இவை உங்களுக்கு வாய்ப்பளிக்கும். அப்போது என்ன பதில் அளிப்பது என முன்னதாகவே நீங்கள் கவலைப்பட வேண்டாம். இதை உங்கள் மனத்தில் வைத்துக்கொள்ளுங்கள். ஏனெனில் நானே உங்களுக்கு நாவன்மையையும் ஞானத்தையும் கொடுப்பேன்; உங்கள் எதிரிகள் எவராலும் உங்களை எதிர்த்து நிற்கவும் எதிர்த்துப் பேசவும் முடியாது.
ஆனால் உங்கள் பெற்றோரும் சகோதரர் சகோதரிகளும் உறவினர்களும் நண்பர்களும் உங்களைக் காட்டிக்கொடுப்பார்கள்; உங்களுள் சிலரைக் கொல்வார்கள். என் பெயரின் பொருட்டு எல்லாரும் உங்களை வெறுப்பார்கள். இருப்பினும் உங்கள் தலைமுடி ஒன்றுகூட விழவே விழாது. நீங்கள் மன உறுதியோடு இருந்து உங்கள் வாழ்வைக் காத்துக்கொள்ளுங்கள்.”
ஆண்டவரின் அருள்வாக்கு.
———————————————————-
“அவர்கள் உங்களைச் சிறையில் அடைப்பார்கள்”
பொதுக்காலத்தின் முப்பத்து நான்காம் வாரம் புதன்கிழமை
I திருவெளிப்பாடு 15: 1-4
II லூக்கா 21: 12-19
“அவர்கள் உங்களைச் சிறையில் அடைப்பார்கள்”
துன்பங்கள் நடுவிலும் நற்செய்திப் பணி:
நற்செய்திப் பணியாளர் ஒருவர் இயேசு கிறிஸ்துவைப் பற்றி நற்செய்தி அறிவித்ததற்காகச் சிறையில் அடைக்கப்பட்டார். அவர் சிறையில் அடைக்கப்பட்டதற்காக மிகவும் வருத்தப்பட்டார். தனக்கு இப்படி ஆகிவிட்டதே என்பதற்காக அல்ல, மாறாக, நான்கு சுவர்களுக்குள்ளே அடைபட்டதால் தன்னால் யாருக்கும் நற்செய்தி அறிவிக்க முடியாமல் போய்விட்டதே என்பதற்காகவே அவர் மிகவும் வருந்தினார்.
சில நாள்கள் கழித்து அவர் ஒரு தீவிற்கு நாடு கடத்தப்பட்டார். அங்கே பலர் இருந்தார். அவர்களுக்கு நற்செய்தி அறிவிக்க ஒரு வாய்ப்புக் கிடைத்திருக்கின்றதே என்பதை எண்ணி, அவர் பெரிதும் மகிழ்ந்தார்.
ஆம், இந்த நிகழ்வில் வரும் நற்செய்திப் பணியாளர் கொரியா நாட்டைச் சேர்ந்தவர். கிறிஸ்தவைப் பற்றி நற்செய்தி அறிவித்ததற்காக நாடு கடத்தப்பட்டதும், அங்கே நற்செய்தி அறிவிக்கலாம் என்று எண்ணி அவர் மகிழ்ந்தது, நற்செய்தியின்மீது அவர் எவ்வளவு தாகம் கொண்டிருந்திருப்பார் என்பதை நாம் நினைத்துப் பார்த்துக் கொள்ளலாம். இன்றைய இறைவார்த்தை இறுதிக்காலத்தில் கிறிஸ்துவின் மீது நம்பிக்கை கொண்டவர்களுக்குப் பலவிதமான துன்பங்கள் வரும். அவற்றுக்கு நடுவில் மன உறுதியோடு இருந்து அவருக்குச் சான்று பகர வேண்டும் என்ற செய்தியைத் தருகின்றது. அது குறித்து நாம் சிந்திப்போம்.
திருவிவிலியப் பின்னணி:
நேற்றைய நற்செய்தி வாசகத்தின் தொடர்ச்சியாக இருப்பதுதான் இன்றைய நற்செய்தி வாசகம். எருசலேம் திருக்கோயிலின் அழிவு எப்போது ஏற்படும் என்கிற கேள்விக்குப் பதிலளிக்கையில், இயேசு இறுதி நாள்களில் என்ன நடக்கும் என்பதைப் பற்றியும் கூறுவார். தன்மீது நம்பிக்கைக் கொண்டதற்காகச் சிறையில் தள்ளப்படலாம்; பலவிதமாகச் சித்திரவதை செய்யப்படலாம் என்று சொல்லிவிட்டு, இயேசு, “நீங்கள் மன உறுதியோடு இருந்து உங்கள் வாழ்வைக் காத்துக் கொள்ளுங்கள்” என்கிறார்.
கிறிஸ்துவின்மீது நம்பிக்கைக் கொண்டதற்காகவே இங்கே நாம் துன்புறுத்தப்பட்டாலும், அங்கே – விண்ணகத்தில் – நாம் வெற்றியாளர்களைப் போன்று இருப்போம். இதைப் பற்றி இன்றைய முதல் வாசகத்தில், “விலங்கின் மீதும் சிலை மீதும் எண்ணால் குறிக்கப்பெற்ற அந்த ஆள் மீதும் வெற்றி பெற்றவர்கள் கடவுள் கொடுத்திருந்த யாழ்களை ஏந்திய வண்ணம் கண்ணாடிக் கடல் அருகே நின்றுகொண்டிருக்கக் கண்டேன்” என்றொரு குறிப்பு வருகின்றது.
உலகப் போக்கின்படி ஒழுகாமல், ஆண்டவர்மீது நம்பிக்கை கொண்டு, அவருக்குச் சான்று பகரும் யாவருமே வெற்றியாளர்கள்தான் இவர்கள் விண்ணகப் பேற்றினைப் பெற்று, ஆண்டவரைப் புகழ்ந்து பாடுவார்கள். இவர்களைப் போன்று நாம் மாற, மன உறுதியோடு இருந்து இயேசுவுக்குச் சான்று பகர்வோம்.
சிந்தனைக்கு:
துன்பங்களுக்கு நடுவில் துணிவுடன் இருக்கக் கற்றுக் கொள்ளவேண்டும்.
வாய்ப்புக் கிடைக்கும்போதெல்லாம் வார்த்தையாம் ஆண்டவர் இயேசுவைப் பற்றி அறிவிப்போம்.
கடவுள் தன் அடியார்களை ஒருபோதும் கைவிடுவதில்லை என்ற நம்பிக்கையோடு அவரது பணியைச் செய்வோம்.
Source: New feed