
அமைதிக்குரிய வழியை நீ அறிந்திருக்கக்கூடாதா?
லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 19: 41-44
அக்காலத்தில் இயேசு எருசலேம் நகரை நெருங்கி வந்ததும் கோவிலைப் பார்த்து அழுதார். “இந்த நாளிலாவது அமைதிக்குரிய வழியை நீ அறிந்திருக்கக் கூடாதா? ஆனால் இப்போது அது உன் கண்களுக்கு மறைக்கப்பட்டுள்ளது. ஒரு காலம் வரும்.
அப்போது உன் பகைவர்கள் உன்னைச் சுற்றி அரண் எழுப்பி, உன்னை முற்றுகையிடுவார்கள்; உன்னையும் உன்னிடத்திலுள்ள உன் மக்களையும் எப்பக்கத்திலுமிருந்து நெருக்கி அழித்து உன்னைத் தரைமட்டமாக்குவார்கள்; மேலும் உன்னிடம் கற்கள் ஒன்றின்மீது ஒன்று இராதபடி செய்வார்கள். ஏனெனில் கடவுள் உன்னைத் தேடி வந்த காலத்தை நீ அறிந்து கொள்ளவில்லை” என்றார்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
மறையுரைச் சிந்தனை :
“கடவுள் உன்னைத் தேடி வந்த காலத்தை நீ அறிந்துகொள்ளவில்லை”
அன்று ஞாயிற்றுக்கிழமை. பத்தாம் வகுப்புப் படித்து வந்த டோனி, ஞாயிறு மறைக்கல்வி வகுப்பு முடிந்து, வீட்டிற்குத் தனியாக வந்துகொண்டிருந்தான். அப்போது ஒரு பாலத்தில் அமர்ந்திருந்த ஒருசில இளைஞர்கள் டோனியை இடைமறித்து, “டேய் தம்பி! இங்க வாடா” என்று கூப்பிட்டார்கள். டோனிக்கு உள்ளுக்குள் பயம். எதற்கு இவர்கள் அழைக்கிறார்கள்?, என்னை வைத்து என்ன செய்யப்போகிறார்கள்? என்று பயந்துகொண்டே போனான்.
“எங்கே போயிட்டு வார?” என்றான் கூட்டத்திலிருந்த ஓர் இளைஞன். டோனியோ நடுங்குக்கொண்டே, “நானா… ஞாயிறு மறைக்கல்வி வகுப்புக்குப் போயிட்டு வாரேன்” என்றான். “அப்படியா! அங்கு என்ன சொல்லித் தந்தார்கள்?” என்றான் வேறொரு இளைஞன். “அங்கேயா… கடவுளைப் பற்றிச் சொல்லித் தருவார்கள்” என்றான் டோனி. “சரி… நான் உனக்கு பத்து ரூபாய் தருகிறேன். நீ எனக்கு கடவுள் எங்கிருக்கிறார் என்பதை மட்டும் காட்டு” என்றான் அந்த இளைஞன்.
சிறிது நேரம் அமைதியாக இருந்த டோனி, தன்னுடைய சட்டைப் பையிலிருந்து ஒரு நூறு ரூபாய்த் தாளை எடுத்து அவர்கள் முன்பாக நீட்டி, “நீங்கள் எனக்கு கடவுள் எங்கு இல்லை என்பதை மட்டும் காட்டுங்கள், நான் உங்களுக்கு நூறுரூபாய் தருகிறேன்” என்றான். டோனி இவ்வாறு கேட்டதற்கு, அந்த இளைஞர்களால் பதில் எதுவும் சொல்ல முடியவில்லை. அதனால் டோனி அவர்களிடமிருந்து மிக வேகமாக வந்துவிட்டான்.
ஆம், கடவுள் இல்லாத இடம் எதுவும் உண்டா? நிச்சயமாக இல்லை. அவர் எல்லா இடத்திலும் இருக்கின்றார். அது மட்டுமல்லாமல், அவர் தன் மக்களை ஒவ்வொரு நாளும் தேடி வருகின்றார். இன்றைய இறைவார்த்தையானது நம்மைத் தேடிவருகின்ற கடவுளை நாம் எப்படி ஏற்றுக்கொள்கின்றோம்? என்பது பற்றியதாக இருக்கின்றது. நாம் அதைக் குறித்து சிந்தித்துப் பார்ப்போம்.
நற்செய்தி வாசகத்தில், ஆண்டவர் இயேசு எருசலேம் நகரை நோக்கி வருகின்றார். அவர் அந்நகரை நெருங்கி வந்ததும், கோவிலைக் காண்கிறார். அதைக் கண்டதும் அவர் கண்ணீர் விட்டு அழுகிறார். இயேசு கிறிஸ்து இரண்டுமுறை அழுததாக நற்செய்தி நூல்கள் பதிவுசெய்கின்றன. ஒன்று இலாசரின் இறப்பில் (யோவா 11:35), இன்னொன்று இன்றைய நற்செய்தி வாசகத்தில். இயேசு எதற்காக எருசலேம் கோவிலைக் கண்டதும் அழுதார் என்பதைக் குறித்து சிந்தித்துப் பார்ப்பது மிகவும் தேவையான ஒன்றாக இருக்கின்றது.
இஸ்ரயேல் மக்களை இறைவன்பக்கம் கொண்டுவருவதற்கு பலமுறை இறைவாக்கினர்கள், இறையடியார்கள் அனுப்பப்பட்டார்கள். அப்படி அனுப்பப்பட்டவர்களை எல்லாம் அவர்கள் புறக்கணித்தார்கள், ஒருசிலரை அவமதித்தார்கள், இன்னும் ஒருசிலரை கொலைசெய்தார்கள். இப்படிப் பலமுறை இறைவன் தன்னுடைய மக்களை தன் பக்கம் சேர்ப்பதற்கு எவ்வளவோ முயன்றும் அது முடியாமல் போனதால், இயேசு அவர்களுக்கு நேர இருந்த அழிவை நினைத்துக் கண்ணீர் வடிக்கின்றார். மேலும் ‘உன்னிடம் கற்கள் ஒன்றின் மீது ஒன்று இராதபடி செய்வார்கள். ஏனெனில் கடவுள் உன்னைத் தேடி வந்த காலத்தை நீ அறிந்துகொள்ளவில்லை” என்கின்றார்.
இயேசு சொன்னதைப் போன்று கி.பி. 70 ஆம் ஆண்டு உரோமையர்கள் எருசலேம் மீது படையெடுத்து வந்து, அந்நகரைத் தரைமட்டமாக்கி, எருசலேம் திருக்கோவிலை அழித்துப் போட்டார்கள். அது மட்டுமல்லாமல், 6 லட்சத்துக்கும் மேற்பட்டவர்களைக் கொன்றொழித்து, பலரையும் நாடு கடத்திச் சென்றார்கள். இதற்கு ஒரே காரணம் அவர்கள் தங்களைத் தேடிவந்த இறைவனைக் கண்டுகொள்ளவில்லை என்பதுதான். யோவான் நற்செய்தி 1:11 ல் வாசிப்பது போல, “அவர் தமக்குரியவர்களிடம் வந்தார், அவர்களோ அவரை ஏற்றுக்கொள்ளவில்லை. ஆம், இயேசு இஸ்ரயேல் மக்களைத் தேடிவந்தபோது, அவர்கள் அவரை ஏற்றுக்கொள்ளவும் இல்லை, கண்டுகொள்ளவும் இல்லை. மாறாக, அவர்கள் அவருக்கு தங்கள் மனம்போன்று செய்தார்கள். அதனாலேயே அவர்கள் அழிவினைச் சந்தித்தார்கள்.
நாம் நம்மோடு இருக்கின்ற இறைவனை அறிந்துகொள்கின்றோமா? நம்மைத் தேடி வருகின்ற இறைவனைக் கண்டுகொள்கின்றோமா? என்று சிந்தித்துப் பார்க்கவேண்டும். பல நேரங்களில் இஸ்ரயேல் மக்களைப் போன்று, இறைவன் நம்மைத் தேடிவருவதை அறிந்துகொள்ளாமல், அவருடைய வார்த்தைக்குச் செவி கொடுக்காமல் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். இந்நிலையை மாற்றி, நம்மைத் தேடிவருகின்ற இறைவனை அறிந்து, அவருடைய வார்த்தைகளின் படி நடப்பது எப்போது?.
ஆகவே, நம்மைத் தேடிவருகின்ற இறைவனை அறிந்து, அவருடைய வார்த்தைகளின் படி நடப்போம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.
– மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
Source: New feed