என்னிடம் வாருங்கள். நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன்.
மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 11: 25-30
அக்காலத்தில்
இயேசு, “தந்தையே, விண்ணுக்கும் மண்ணுக்கும் ஆண்டவரே, உம்மைப் போற்றுகிறேன். ஏனெனில் ஞானிகளுக்கும் அறிஞர்களுக்கும் இவற்றை மறைத்துக் குழந்தைகளுக்கு வெளிப்படுத்தினீர். ஆம் தந்தையே, இதுவே உமது திருவுளம்.
என் தந்தை எல்லாவற்றையும் என்னிடத்தில் ஒப்படைத்திருக்கிறார். தந்தையைத் தவிர வேறு எவரும் மகனை அறியார்; மகனும் அவர் யாருக்கு வெளிப்படுத்த வேண்டும் என்று விரும்புகிறாரோ அவருமன்றி வேறு எவரும் தந்தையை அறியார்” என்று கூறினார்.
மேலும் அவர், “பெருஞ்சுமை சுமந்து சோர்ந்திருப்பவர்களே, எல்லாரும் என்னிடம் வாருங்கள், நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன். நான் கனிவும் மனத்தாழ்மையும் உடையவன். ஆகவே என் நுகத்தை உங்கள் மேல் ஏற்றுக்கொண்டு என்னிடம் கற்றுக்கொள்ளுங்கள். அப்பொழுது உங்கள் உள்ளத்திற்கு இளைப்பாறுதல் கிடைக்கும். ஆம், என் நுகம் அழுத்தாது; என் சுமை எளிதாயுள்ளது” என்றார்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
———————————————-
இறந்த நம்பிக்கையாளர் அனைவர் நினைவு
மறையுரைச் சிந்தனை (நவம்பர் 02)
1644 ஆம் ஆண்டு பிரான்ஸ் நாட்டில் நிமோர்ஸ் என்ற ஒரு நிலபிரபு இருந்தான். அவனுக்கும், இன்னொரு நிலபிரபுவுக்கும் அடிக்கடி சண்டை வந்துகொண்டே இருந்தது. ஒருநாள் கோபம் தாங்காமல் நிமோர்ஸ் என்ற அந்த நிலபிரபு எதிரியின் மீது படையெடுத்துச் சென்றான். இருவருக்குமான சண்டை நீண்டநேரம் நீடித்தது. இறுதியில் நிமோர்ஸ் தலைவெட்டப்பட்டு கொல்லப்பட்டான்.
இதனைக் கேள்விப்பட்ட மக்கள் அருட்சாதனம் எதுவும் பெறாமல், பாவ மன்னிப்புப் பெறாமல் இறந்ததால் நிமோர்ஸ் நிச்சயம் நரகத்திற்குத்தான் போவான் என்று பேசிக்கொண்டார்கள்.
அந்நேரத்தில் இறை ஏவுதலால் அங்கு வந்த மேரிமார்டிக்னேட் என்ற அருட்சகோதரி, “நிமோர்ஸ் தான், இறப்பதற்கு முன்பாக தன்னுடைய தவறை உணர்ந்து மன்னிப்புக் கேட்டதாலும், மக்கள் அவனுக்காக இறைவனிடம் வேண்டியதாலும் அவன் நரகம் செல்வதிலிருந்து காப்பாற்றப்பட்டான்” என்றார். தொடர்ந்து அந்த அருட்சகோதரி அவர்களிடம், மக்களாகிய உங்கள் ஒவ்வொருவரின் ஜெபத்தினால்தான் நிமோர்ஸ் நரகத் தண்டனையிலிருந்து மீட்கப்பட்டு, உத்தரிக்கிற தலத்தில் ஆன்ம தூய்மைக்காக வைக்கப்பட்டிருக்கிறான்” என்றார். அதைக்கேட்ட மக்கள் அனைவரும் மிகவும் மகிழ்ச்சியடைந்து, இறைவனைப் போற்றிப் புகழ்ந்தனர்.
இறந்த ஒருவருக்காக நாம் ஜெபிக்கின்றபோது அவருடைய பாவங்கள் மன்னிக்கப்பட்டு, அவர் இறைவனின் பேரின்ப வீட்டிற்குள் ஏற்றுக்கொள்ளப்படுவார் என்பதை இந்த நிகழ்வானது நமக்கு எடுத்துக்கூறுகின்றது.
இன்று திருச்சபையானது இறந்த அனைத்து விசுவாசிகளின் நினைவுநாளைக் கொண்டாடுகின்றது. இந்த நல்ல நாளிலே நம்முடைய குடும்பங்களில், சமுதாயத்தில் வாழ்ந்து மரித்த அனைத்து ஆன்மாக்களுக்காக அதிலும் சிறப்பாக உத்தரிக்கிற தலத்தில் இருக்கக்கூடிய ஆன்மாக்களுக்காக ஜெபிக்க அழைக்கப்படுகின்றோம்.
திருச்சபைத் தலைவர்கள் மூன்றுவிதமான திருச்சபை இருப்பதாக சொல்வார்கள். முதலாவது மீட்கப்பட்ட அல்லது வெற்றிபெற்ற திருச்சபை (Triumphant Church), இரண்டாவது பயணமாகும் திருச்சபை (Pilgrim Church), மூன்றாவது போராடும் திருச்சபை ( Suffering Church). மீட்கப்பட்ட திருச்சபை என்பது விண்ணகத்தையும், பயணமாகும் திருச்சபை என்பது மண்ணகத்தையும், துன்புறும் திருச்சபை என்பது உத்தரிக்கும் தலத்தில் இருக்கும் ஆன்மாக்களைக் குறிக்கின்றது. இதில் பயணமாகும் திருச்சபையில் இருக்கும் நாம் துன்புறும் திருச்சபையில் இருக்கும் உத்தரிக்கும் ஆன்மாக்களுக்காக ஜெபிக்க அழைக்கப்படுகின்றோம். ஏனெனில் அவர்கள் நம்முடைய ஜெபஉதவியை நாடி நிற்கின்றார்கள். நாம் அவர்களுக்காக ஜெபிக்கின்றபோது இறைவன் அவர்களது குற்றங்களை மன்னித்து, அவர்களை விண்ணகத்தில் ஏற்றுக்கொள்வார்.
இன்று நாம் கொண்டாடும் இறந்த விசுவாசிகளின் நினைவு நாள் விழாவானது கி.பி. 962 ஆம் குளூனி என்ற இடத்தில் வாழ்ந்த ஒடில்லோ என்ற துறவியால் நவம்பர் மாதம் இரண்டாம் தேதியானது நினைவுகூர்ந்து கொண்டாடப்பட்டு, பின்னர் அது எல்லாத் துறவற சபைகளுக்கும் பரவியது. பதினான்காம் நூற்றாண்டில் இருந்துதான் இவ்விழா உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகின்றது. ஆனால் விவிலியத்திலே மக்கபேயர் காலத்திலிருந்தே இறந்தவர்களுக்காக பாவப்பரிகார பலிகள் ஒப்புக்கொடுக்கும் வழக்கம் இருந்துவருவதை வாசிக்கின்றோம் (2 மக் 12:42-46).
இவ்விழா நாளிலே இன்று நாம் படிக்கக்கேட்ட வாசகங்கள் நமக்கு என்ன செய்தியைத் தருகிறது என்று சிந்தித்துப் பார்ப்போம். இறைவாக்கினர் எசாயாப் புத்தகத்திலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய முதல் வாசகத்தில், கடவுள் இஸ்ரயேல் மக்கள்மீது கிடந்த துயரத்தின் முக்காட்டை, துன்பத்தைத், சாவை, கண்ணீரை, நிந்தனையைத் துடைத்துவிட்டு, புதுவாழ்வு தருவதாக வாக்களிக்கின்றார். இதனை இயேசு நற்செய்தி வாசகத்தில் நயின் நகரக் கைம்பெண்ணின் இறந்த மகனை உயிர் பெற்றெழச் செய்வதன் வழியாக நிரூபித்துக் காட்டுகின்றார். ஆம், ஆண்டவராகிய இயேசு தன்னுடைய பாடுகள், சிலுவைச்சாவின் வழியாக சாவை வென்று நமக்குப் புதுவாழ்வு தருகின்றார். அதனால்தான் பவுலடியார் கொரிந்தியருக்கு எழுதிய முதல் திருமுகம் 15:55 ல் கூறுகின்றார், “சாவே உன் வெற்றி எங்கே? சாவே உன் கொடுக்கு எங்கே?” என்று.
ஆதலால் இயேசு தன்னுடைய பாடுகளின் வழியாக மரணத்தை வென்றதால் நாம் மரணத்தைக் குறித்து கவலைப்படத் தேவையில்லை. இதுவே இறைவார்த்தை நமக்குத் தரும் முதன்மையான சிந்தனையாக இருக்கின்றது.
இரண்டாவதாக நாம் பாவிகளாக இருந்தபோதும் இயேசு நம்மீது கொண்ட அளவுகடந்த அன்பினால் நமக்காக உயிரைத் தந்தார் என்று சொன்னால், நாமும் அளவு கடந்த விதத்தில் அன்புகொண்டு ஒருவர் மற்றவருக்காக வாழவேண்டும் என்பதே நாம் புரிந்துகொள்ளக்கூடிய காரியமாக இருக்கின்றது.
இப்படி நாம் ஒருவர் மற்றவருக்காக வாழும்போதுதான் நாம் இறைவன் தரும் விண்ணரசைப் பெறமுடியும்.
நாம் அப்படி பிறருக்காக தியாக மனப்பான்மையோடு வாழ்கிறோமா என்று சிந்தித்துப் பார்க்கவேண்டும். கவிஞர் சிற்பி பாலசுப்ரமணியம் ஒருமுறைக் கூறினார், “சொர்க்கமும், நரகமும் நம் வாழ்க்கையில் தான் இருக்கின்றன. எப்போது மனம் நிறைவு அடைகின்றதோ அப்போது முக்தியை அடைந்துவிட்டோம் என்று பொருள். இந்த முக்தியை, மனநிறைவை மக்களுக்குச் சேவை செய்வதில்தான் காணமுடியும்” என்று குறிப்பிடுகின்றார். ஆம், நாம் பிறருக்கு சேவை செய்கிறபோதுதான் முக்தியை, சொர்க்கத்தை அடையமுடியும் என்பது கவிஞர் சிற்பியின் அருமையான கருத்து.
ஒரு கிராமத்திலே தச்சர் ஒருவர் வாழ்ந்துவந்தார். ஒருநாள் அவரிடம் வானதூதர் ஒருவர் வந்து, “உன் வாழ்நாட்கள் முடிந்துவிட்டது, சொர்க்கம் செல்வதற்கு நேரம் வந்துவிட்டது” என்றுசொல்லி அழைத்துப் போக வந்தார். அதற்கு அந்த தச்சர், “ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு இப்போதுதான் ஊரில் மழை பெய்ய ஆரம்பித்திருக்கிறது. அதனால் நிலத்தை உழ ஆரம்பித்திருக்கும் விவசாயிகளுக்கு கலப்பை செய்து தந்துவிட்டு, பின்னர் வருகிறேன்” என்றார். உடனே வானதூதர் அவ்விடத்திலிருந்து அகன்றார்.
மூன்று மாதங்களுக்குப் பிறகு மீண்டுமாக அந்த வானதூதர் அவரிடம் வந்து, அவரை சொர்க்கத்திற்கு அழைத்துப் போக வந்தார். ஆனால் அவரோ, “இப்போதுதான் உழவர்கள் வயலில் உழ ஆரம்பித்திருக்கிறார்கள். ஆதலால் அவர்களுக்கு மாட்டுவண்டி செய்து தந்துவிட்டு, வருகிறேன்” என்றார். இதைக்கேட்டதும் வானதூதர் அவ்விடம் இருந்து அகன்றார். மீண்டுமாக மூன்றுமாதம் கழித்து அவரை அழைத்துப் போக வானதூதர் அவரிடம் வந்தார். அதற்கு அந்த தச்சர், “இன்னும் மண்வெட்டி மட்டும் செய்துகொடுத்துவிட்டால் என்னுடைய வேலை முடிந்துவிடும். அப்புறம் நானே வந்துவிடுகிறேன்” என்று கெஞ்சிக்கொண்டார். அவரது வேண்டுதலைக் கேட்டு வானதூதர் அங்கே இருந்து அகன்றார்.
அடுத்த மூன்று மாதம் கழித்து மீண்டுமாக வானதூதர் அவரிடம் வந்தார். அப்போது தச்சர், “நான் விவசாயிகளுக்குத் தேவையான கலப்பை, மாட்டுவண்டி, மண்வெட்டி எல்லாவற்றையும் செய்து தந்துவிட்டேன். இப்போது என்னை நீங்கள் சொர்க்கத்திற்க்கு அழைத்துக்கொண்டு போகலாம்” என்றார். அதற்கு அந்த வானதூதர் வேண்டாம் என்று சொன்னது. அவர் ஏன் என்று அதனிடம் கேட்டதற்கு, “எல்லாருக்கும் நீ உதவிசெய்து வாழ்வதால் இந்த மண்ணுலகமே உனக்கு சொர்க்கம், ஆதலால் எதற்கு உனக்கு இன்னொரு சொர்க்கம்” என்று சொல்லி, அவ்விடத்திலிருந்து அகன்றது.
உண்மையான அன்போடு எல்லாருக்கும் உதவிசெய்து வாழ்ந்தால் நாம் வாழும் இடமே சொர்க்கம்தான்.
ஆகவே இறந்த அனைத்து ஆன்மாக்களுடைய நினைவுநாளைக் கொண்டாடும் வேளையில் இறந்த அவர்களுக்காக ஜெபிப்போம். அத்தோடு நாம் வாழும் இந்த மண்ணுலக வாழ்வை அர்த்தமுள்ளதாக்குவோம். அன்பு செய்து வாழ்வோம். அதன் வழியாக இறைவன் தரும் விண்ணக மகிமையைப் பெறுவோம்.
Source: New feed