ஆண்டவரே, நான் மீண்டும் பார்வை பெற வேண்டும்.
லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 18: 35-43
அக்காலத்தில்
இயேசு எரிகோவை நெருங்கி வந்தபோது, பார்வையற்ற ஒருவர் வழியோரமாய் உட்கார்ந்து பிச்சையெடுத்துக் கொண்டிருந்தார். மக்கள் கூட்டம் கடந்து போய்க்கொண்டிருந்ததைக் கவனித்த அவர், “இது என்ன?” என்று வினவினார். நாசரேத்து இயேசு போய்க்கொண்டிருக்கிறார் என்று அவருக்குத் தெரிவித்தார்கள்.
உடனே அவர், “இயேசுவே! தாவீதின் மகனே, எனக்கு இரங்கும்” என்று கூக்குரலிட்டார். முன்னே சென்றுகொண்டிருந்தவர்கள் அமைதியாய் இருக்குமாறு அவரை அதட்டினார்கள். ஆனால் அவர், “தாவீதின் மகனே, எனக்கு இரங்கும்” என்று இன்னும் உரக்கக் கத்தினார்.
இயேசு நின்று, அவரைத் தம்மிடம் கூட்டிக்கொண்டு வரும்படி ஆணையிட்டார்.
அவர் நெருங்கி வந்ததும், “நான் உமக்கு என்ன செய்ய வேண்டும் என விரும்புகிறீர்?” என்று இயேசு கேட்டார். அதற்கு அவர், “ஆண்டவரே, நான் மீண்டும் பார்வை பெற வேண்டும்” என்றார். இயேசு அவரிடம், “பார்வை பெறும்; உமது நம்பிக்கை உம்மை நலமாக்கிற்று” என்றார்.
அவர் உடனே பார்வை பெற்று, கடவுளைப் போற்றிப் புகழ்ந்து கொண்டே இயேசுவைப் பின்பற்றினார். இதைக் கண்ட மக்கள் யாவரும் கடவுளைப் புகழ்ந்தனர்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
———————————————–
லூக்கா 18: 35-43
இயேசுவை நோக்கிக் கூக்குரலிட்ட பார்வையற்றவர்
நிகழ்வு
துறவி ஒருவர் இருந்தார். இவரிடம் ஆலோசனை கேட்பதற்காகப் பலரும் இவருடைய இருப்பிடத்திற்கு வந்து போனார்கள். ஒருநாள் இவரைச் சந்திக்க இளைஞன் ஒருவன் வந்தான். அவன் இவரிடம், “சுவாமி! எனக்கு பாவச் சோதனைகள் அடிக்கடி வருகின்றன. அவற்றை நான் வெற்றிகொள்வதற்கு என்ன செய்யவேண்டும்?” என்றான். அதற்குத் துறவி அவனிடம், “உன்னுடைய கேள்விக்கு என்னிடத்தில் பதில் இல்லை” என்றார். இளைஞன் மீண்டுமாக இவரிடம், “சுவாமி! எனக்குக் கட்டுப்படுத்த முடியாத அளவுக்குச் சினம் வருகின்றது. எனக்கு வரும் இப்படிப்பட்ட சினத்தைக் கட்டுப்படுத்த வழி சொல்லுங்கள்” என்றான். அப்பொழுதும் துறவி அவனிடம், “உன்னுடைய கேள்விக்கு என்னிடத்தில் பதில் இல்லை” என்றார்.
இளைஞன் விடவில்லை. “சுவாமி! என்னைச் சுற்றி வாழ்வோரோடு என்னால் நல்லுறவோடு இருக்க முடியவில்லை. நான் அவர்களோடு நல்லுறவோடு இருக்க நீங்கள்தான் வழி சொல்லவேண்டும்” என்றான். இதற்கும் துறவி, “உன்னுடைய கேள்விக்கு என்னிடத்தில் பதிலில்லை” என்றார். இதனால் சினமடைந்த அந்த இளைஞன், “சுவாமி! நான் உங்களிடத்தில் என்ன கேள்வியைக் கேட்டாலும், ‘உன்னுடைய கேள்விக்கு என்னிடத்தில் பதில்லை’ என்றே சொல்கின்றீர்களே! ஒருவேளை என்னுடைய கேள்விகளுக்குப் பதிலே இல்லையா…?” என்றான். “உன்னுடைய கேள்விக்கு என்னிடத்தில் பதிலில்லை என்றுதான் நான் சொன்னேனே ஒழிய, உன்னுடைய கேள்விக்குப் பதிலே இல்லை என்று சொல்லவில்லை. இறைவன் எனக்கு மட்டும் சொந்தமானவரில்லை; அவர் எல்லாருக்கும் சொந்தமானவர். அதனால் நீ உன்னுடைய கேள்விகளை அவரிடம் எழுப்பு. அவர் உனக்குப் பதில் தருவார்” என்று தீர்க்கமாகச் சொன்னார் துறவி.
துறவியின் வார்த்தைகளில் இருந்த உண்மையை உணர்ந்த அந்த இளைஞன் அவனாகவே இறைவனை நோக்கிக் கூக்குரலிட்டு, தன்னுடைய கேள்விகளுக்காக விடைகளைக் கண்டுகொண்டான்.
ஆம், இந்த நிகழ்வில் வருகின்ற இளைஞன் இறைவனை நோக்கிக் கூக்குரலிட்டுத் தன்னுடைய கேள்விகளுக்காக விடைகளைக் கண்டுகொண்டான். நற்செய்தியில் வருகின்ற பார்வையற்ற மனிதரும், “தாவீதின் மகனே! எனக்கு இரங்கும்” என்று இயேசுவை நோக்கிக் கூக்குரலிட்டு பார்வை பெறுவதைக் குறித்து வாசிக்கின்றோம். அதை குறித்து இப்பொழுது நாம் சிந்தித்துப் பார்ப்போம்.
இறைவனை நோக்கிக் கூக்குரலிட்ட பார்வையற்றவர்
இயேசு எருசலேமை நோக்கிச் சென்றுகொண்டிருக்கின்றார். அவர் எரிக்கோவை நெருங்கி வருகின்ற நேரத்தில், பாதையோரமாய் உட்கார்ந்து, பிச்சை எடுத்துக்கொண்டிருந்த மனிதர், இயேசு அப்பக்கமாய் வருவதைக் குறித்துக் கேள்விப்பட்டு, “தாவீதின் மகனே, எனக்கு இரங்கும்” என்று கூக்குரலிடுகின்றார். பொதுவாக யூத இரபிகள் தங்களுடைய பயணத்தின்பொழுதுதான் தங்களுடைய சீடருக்கும் மக்களுக்கும் கற்பிப்பார்கள். இயேசுவும் அவ்வாறுதான் எருசலேம் நோக்கிய தன்னுடைய பயணத்தில் கற்பித்துக்கொண்டு வந்திருக்கவேண்டும்.
இந்த நிலையில்தான் நற்செய்தியில் வருகின்ற பார்வையற்ற மனிதர் இயேசுவை நோக்கிக் கூக்குரலிடுகின்றார்; மக்கள் அவரை அதட்டியபொழுது, அவர் இயேசுவை நோக்கி உரக்கக் கத்தத் தொடங்குகின்றார்.
பார்வையற்றவரின் கூக்குரலுக்குச் செவி சாய்த்த இயேசு
தன் மக்கள் தன்னை நோக்கிக் கூக்குரலிடும்பொழுது தந்தையாம் கடவுள் அவர்களுடைய கூக்குரலுக்குச் செவிசாய்க்கின்றார் என்று திருவிவிலியத்தின் பல இடங்களில் நாம் வாசிக்கின்றோம் (நெகே 9:9; தானி (இ) 2: 44) நற்செய்தியில் வருகின்ற பார்வையற்ற மனிதர் நம்பிக்கையோடு தன்னை நோக்கிக் கூக்குரலிட்டதைக் கேட்ட இயேசு, அவருடைய கூக்குரலுக்குச் செவிசாய்த்து, அவரிடம், “நான் உமக்கு என்ன செய்ய வேண்டும் என விரும்புகிறீர்?” என்று கேட்டு, அவர் விரும்பியதுபோன்று அவருக்குப் பார்வையளிக்கின்றார்.
ஆம், நாம் இறைவனை நோக்கிக் கூக்குரலிடும்பொழுது அவர் நம்முடைய கூக்குரலுக்குச் செவிசாய்த்து, நம்முடைய தேவைகளைப் பூர்த்திசெய்கின்றார். ஆகையால், நாம் இறைவனை நோக்கி நம்பிக்கையோடு கூக்குரலிடுவோம். அதே நேரத்தில் நற்செய்தியில் வருகின்ற பார்வையற்ற மனிதரைப் போன்று, கடவுள் நமக்குச் செய்த நன்மைகளுக்கு நன்றியாக, அவரைப் பின்தொடர்ந்து நடப்போம்.
சிந்தனை
‘தாம் தேர்ந்துகொண்டவர்கள் அல்லும் பகலும் தம்மை நோக்கிக் கூக்குரலிடும்போது கடவுள் அவர்களுக்கு நீதி வழங்காமல் இருப்பாரா?’ (லூக் 18: 7) என்பார் இயேசு. ஆகையால், நாம் நம்முடைய துன்பவேளையில் மட்டுமல்லாது, எல்லா வேளையிலும் இறைவனை நோக்கிக் கூக்குரலிடும். நிச்சயம் அவர் நம்முடைய கூக்குரலுக்குச் செவி சாய்ப்பார். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.
Source: New feed