தாம் தேர்ந்துகொண்டவர்களுக்கு கடவுள் நீதி வழங்காமல் இருப்பாரா?
லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 18: 1-8
அக்காலத்தில்
மனந்தளராமல் எப்பொழுதும் இறைவனிடம் மன்றாட வேண்டும் என்பதற்கு இயேசு ஓர் உவமை சொன்னார். “ஒரு நகரில் நடுவர் ஒருவர் இருந்தார். அவர் கடவுளுக்கு அஞ்சி நடப்பதில்லை; மக்களையும் மதிப்பதில்லை.
அந்நகரில் கைம்பெண் ஒருவரும் இருந்தார். அவர் நடுவரிடம் போய், ‘என் எதிரியைத் தண்டித்து எனக்கு நீதி வழங்கும்’ என்று கேட்டுக் கொண்டேயிருந்தார். நடுவரோ, நெடுங்காலமாய் எதுவும் செய்ய விரும்பவில்லை.
பின்பு அவர், ‘நான் கடவுளுக்கு அஞ்சுவதில்லை; மக்களையும் மதிப்பதில்லை. என்றாலும் இக்கைம்பெண் எனக்குத் தொல்லை கொடுத்துக்கொண்டிருப்பதால் நான் இவருக்கு நீதி வழங்குவேன். இல்லையானால் இவர் என் உயிரை வாங்கிக்கொண்டேயிருப்பார்’ என்று தமக்குள்ளே சொல்லிக்கொண்டார்.”
பின் ஆண்டவர் அவர்களிடம், “நேர்மையற்ற நடுவரே இப்படிச் சொன்னார் என்றால், தாம் தேர்ந்துகொண்டவர்கள் அல்லும் பகலும் தம்மை நோக்கிக் கூக்குரலிடும்போது கடவுள் அவர்களுக்கு நீதி வழங்காமல் இருப்பாரா? அவர்களுக்குத் துணை செய்யக் காலம் தாழ்த்துவாரா? விரைவில் அவர்களுக்கு நீதி வழங்குவார் என நான் உங்களுக்குச் சொல்கிறேன். ஆயினும் மானிடமகன் வரும்போது மண்ணுலகில் நம்பிக்கையைக் காண்பாரோ?” என்றார்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
————————————————
லூக்கா 18: 1-8
“இன்பமான வாழ்வைத் தரும் இடைவிடாத இறைவேண்டல்”
நிகழ்வு
‘Gospel Herald’ என்ற சஞ்சிகையில் வெளிவந்த ஒரு சிறிய நிகழ்வு.
ஊர் மக்களால் பெரிதும் மதிக்கப்பட்ட பெரியவர் ஒருவர் இருந்தார். அவரிடம் இருந்த பொறுமையையும் பெருந்தன்மையையும் கண்டு வியக்காதே ஆளே இல்லை. இந்தப் பெரியவர் இருந்த அதே ஊரில் இளைஞன் ஒருவன் இருந்தான். அவன் எதற்கெடுத்தாலும் எல்லார்மீதும் எரிந்து எரிந்து விழுந்தான். தனக்கு வரும் இந்தக் கட்டுக் கடங்காத சினத்தைக் குறைப்பதற்கு அவன் என்னவெல்லாமோ செய்து பார்த்தான்; எதுவும் அவனுக்குப் பலன் கொடுக்கவில்லை.
இந்நிலையில்தான் அவன் பெரியவரைப் பற்றிக் கேள்விப்பட்டான். ஒருநாள் அவன் பெரியவரிடம் வந்து, தன்னுடைய பிரச்சனையை எடுத்துச் சொன்னான். அதற்குப் பெரியவர் அவனிடம், “எப்பொழுதெல்லாம் உனக்குக் கட்டுக்கடங்காத சினம் வருகின்றதோ, அப்பொழுதெல்லாம் நீ இரண்டு முதன்மையான செயல்களைச் செய்யவேண்டும். ஒன்று, இறைவனிடத்தில் வேண்டவேண்டும். இரண்டு, அமைதியாகப் பேசவேண்டும். இந்த இரண்டு செயல்களையும் நீ உனக்குக் கட்டுக் கடங்காத சினம் வருகின்றபொழுது செய்து வந்தால், சினமே வராது” என்றார்.
பெரியவர் சொன்ன இந்த அறிவுரையைக் கருத்தூன்றிக் கேட்டுக்கொண்ட அந்த இளைஞன், அதன்பிறகு தனக்கு எப்பொழுதெல்லாம் கட்டுக்கடங்காத சினம் வந்ததோ, அப்பொழுதெல்லாம் அவன் பெரியவர் சொன்ன இரண்டு செயல்களைத் தொடர்ந்து செய்து வந்தான். இதனால் அவனுக்குச் சினம் வருவது அடியோடு நின்றது.
ஆம், அந்த இளைஞன் பெரியவர் தன்னிடத்தில் சொன்னதுபோன்று, எப்பொழுதெல்லாம் தனக்குக் கட்டுக் கடங்காத சினம் வந்ததோ, அப்பொழுதெல்லாம் அவன் இறைவனிடம் வேண்டிவிட்டு, அமைதியாகப் பேசியதால், அவனுக்குச் சினம் வரவே இல்லை. வழக்கமாக மனிதர்கள் தங்களுக்குச் சினம் வருகின்றபொழுது சத்தமாகப் பேசுவார்கள்; ஆனால், அந்த இளைஞன் இறைவனிடம் வேண்டிவிட்டு அமைதியாகப் பேசியதால், அவனுக்குச் சினம் வரவே இல்லை.
மேலே சொல்லப்பட்ட நிகழ்வில் வருகின்ற இளைஞன் இறைவனிடம் இறைவிடாது வேண்டினான்; கூடவே அமைதியாகப் பேசினான். இதனால் அவனுக்குச் சினம் வரவில்லை. மாறாக, இன்பமான வாழ்க்கை அமைந்தது. நாமும் இறைவனிடம் இடைவிடாது வேண்டினால், நம்முடைய வாழ்க்கையில் வரும் இன்னல்கள் மறைந்து, இன்பமான வாழ்க்கையை அமையும். அதை இன்றைய நற்செய்தி வாசகத்தில் ஆண்டவர் இயேசு ஓர் உவமையின் வழியாக மிக அழகாக எடுத்துக்கூறுகின்றார். அதைக் குறித்து நாம் சிந்தித்துப் பார்ப்போம்
நேர்மையற்ற நடுவரும், கைம்பெண்ணும்
இன்றைய நற்செய்தியில் ஆண்டவர் இயேசு, நாம் மனந்தளராமல் எப்பொழுதும் இறைவனிடம் மன்றாடவேண்டும் என்ற உண்மையை உணர்த்துவதற்காக நேர்மையற்ற நடுவர், கைம்பெண் என்ற உவமையைச் சொல்கின்றார். இந்த நேர்மையற்ற நடுவர், கடவுளுக்கும் அஞ்சாமல், மனிதருக்கும் அஞ்சாமல் இருக்கின்றார். கடவுளுக்கு அஞ்சி வாழ்ந்தால்தானே நேர்மையோடு இருக்கவேண்டும்; உண்மையாய் வாழவேண்டும் என்ற எண்ணம் ஏற்படும். இந்த நடுவருக்கோ இறையச்சமே இல்லாததால், நேர்மையும் இல்லை; அடுத்தவர்மீது இரக்கமும் இல்லை. இப்படிப்பட்ட நடுவரிடம்தான் தன் கணவரை இழந்த கைம்பெண் தனக்கு நீதி கிடைக்கவேண்டும் என்று போராடுகின்றார்.
யூதச் சமூகத்தில் கைம்பெண்களின் நிலை மிகவும் பரிதாபமானது. எந்தவோர் ஆதரவுமில்லாமல் இருந்த அவர்களை மற்றவர்கள் மிகவும் வஞ்சிக்கும் நிலை இருந்தது (லூக் 20: 47). இந்த நிலையிலும் கைம்பெண் நேர்மையற்ற நடுவரிடமிருந்து தனக்கான நீதியைப் பெறுகின்றார்.
தம்மை நோக்கிக் கூக்குரலிடுவோருக்கு நீதி வழங்கும் இறைவன்
ஆண்டவர் இயேசு இந்த உவமையைச் சொல்லிவிட்டு, “நேர்மையற்ற நடுவரே இப்படிச் சொன்னாரென்றால், தாம் தேர்ந்துகொண்டவர்கள் அல்லும் பகலும் தம்மை நோக்கிக் கூக்குரலிடும்போது கடவுள் அவர்களுக்கு நீதி வழங்காமல் இருப்பாரோ?” என்று கூறுகின்றார். இங்கு நாம் கடவுளை நேர்மையற்ற நடுவரோடு ஒப்பிடக்கூடாது. காரணம், கடவுள் நேர்மையுள்ளவர், தன்னுடைய மக்கள்மீது மாறாத அன்பும் இரக்கமும் கொண்டிருப்பவர். அப்படிப்பட்டவர் தன் பிள்ளைகள் தன்னை நோக்கி மனந்தளராமல் மன்றாடுகின்றபொழுது, அவர்களுடைய வேண்டுதலை கேட்பவராக யுர்க்கின்றார்.
இங்கு நாம் இன்னொரு செய்தியையும் தெரிந்துகொள்ளவேண்டும். அது என்னவெனில், நாம் மகிழ்ச்சியாக இருக்கும்பொழுது இறைவனிடம் மனந்தளராது மன்றாடுவோம்; இக்கட்டான சூழ்நிலையில் அவரிடம் மனந்தளராமல் மன்றாடுவதில்லை. இயேசு, நாம் இக்கட்டான சூழ்நிலையிலும் கைம்பெண்ணைப் போன்று மனந்தளராமல் மன்றாடவேண்டும் என்கின்றார். ஆகையால், நாம் நம்மீது பேரன்பு கொண்டிருக்கும், நேர்மையுள்ள கடவுளிடம் மனந்தளராது மன்றாடி, அவர் தருகின்ற ஆசிகளை, இன்பமான வாழ்வைப் பெற்று மகிழ்வோம்.
சிந்தனை
‘இந்த ஏழைக் கூவியழைத்தான்; ஆண்டவர் அவனுக்குச் செவிசாய்த்தார்; அவர் எல்லா நெருக்கடியினின்றும் அவனை விடுவித்துக் காத்தார்’ (திபா 34: 6) என்பார் திருப்பாடல் ஆசிரியர். ஆகையால், நாம் இறைவனிடம் இறைவிடாது மன்றாடுவோம் அல்லது கூவியழைப்போம். நிச்சயம் அவர் நமக்குச் செவிசாய்ப்பார். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.
Source: New feed