பொதுக்காலம் எட்டாம் வாரம்
செவ்வாய்க்கிழமை
மாற்கு 10: 28-31
இறைப்பணி செய்வோருக்கு இறைவன் அளிக்கும் கைம்மாறு
நிகழ்வு
ஒரு தனியார் கல்லூரியில் பட்டப்படிப்பு முடித்த பிலிப் என்ற இளைஞன், நீண்டநாட்களாக வேலைதேடியும் கிடைக்காததால், நிம்மதி இழந்து, வாழ்க்கையை வெறுக்கத் தொடங்கினான். ஒருகட்டத்தில் தற்கொலை செய்து இறந்துவிடலாம் என்ற எண்ணத்தோடு கடற்கரையோர நடந்து சென்றுகொண்டிருந்தான்.
அப்பொழுது அவனுக்கு முன்னாலிருந்த பாலத்திலிருந்து, ஒரு பெண்மணி கடலுக்குள் குதிப்பதைக் கண்டு பதறிப்போய், இவனும் கடலுக்குள் குதித்து அந்தப் பெண்மணியை மீட்டு, கரையில் கொண்டுவந்து சேர்த்தான். அந்த பெண்மணியோ அவனிடம் “நீங்கள் ஏன் என்னைக் கடலிலிருந்து மீட்டர்கள்?” என்று கேட்டார். அவன் பதிலுக்கு எதுவும் பேசாது அமைதியாக இருந்தான். சிறிதுநேர இடைவெளிக்குப் பின் அந்தப் பெண்மணி தொடர்ந்தார், “உங்களுக்காவது என்மீது அக்கறை இருக்கிறதே… என்னுடன் வாருங்கள்” என்று பிலிப்பை ஓர் உணவகத்திற்கு அழைத்துக் கொண்டு போய், அவனுக்கு உணவு வாங்கிக்கொடுத்தார். அதன்பின்னர் அவனுடைய தேவை என்ன என்று கேட்டறிந்து, அவனுக்கு அந்த ஒரு வேலையும் போட்டுக் கொடுத்தாள். ஏனென்றால் அவள்தான் அந்த உணவகத்தின் உரிமையாளர்.
சாதாரண ஓர் உதவிக்கே கைம்மாறு கிடைக்கும்போது, இறைப்பணி செய்கின்ற ஒருவருக்கு இறைவன் கைம்மாறு அளிக்காமல் போவாரா? என்ன?… நிச்சயம் அளிப்பார் என்பதை இன்றைய நற்செய்தி வாசகம் எடுத்துக் கூறுகின்றது. நாம் அதைக் குறித்து சிந்தித்துப் பார்த்து நிறைவுசெய்வோம்.
எல்லாவற்றையும் விட்டுவிட்டு வந்த எங்களுக்கு என்ன கைம்மாறு கிடைக்கும்?
இப்படிப்பட்டவொரு கேள்வியை பேதுரு இயேசுவிடம் கேட்கின்றார். அவர் இவ்வாறு கேட்பதற்குக் காரணமில்லாமல் இல்லை. ஏனெனில், இதற்கு முந்தைய பகுதியில், தன்னிடம் வந்த செல்வந்தரிடம், இயேசு, “உமக்கு உள்ளவற்றை விற்று ஏழைகளுக்குக் கொடும்” என்பார். இங்கோ சீடர்கள் தங்களிடம் உள்ளதையெல்லாம் (!) விட்டுவிட்டு இயேசுவிடம் வந்திருந்தார்கள். அப்படிப்பட்டவர்களுக்கு ஏதாவது கைம்மாறு கிடைக்குமா? என்ற விதத்தில் பேதுரு இயேசுவிடம் கேள்வியைக் கேட்கின்றார். இயேசு அவர்களுக்குக் கைம்மாறு தருவதாக வாக்களிக்கின்றார்.
இயேசு தரும் கைம்மாறு
நற்செய்திக்காக சீடர்கள் எதை எதையெல்லாம் விட்டுவிட்டு வந்தார்களோ, அதையெல்லாம் நூறு மடங்காகத் திரும்பப் பெறுவார்கள். அவற்றோடு இன்னல்களையும் மறுமையில் நிலைவாழ்வையும் பெறுவார்கள் என்று வாக்களிக்கின்றார். இங்கு ஓர் உண்மையைப் புரிந்துகொள்ளவேண்டும். இயேசுவின் பணியைச் செய்கின்றவர்களுக்கு அவர் நிச்சயம் கைம்மாறு தருவார். இதில் எந்தவொரு மாற்றுக் கருத்தும் கிடையாது. ஆனால், கைம்மாறு கிடைக்கும் என்பதற்காக இறைப்பணியைச் செய்தாலோ அல்லது தேவையில் உள்ள ஒருவருக்கு ஒன்றைக் கொடுப்பதாலோ அதற்கு ஒருபோதும் கைம்மாறு கிடைக்காது.
இருபதாம் நூற்றாண்டில் வாழ்ந்த மிகச் சிறந்த தொழிலதிபரான R.J. LeTourneau என்பவர் ஒரு செய்தியைச் சொல்வார். “பின்னர் கிடைக்கும் என்று எதிர்பார்த்துக் கொடுப்பவருக்கு, ஒருபோதும் கைம்மாறு கிடைக்காது.” (If you give because it pays, It wont pay). இயேசுவின் சீடர்கள் மட்டும் கிடையாது, பலரும் இப்படி எதையும் எதிர்பார்த்துச் செய்கின்றார்கள். இப்படி எதிர்பார்த்துச் செய்வதனால் எந்தவொரு கைம்மாறு கிடைக்காது என்பதுதான் வேதனை கலந்த உண்மை.
பிரதிபலன் பாராது எந்தவொரு செயலையும் செய்யவேண்டும்
‘எல்லாவற்றையும் விட்டுவிட்டு உம்மைப் பின்பற்றி வந்தோமே, எங்களுக்கு என்ன கிடைக்கும்’ என்று பிரதிபலன் எதிர்பார்த்துக் கேட்கும் பேதுரு, ஒரு கட்டத்தில் தன்னுடைய சிந்தனையில் தெளிவுபெறுகின்றார். அதாவது, எந்தவொரு எதிர்பார்ப்பு இல்லாமல் பணிசெய்ய வேண்டும், கொடுக்கவேண்டும் என்ற மனநிலைக்கு வருகின்றார். “வெள்ளியும் பொன்னும் என்னிடமில்லை; என்னிடமுள்ளதை உமக்குக் கொடுக்கிறேன்” (திப 3:6) என்ற வார்த்தைகளில் பேதுருவின், எதிர்பார்ப்பில்லாமல் பணிசெய்யவேண்டும், கொடுக்கவேண்டும் என்ற எண்ணமானது வெளிப்படுகின்றது. பேதுரு அடைந்த இந்த மாற்றத்திற்கு ஒவ்வொருவரும் வரவேண்டும். அத்தகைய நிலைதான் உன்னதமான நிலையாகும்.
இதற்கு மாறாக, இன்றைக்குப் பலர் எதையும் ஏதோவோர் எதிபார்ப்போடு, பிரதிபலன் பார்த்துச் செய்வதைப் பார்க்கமுடிகிறது. இப்படிப்பட்டவர்களுக்கு ஆண்டவர் இயேசு சொல்கின்ற பதில், “உங்கள் வலக்கை செய்வது இடக்கைக்குத் தெரியாதிருக்கட்டும்” என்பதுதான். ஆகையால், இறைப்பணியாக இருந்தாலும், வேறு எந்த பணியாக இருந்தாலும் அதைப் பிரதிபலன் பார்க்காமல் செய்கின்ற பக்குவத்தைப் பெறுவோம். அதன்வழியாக இயேசுவின் அன்பு மக்களாவோம்.
சிந்தனை
‘எதையும் எதிர்பார்க்கமால் பணிசெய்வதே இறைவனுக்கு ஏற்ற பணியாகும்’. இவ்வுண்மையை உணர்ந்து, நாம் இறைப்பணி செய்வோம். அதன்வழியாக இறையருள் நிறைவாய்ப் பெறுவோம்.
Source: New feed