பாஸ்கா காலம் இரண்டாம் வாரம்
சனிக்கிழமை
யோவான் 6: 16-21
அஞ்சாதே… ஆண்டவர்க்கு எல்லாம் தெரியும்…
நிகழ்வு
நம்முடைய இந்தியத் திருநாட்டிற்கு ஆண்டவரின் நற்செய்தியை எடுத்துரைக்க வெளிநாட்டிலிருந்து வந்தவர் பலர். இதில் சிலர் மக்களுக்கு நன்று அறிமுகமானவர்கள். பலர் மக்களுக்கு அறிமுகமாகாதவர்கள். மக்களுக்கு அவ்வளவாக அறிமுகமாகாத, அதேநேரத்தில் மிகவும் சிறப்பான முறையில் நற்செய்திப் பணியைச் செய்தவர் எமி கார்மைக்கேல் (1867- 1951) என்பவர்.
இங்கிலாந்து நாட்டைச் சார்ந்த இவர், இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தமிழகத்திற்கு வந்து, ஆண்டவரின் நற்செய்தியை மிக அற்புதமாக எடுத்துரைத்து வந்தார். இப்படிப்பட்ட சமயத்தில் திடீரென்று நோய்வாய்ப்பட்டு படுத்த படுக்கையானார். இதற்குப் பின்பு நான்கு சுவர்களுக்குள்தான் இவருடைய வாழ்க்கை கழிந்தது. ஆனாலும் இவர் எதற்கும் அஞ்சாமல் மனவுறுதியோடு இருந்தார். அப்படி இவர் எதற்கும் அஞ்சாமல் மனவுறுதியோடு இருந்ததற்கு ஒரு காரணமும் இருந்தது. அதுதான் அவருடைய அறையில் பொறிக்கப்பட்டிருந்த ‘அஞ்சாதே’, ‘(ஆண்டவர்க்கு) எல்லாம் தெரியும்’ என்ற வார்த்தைகள் (Fear not, I know). இவ்விரண்டு வார்த்தைகள்தான் படுத்தபடுக்கையாய் கிடந்த எமி கார்மைக்கேல் என்ற நற்செய்திப் பணியாளர்க்கு மனவுறுதியைத் தந்தது.
இவரைப் பற்றி நாம் தெரிந்துகொள்ளவேண்டிய இன்னொரு விடயம் என்னவெனில், இவர் இந்தியாவில் பணிசெய்த ஐம்பது ஆண்டுகளில் ஒருமுறையேனும் தன்னுடைய நாடான இங்கிலாந்திற்குச் செல்லவில்லை என்பதேயாகும்.
நற்செய்திப்பணி செய்கையில் நோய்வாய்ப்பட்டுப் படுத்த படுக்கையானாலும், ‘அஞ்சாதே’ என்ற ஆண்டவரின் வார்த்தையை நம்பி மனவுறுதியோடு இருந்த எமி கார்மைக்கேல் நமக்கெல்லாம் ஒரு மிகச்சிறந்த எடுத்துக்காட்டு. இன்றைய நற்செய்தி வாசகத்திலும் ஆண்டவர் இயேசு, அஞ்சாதீர்கள் என்ற செய்தியைத்தான் சொல்கின்றார். அஞ்சாதே என்று இயேசு சொல்கின்ற வார்த்தை எத்துணை முக்கியத்துவம் வாய்ந்தது, இதன்வழியாக இயேசு நமக்குத் தரும் செய்தி என்ன என்று சிந்தித்துப் பார்ப்போம்.
அதிசயத்திற்குப் பின்னால் – அமைதிக்குப் பின்னால் – புயல்
இயேசு ஐயாயிரம் பேர்க்கு உணவளித்ததைத் தொடர்ந்து, மக்கள் அவரைப் பிடித்துக்கொண்டுபோய் அரசராக்கப்போகிறார்கள் என்பதை உணர்ந்த, அவர் அவர்களிடமிருந்து விலகித் தனியாய் மலைக்குச் செல்கின்றார். இன்னொரு பக்கம் சீடர்கள், நேரமானதும் மறுகரைக்குச் செல்லத் தொடங்குகிறார்கள். இப்படிப்பட்ட சமயத்தில்தான் கடலில் பெருங்காற்று வீசுகின்றது; புயல் அடிக்கின்றது.
இதில் நாம் கவனிக்கவேண்டிய விடயம் என்னவெனில், இயேசு அப்பங்களைப் பலுகச் செய்ததைத் தொடர்ந்து மக்கள் அவரைப் பிடித்துக்கொண்டு அரசராக்கப்போகிறார்கள் என்ற செய்தியைக் கேட்டு, ‘காசாளராக’ இருந்த யூதாஸ் இஸ்காரியோத்து மிகவும் மகிழ்ந்திருக்கக்கூடும். காரணம், மக்கள் இயேசுவைப் பிடித்துக்கொண்டு போய் அரசராக்கும் பட்சத்தில் தன்னைத்தான் இயேசு ‘நிதி அமைச்சராக’ நியமிப்பார் என்று அவர் நினைத்திருக்கலாம். திருத்தூதர்களின் தலைவராக இருந்த பேதுருவோ, இயேசு தன்னைத் முதன்மை மந்திரியாக – பிரதம மந்திரியாக – ஏற்படுத்துவார் என்று நினைத்திருக்கலாம். மற்ற சீடர்களும் இதற்கு விதிவிலக்கல்ல.
இப்படிப்பட்ட ஒரு கற்பனை உலகத்தில் தன்னுடைய சீடர்கள் இருந்துவிடக்கூடாது என்பதற்காக இயேசு, கடலில் ஏற்பட்ட புயலில் வழியாக, வாழ்க்கை என்பது ஏற்றங்களை மட்டும் கொண்டதில்லை இறக்கங்களையும் கொண்டது, இன்பத்தை மட்டும் கொண்டதில்லை, துன்பத்தையும் கொண்டது என்ற பாடத்தை அவர்களுக்குக் கற்பிக்கின்றார். பல நேரங்களில் நாமும் இயேசுவின் சீடர்களைப் போன்று வாழ்க்கையின் ஒரு பக்கத்தை மட்டும் பார்த்துக்கொண்டு, ‘இதுதான் வாழ்க்கை’ என்று நினைத்துக்கொண்டிருக்கின்றோம். இப்படிப்பட்ட சூழ்நிலையில்தான் இன்றைய நற்செய்தி வழியாக ஆண்டவர் இயேசு கூறுகின்ற ‘வாழ்க்கைக்கு இரண்டு பக்கங்கள் உண்டு’ என்ற செய்தி கவனிக்கத் தக்கதாக இருக்கின்றது.
ஆபத்தில் உதவி செய்ய வரும் இயேசு
யோவான் நற்செய்தியில் இடம்பெறும் இயேசு கடல்மீது நடந்துவரும் நிகழ்வு ஒவ்வொரு நற்செய்தியிலும் ஒவ்வொரு மாதிரியாக இடம்பெறுகின்றது. மத்தேயு நற்செய்தியில், இயேசு கடல்மீது நடந்து வந்ததைத் தொடர்ந்து, பேதுரு கடல்மீது நடந்து வருவதாகவும் (மத் 14: 28 -30) மாற்கு நற்செய்தியில் சீடர்கள் தண்டு வலிக்கப் பெரிதும் வருந்தியதைத் தொடர்ந்து இயேசு கடல்மீது நடந்து வருவதாகும் (மாற் 6:48) வருகின்றது. இதிலிருந்து நாம் ஒன்றை உறுதியாகச் சொல்லலாம். அது என்னவெனில், புயலில் பெரிதும் வருந்திய சீடர்களுக்கு உதவுவதற்காகத்தான் இயேசு அவர்களை நோக்கி வருகின்றார் என்பதாகும். சீடர்களை நோக்கி வரும் இயேசு, நான்தான் அஞ்சாதீர்கள் என்று சொல்லி அவர்களைத் திடப்படுத்துகின்றார்.
அன்று சீடர்களுக்கு உதவி புரியவும் அஞ்சாதீர்கள் என்று சொல்லித் தேற்றவும் செய்த இயேசு, இன்றைக்கு நமக்கு உதவி புரியவும் ஆறுதலான வார்த்தைகளைச் சொல்லி உறுதிபடுத்துவும் வருகிறார் என்பது உண்மை.
சிந்தனை
‘தூயகத்திலிருந்து அவர் உமக்கு உதவி அனுப்புவாராக! சீயோனிலிருந்து அவர் உனக்குத் துணை செய்வாராக’ (திபா 20:2) என்பார் திருப்பாடல் ஆசிரியர். ஆகவே, நாம் நமக்கு எப்போதும் உதவி செய்ய இறைவன் துணை இருக்கின்றார் என்ற நம்பிக்கையோடு, அஞ்சாது ஆண்டவரின் பணி செய்வோம். அதன்வழியாக இறையருள் நிறைவாய்ப் பெறுவோம்.
Source: New feed