பொதுக்காலம் முப்பத்து நான்காம் வாரம் புதன்கிழமை
திருவெளிப்பாடு 15: 1-4
கடவுளாகிய ஆண்டவரின் செயல்கள் பெரியன; வியப்புக்குரியன
நிகழ்வு
அக்பரும் காபுல் மன்னரும் மிக நெருங்கிய நண்பர்கள். ஒருமுறை காபுல் மன்னர் அக்பருக்கு இப்படியொரு கடிதம் எழுதினார்: “மேன்மை பொருந்திய மாமன்னரே! இதுவரை நான் உங்களிடம் கேட்டதையெல்லாம் நீங்கள் எனக்குத் தவறாது தந்திருக்கின்றீர்கள். இந்த முறையும் நான் கேட்பதைத் தவறாமல் தருவீர்கள் என்ற எனக்கு நம்பிக்கை இருக்கின்றது. இந்த முறை நீங்கள் எனக்கு ஒரு குடம் அதிசயம் தாருங்கள். இப்படிக்கு காபுல் மன்னர்.”
காபுல் மன்னரிடமிருந்து வந்திருந்த இந்தக் கடிதத்தைக் கண்டதும் மாமன்னர் அக்பர் துணுக்குற்றார். ‘மூன்று மாதங்களில் ஒரு குடம் நிறைய அதிசயா? அது எப்படி முடியும்?’ என்று குழம்பினார். அப்பொழுது அவருக்குப் பீர்பாலின் எண்ணம் வரவே, அவர் பீர்பாலை அழைத்து, நடந்த எல்லாவற்றையும் அவரிடம் சொன்னார். “மூன்று மாதங்களில் காபுல் மன்னருக்குக் குடம் நிறைய அதிசயம் வேண்டுமென்றால், நான் சொல்வது போன்று நீங்கள் செய்யவேண்டும்” என்றார் பீர்பால்.
மான்மன்னர் அக்பரும் அதற்குச் சரி என்று சொல்ல, பீர்பால் அவரிடம், “நன்றாக வளர்ந்திருக்கின்ற ஒரு பூசணிக் கொடியை வேரோடு பிடுங்கி, அதில் உள்ள ஒரு பூசணிப் பூவை குடத்திற்குள் வைக்கவேண்டும். அதன் வேரை, பூசணிக் கொடி வளர்வதற்கு ஏற்றாற்போல் ஒரு மாட்டு வண்டியில் மண்ணை நிரப்பி, அதில் பூசணிக் கொடியின் வேரை நட்டு வைத்துவிட்டு, அதைப் பராமரிப்பதற்காக மாட்டு வண்டியின் பக்க வாட்டியில், இரண்டு விவசாயிகளைப் பக்கத்திற்கு ஒருவராக நிறுத்திக்கொண்டு, மாட்டு வண்டியைக் காபுலை நோக்கி அனுப்பவேண்டும். இப்படிச் செய்தால், மூன்று மாதத்தில் காபுல் மன்னர் குடம் நிறைய அதிசயத்தைக் காண்பார்” என்றார். பின்னர் பீர்பால் தன்னிடம் சொன்னது போன்றே, மாமன்னர் அக்பரும் செய்து, கூடிவே ஒரு கடிதம் எழுதித் தன் பணியாளர்களிடம் கொடுத்து அனுப்பி வைத்தார்.
மூன்று மாதங்களில் அக்பர் அனுப்பி வைத்த மாட்டு வண்டி காபுல் மன்னரிடம் அரண்மனையை அடைந்தது. அவர் அக்பர் அனுப்பி வைத்திருந்த கடிதத்தைப் படித்துப் பார்த்தார். அதில் அவர் கேட்ட அதிசயம் இருக்கின்றது என்று எழுதப்பட்டிருந்தது. உடனே அவர் குடத்தைப் பார்த்தார். அதில் கொஞ்சம்கூட உடையாமல், சிதையாமல் பெரிய பூசணிக்காய் இருந்தது.
‘சின்ன வாயைக் கொண்ட இந்த குடத்திற்குள் இவ்வளவு பெரிய பூசணிக்காயா…? அதுவும் கொஞ்சம்கூடச் சிதையாமல்’ என்று அக்பரின் அறிவாற்றலையும், ஆண்டவர் புரிந்த அதிசயத்தையும் வியந்து பாராட்டினார் காபுல் மன்னர்.
ஆம், ஆண்டவர் செய்யும் ஒவ்வொரு செயலும் வியப்புக்குரியது; பெரியது. இன்றைய முதல் வாசகத்தில், ஆண்டவராகிய கடவுள் கொடிய வாதைகளை வெற்றிகொண்டதைத் தொடர்ந்து அல்லது அவற்றின்மீது கடவுளின் சீற்றம் முற்றிலும் தணிந்ததைத் தொடர்ந்து, விலங்கின்மீதும் அதன் சிலைமீதும் எண்ணால் குறிக்கப்பட்ட ஆள்கள்மீதும் வெற்றி பெற்றவர்கள், “உம் செயல்கள் பெரியன, வியக்குப்புரியன” என்று ஆண்டவருக்குப் பாடல் பாடுகின்றார்கள். திருவெளிப்பாடு நூலில் இடம்பெறும் இந்த நிகழ்வு நமக்கு என்ன செய்தியை எடுத்துச் சொல்கின்றது என்பதைக் குறித்து நாம் சிந்தித்துப் பார்ப்போம்.
ஏழு கொடிய வாதைகள்மீது வெற்றிகொள்ளும் ஆண்டவர்
இன்றைய முதல் வாசகத்தில், யோவான் காணக்கூடிய பெரியதும் வியப்புக்குரியதுமான அடையாளத்தில், ஆண்டவராகிய கடவுள் ஏழு கொடிய வாதைகளின் மீது வெற்றி கொள்வதை, அவற்றின்மீது அவரது சினம் தணிவதைக் குறித்து வாசிக்கின்றோம். இப்பகுதியை நாம் இன்னும் நன்றாகப் புரிந்துகொள்வதற்கு புனித பவுல் உரோமையருக்கு எழுதிய திருமுகத்தில் வருகின்ற வார்த்தைகளோடு இணைத்துச் சிந்தித்துப் பார்ப்பது நல்லது. “இறைப்பற்று இல்லாத மனிதர்களின் எல்லா வகையான நெறிகேடுகளின் மீதும் கடவுளின் சினம் விண்ணினின்று வெளிப்படுகின்றது. ஏனெனில் இவர்கள் தங்கள் நெறிகேட்டால் உண்மையை ஒதுக்கிவிடுகின்றார்கள்” (உரோ 1: 18) என்று நாம் அங்கு வாசிக்கின்றோம்.
இதன்மூலம் தீமை ஒருநாள் வெற்றிகொள்ளப்படும் என்ற உண்மை நமக்கு வெளிப்படுத்தப்படுகின்றது. இப்படியொரு வியப்புக்குரிய, பெரிய செயலை ஆண்டவர் செய்ததால்தான், விலங்கின்மீதும் சிலைமீதும் எண்ணால் குறிக்கப்பட்ட அந்த ஆள்மீதும் வெற்றி பெற்றவர்கள், ஆண்டவரின் செயல்கள் பெரியன. வியப்புக்குரியன என்று பாடுகின்றார்கள்
ஆண்டவரின் செயல்கள் எப்பொழுதும் வியப்புக்குரியனதான். அவரின் வல்லமையும் ஆற்றலும் இப்புவியில் வெளிப்பட, நாம் அவருடைய வழியில் நடப்பதே சிறந்தது. நாம் ஆண்டவரின் வழியில் நடக்கத் தயாரா?
சிந்தனை
‘பாவத்திற்கு எதிரான போராட்டத்தில் இரத்தம் சிந்தும் அளவுக்கு நீங்கள் இன்னும் எதிர்த்து நிற்கவில்லை’ (எபி 12: 4) என்பார் எபிரேயர் திருமுகத்தின் ஆசிரியர். ஆகையால், பெரியனவும் வியப்புக்குரியனவுமான செயல்களைச் செய்யும் ஆண்டவரின் வழியில், அல்லது பாவத்திற்கு எதிரான போராட்டத்தில் நாம் மனவுறுதியோடு தொடர்ந்து உழைப்போம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.
Source: New feed