பொதுக்காலம் முப்பத்து ஒன்றாம் வாரம் புதன்கிழமை
லூக்கா 14: 25-33
“யார் இயேசுவின் சீடர்?”
நிகழ்வு
மகாராஸ்டிரா மாநிலம் கோலாப்பூரைச் சார்ந்தவர் மோக்சேஷ் ஷா. தணிக்கையாளராகத் (Chartered Accountant) தன்னுடைய வாழ்க்கையைத் தொடங்கிய இவருக்கு இவர் எதிர்பார்த்ததைவிடவும் மிகுதியாகவே கையில் பணம் புரளத் தொடங்கியது இது ஒருபுறம் என்றால், இன்னொரு புறம் இவருடைய தந்தை மும்பையில் நடத்தி JK Corporation என்ற தொழில் நிறுவனத்தின் வழியாகவும் இவருக்கு ஏராளமாகப் பணம் வந்தது. ஏனென்றால், இவர்தான் தன் தந்தை நடத்தி வந்த தொழில் நிறுவனத்தின் கணக்கு வழக்குகளைத் தணிக்கை செய்துவந்தார்.
இப்படி இவருக்குத் தேவைக்கு மிகுதியாகப் பணம் வந்தபொழுதும், தன் வாழ்க்கையில் ஏதோவொன்று குறைவுபடுவதை இவர் உணர்ந்தார். அப்பொழுதுதான் இவருக்குள், ‘நான் ஏன் ஒரு துறவியாகப் போகக்கூடாது?’ என்ற எண்ணமானது உதித்தது. அதன்பிறகு அதாவது 2018 ஆம் ஆண்டு ஏப்ரல் திங்கள் 19 ஆம் ஆண்டு இவர் ஒரு சமணத் துறவியானார்.
இவர் சமணத் துறவியான பின்னர் சொன்ன வார்த்தைகள் இவை: “மகிழ்ச்சியான வாழ்விற்கு மிகுதியான பணம் வேண்டும் என்று நினைத்தேன். அதற்காக நான் தேவைக்கு மிகுதியாகப் பணம் சேர்த்தேன். அப்படியிருந்தும் என்னால் மகிழ்ச்சியாக இருக்க முடியவில்லை. அப்பொழுதுதான் உண்மையான மகிழ்ச்சி பணத்தைச் சேர்ப்பதில் இல்லை; அதை இழப்பதில்தான் இருக்கின்றது என்ற உண்மையைக் கண்டுகொண்டேன். அதனால்தான் ஒரு ஒரு சமணத் துறவியானேன்.”
பல கோடிகளுக்கும் அதிபதியான மோக்சேஷ் ஷா, பணத்தைச் சேர்ப்பதில் இல்லை, அதை இழப்பதில்தான் உண்மையான மகிழ்ச்சியான மகிழ்ச்சி இருக்கின்றது என்று சொல்லி ஒரு சமணத் துறவியானது நமது கவனத்திற்குரியதாக இருக்கின்றது. இன்றைய நற்செய்தியில் ஆண்டவர் இயேசு தன்னைப் பின்தொடர்ந்து வருகின்றவர் எப்படி இருக்கவேண்டும் என்பதைக் குறித்துப் பேசுகின்றார். அது குறித்து நாம் சிந்தித்துப் பார்ப்போம்.
இயேசுவின் சீடர் எல்லாரையும்விட அவரை முதன்மையான அன்புசெய்யவேண்டும்
இயேசு எருசலேம் நோக்கிச் சென்றுகொண்டிருக்கின்றார். மக்கள் கூட்டம் அவரை நெருக்கிக்கொண்டு, அவரைப் பின்தொடர்கின்றது. இயேசுவுக்கு நன்றாகத் தெரியும், தன்னை இப்படி நெருக்கிக்கொண்டு வருகின்ற எல்லாரும் தன்னுடைய உண்மையான சீடர் இல்லை என்பது. ஆகவே, அவர் இத்தகையதொரு வாய்ப்பைப் பயன்படுத்திக்கொண்டு தன்னைப் பின்பற்றி வருகின்றவர் எப்படி இருக்கவேண்டும் என்று கற்பிக்கத் தொடங்குகின்றார்.
இயேசு தன்னைப் பின்தொடர்ந்து வந்தவர்களிடம், எல்லாரையும்விட என்னை மேலாகக் கருதாதோரும், தன்னுடைய சிலுவையைச் சுமக்காததோரும், தன்னுடைய உடைமைகளையெல்லாம் விட்டுவிடாதவரும் என்னுடைய சீடராக இருக்க முடியாது என்கின்றார். இதை வேறு வார்த்தைகளில் சொல்லேண்டும் என்றால், இயேசுவைப் பின்தொடர்கின்றவர், எல்லாவற்றையும் துறந்து, அவரை முதன்மையாக அன்பு செய்யக்கூடியவராக இருக்கவேண்டும் என்று சொல்லலாம். எல்லாரையும்விட இயேசுவை முதன்மையான அன்பு செய்ய முடியுமா? அதன்மூலம் அவருடைய உண்மையான சீடராக இருக்கமுடியுமா? என்பன குறித்துத் தொடர்ந்து நாம் சிந்திப்போம்.
இயேசுவின் சீடருக்குத் தெளிவான தீர்மானங்களை எடுக்கத் தெரிந்திருக்கவேண்டும்
இயேசு தன்னை பின்தொடர்ந்து வருகின்றவர் எப்படி இருக்கவேண்டும் என்று பேசிக்கொண்டிருக்கும்பொழுது கட்டடம் கட்டுதல், போர்தொடுக்கச் செலுத்தல் தொடர்பான இரண்டு உவமைகளைப் பயன்படுத்துகின்றார். இந்த இரண்டு உவமைகளுமே, ஒரு செயலில் தெளிவான திட்டத்தோடு ஈடுபடவேண்டும்; இல்லையென்றால் அது அவருக்கு பெருத்த அவப்பெயரைக் கொடுத்துவிடும் என்ற உண்மையை எடுத்துக்கூறுவதாக இருக்கின்றது. இயேசுவைப் பின்தொடர்கிறவர்கூட தெளிவான, தீர்க்கமான முடிவுகளுக்கு பின்னரே அவரைப் பின்தொடரவேண்டும். இல்லையென்றால் ஆற்றில் ஒரு கால், சேற்றில் ஒரு கால் என்று ஆகிவிடும் அல்லது அவரைப் பின்தொடர நினைத்து, அவரை முழுமையாகப் பின்தொடர முடியாமல் ஆகிவிடும்.
எனவே, இயேசுவைப் பின்தொடர்கின்ற நாம், எல்லாரையும் விட அவரை மிகுதியாக அன்பு செய்வோம்; அவருக்கு நம்முடைய வாழ்வில் முதன்மையான இடம் தந்து வாழ்வோம். அதன்மூலம் அவரது உண்மையான சீடராவோம்.
சிந்தனை
‘என் ஆண்டவராம் கிறிஸ்துவைப் பற்றிய அறிவே நான் பெறும் ஒப்பற்ற செல்வம். இதன் பொருட்டு மற்ற எல்லாவற்றையும் இழப்பாகக் கருதுகிறேன்’ (பிலி 3: 8) என்பார் புனித பவுல். ஆகவே, நாம் புனித பவுலைப் போன்று கிறிஸ்துவே ஒப்பற்ற செல்வம் என்பதை உணர்ந்து, அவருக்கு நம்முடைய வாழ்வில் முதன்மையான இடம் கொடுத்து, அவரது வழியில் நடந்து, அவரது உண்மையான சீடர்களாவோம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.
Source: New feed