
திருவருகைக் காலம் முதலாம் வாரம் வியாழக்கிழமை
மத்தேயு 7: 21, 24-27
சொல்பவரல்ல, செயல்படுபவரே செல்வர்
நிகழ்வு
உத்திரகான்ட் மாநிலம், உத்தர்காசிப் பகுதியில் வாழ்ந்து வருபவர் இந்து சமயத்தைச் சார்ந்தவரான அஜய் பிஜ்லாவான். கடந்த 2018 ஆம் ஆண்டு மே திங்கள், சிகிச்சைக்காக டெக்ரானில் ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
அப்பொழுது இவருடைய உடலைப் பரிசோதித்துப் பார்த்த மருத்துவர், அஜயின் இரத்தத்தில் தட்டணுக்கள் குறைவாக உள்ளன என்றும், உடனே இரத்தம் ஏற்றப்பட வேண்டும் என்றும் தெரிவித்தார். இதில் கவனிக்கவேண்டிய செய்தி என்னவெனில், அஜய்க்கு இருந்த இரத்தமோ அரியவகை இரத்தம். இதனால் அஜயின் தந்தை ஊடகங்களிடம், தன் மகனுடைய நிலையை எடுத்துச் சொல்லி, அவருக்கு இருக்கும் அரியவகை இரத்தம் யாரிடத்திலாவது இருந்தால், கொடுக்க முன்வருமாறு கேட்டுக்கொண்டார்.
இத்தகைய அறிவிப்பைக் கேட்டுவிட்டு ஒருவர் இரத்தம் கொடுக்க முன்வந்தார். அவர் அஜய் சார்ந்த இந்து சமயத்தைச் சார்ந்தவர் கிடையாது; மாறாக இஸ்லாமிய சமயத்தைச் சார்ந்த ஆரிப் கான் என்பவர் ஆவார். இதில் முக்கியதொரு செய்தியையும் நாம் தெரிந்துகொள்ள வேண்டும். அது என்னவெனில், ஆரிப் கான், அஜய்க்கு இரத்தம் கொடுக்க வந்த நேரமோ இஸ்லாமியர்கள் கொண்டாடும் இரமலான் விழா நெருங்கி வந்த நேரம். இதற்காக இஸ்லாமியர்கள் நோன்பிருப்பார்கள். மேலும் தாங்கள் மேற்கொள்ளும் நோன்பிற்கு இறைவன் தக்க கைம்மாறு தருவார் என்பதால் இஸ்லாமியர்கள் இந்த நோன்பைக் கருத்தாய்க் கடைப்பிடிப்பார்கள்.
இந்த நேரத்தில் அஜய்க்கு, ஆரிப் கான் இரத்தம் கொடுக்க வந்தாலும், அவர் மனமுவந்து வந்தார். அப்பொழுது அஜய்க்குச் சிகிச்சை அளித்து வந்த மருத்துவர், ஆரிப் கானிடம், “இரத்தம் கொடுப்பதற்கு முன்பாக உணவு உட்கொள்ளவேண்டும்” என்று சொன்னபொழுது, “இரமலான் மாதம் என்பதால் நான் நோன்பு மேற்கொண்டிருக்கின்றேன். அதனால் விடியற்காலையிலிருந்து சூரியன் மறையும் வரைக்கும் திரவ உணவு உட்பட எதுவும் உட்கொள்ளக்கூடாது” என்றார் ஆரிப் கான்; ஆனால், மருத்துவர் இரத்தம் கொடுப்பதற்கு முன்பாக உணவு உட்கொள்ள வேண்டிய அவசியத்தை ஆரிப் கானிடம் வலியுறுத்திக் கூறியபொழுது, ‘ஒருவரின் உயிரைக் காப்பாற்றுவதற்காக நோன்பினைப் பாதிலேயே முடித்துக் கொள்வது தவறில்லை’ என்று நினைத்துக்கொண்டு, நோன்பினைப் பாதிலேயே நிறுத்திக்கொண்டு, உணவு உட்கொண்டு அஜய் என்ற அந்த இந்து சமயச் சகோதருக்கு இரத்தம் கொடுத்தார் ஆரிப் கான் என்ற இஸ்லாமிய சகோதரர்.
ஆரிப் கான் தன்னுடைய சமயத்தில் மிகுந்த நம்பிக்கைகொண்டு நோன்பினைக் கடைப்பிடித்தார். அதே நேரத்தில் ஒருவருடைய உயிரைக் காப்பாற்ற வேண்டும் என்பதற்காக நோன்பினைப் பாதிலேயே நிறுத்திக் ண்டு இரத்தம் கொடுத்தார். இவ்வாறு அவர் பெயருக்கு இஸ்லாம் மதத்தைப் பின்பற்றாமல், அந்த மதம் கற்பிக்கும் பிறரன்பு, இரக்கம், கருணை ஆகிய பண்புகளின்படி நடந்தார். ஆம், நாம் ஒவ்வொருவரும் சொல்வீரர்களாய் பெயருக்கு வாழாமல், செயல்வீரர்களை தந்தைக் கடவுளின் திருவுளத்தின்படி வாழவேண்டும். அதை இன்றைய நற்செய்தி வாசகம் எடுத்துக்கூறுகின்றது. நாம் அதைக் குறித்து இப்பொழுது சிந்தித்துப் பார்ப்போம்.
சொல்வீரர்கள் யார்?
நற்செய்தியில் ஆண்டவர் இயேசு இரண்டு வகையான மனிதர்களைக் குறித்துப் பேசுகின்றார். ‘ஆண்டவரே ஆண்டவரே’ எனச் சொல்பவர் ஒருவகையினர். தந்தையின் திருவுளத்தின் நடப்பவர் இன்னொரு வகையினர்.
இயேசுவின் காலத்தில் இருந்த பலர் ‘ஆண்டவரே ஆண்டவரே’ என்று அவருடைய பெயரைச் சொல்லிக்கொண்டு பேய்களை ஓட்டிவந்தனர். இவர்கள் இயேசுவின் பெயரைச் சொன்னார்களே ஒழிய, இயேசுவின் போதனையின் நடக்கவில்லை. இப்படிச் சொல்வீரர்களாக இருக்கும் மனிதர்கள் விண்ணரசுக்குள் செல்ல முடியாது என்றும், இவர்கள் மணல்மீது தம் வீட்டைக் கட்டிய அறிவிலிகள் என்றும் குறிப்பிடுகின்றார் இயேசு.
செயல்வீரர்கள் யார்?
நற்செய்தியில் இயேசு சொல்லும் இரண்டாவது வகையினர், செயல்வீரர்கள். இவர்கள் ‘ஆண்டவரே ஆண்டவரே’ எனச் சொன்னது மட்டுமல்லாமல், தந்தையின் திருவுளத்தின் படி நடந்தார்கள். இவ்வாறு இவர்கள் ஆண்டவர்மீதுகொண்ட நம்பிக்கைக்குச் செயல்வடிவம் கொடுத்ததால் (யாக் 2: 17), விண்ணரசுக்குள் நுழையும் பேறுபெற்றவர்களாகவும், கற்பாறையில் தம் வீட்டைக் கட்டிய அறிவாளிகளாகவும் ஆகின்றார்கள் என்கின்றார் இயேசு.
நாம் இறைவார்த்தையைக் கேட்பதோடு அல்லது போதிப்பதோடு நின்றுவிடும் சொல்வீரர்களா? அல்லது இறைவார்த்தைக் கேட்டு, அதைக் கடைப்பிடித்து வாழும் செயல்வீரர்களா? சிந்திப்போம்.
சிந்தனை
‘உங்கள் கடவுளாகிய ஆண்டவர் உங்களுக்குக் கட்டளையிட்டுக் கூறிய எல்லா வழிகளிலும் நடங்கள். அப்பொழுது வாழ்வீர்கள். அது உங்களுக்கு நலமாகும்’ (இச 5:33) என்கிறது இறைவார்த்தை. ஆகையால், நாம் ஆண்டவரின் கட்டளைப் படி, அவருடைய திருவுளத்தின்படி நடந்து, விண்ணரசுக்குள் செல்லும் பெறுபேற்று, இறையருளை நிறைவாகப் பெறுவோம்
Source: New feed