பொதுக்காலம் பதினொன்றாம் வாரம் திங்கட்கிழமை
மத்தேயு 5: 38-42
நன்மையால் தீமையை வெல்வோம்
நிகழ்வு
நைஜீரியாவில், 1967 ஆம் ஆண்டு, ஜூலை மாதம் முதல் 1970 ஆண்டு ஜனவரி மாதம் 15 ஆம் நாள்வரை உள்நாட்டுக் கலவரம் நடைபெற்றது. இந்தக் கலவரத்தில் ஒரு இலட்சத்திற்கும் மேலான மக்கள் கொல்லப்பட்டனர். இக்கலவரத்திற்குக் காரணமாக இருந்தவர்கள் அந்த நாட்டில் இருந்த இபோ இனமக்கள். இவர்கள், நாட்டில் கலவரம் ஓய்ந்து அமைதி திரும்பியபொழுது, கலவரத்திற்கு காரணம் தாங்கள்தான் என்று அரசாங்கத்திற்குத் தெரிந்துவிட்டது. அதனால் அரசாங்கம் தங்களை ஒடுக்கும் என்று மிகவும் அஞ்சினார்கள்.
ஆனால், அப்பொழுது நைஜீரியாவின் தலைவராக இருந்த கோவன் என்பவர், இபோ இனமக்கள் நினைத்தது போன்றெல்லாம் செய்யவில்லை. மாறாக, இரண்டு முக்கியமான செயல்களைச் செய்து எல்லாரையும் வியப்பில் ஆழ்த்தினார். அவர் செய்த இரண்டு செயல்கள் இதுதான். ஒன்று, நாட்டில் ஏற்பட்ட கலவரத்திற்குக் காரணமாக இருந்த இபோ இனமக்களில் இருந்த திறமைசாலிகளைத் தேர்ந்தெடுத்து, அவர்களுக்கு அரசாங்கத்தில் முக்கியப் பொறுப்புகளைக் கொடுத்தது. இரண்டு, இபோ இனமக்களிடம் அவர், ‘உங்களுக்கு என்ன பிரச்சனை இருந்தாலும், அதை என்னுடைய கவனைத்திற்குக் கொண்டு வாருங்கள். அதை நான் உடனடியாக நிவர்த்தி செய்கிறேன்’ என்று சொன்னது.
கோவன், இபோ இனமக்களிடம் இவ்வாறு சொன்னதைக் கேட்டு, அவருக்கு நெருங்கியவர்கள் அவரிடம், “இந்த நாட்டில் கலவரம் ஏற்பட்டு, இலட்சக்கணக்கான மக்கள் இறப்பதற்குக் காரணமாக இருந்த இந்த இபோ இனம்மக்களுக்கு நீங்கள் இப்படியெல்லாமா நன்மை செய்வது?” என்று கேட்டபொழுது, கோவன் அவர்களிடம் மிகவும் பொறுமையாகச் சொன்னார்: “இந்த நாட்டில் மறுபடியும் கலவரம் வெடிக்காமல், அமைதியான சூழ்நிலை நிலவுவதற்கு, தீமைக்குப் பதில் நன்மை செய்வதைத் தவிர வேறு நல்ல வழியில்லை.”
ஆம், இந்த உலகில் கலவரமும் வன்முறையும் ஓயவேண்டும் என்றால், அதற்குத் தீமை ஒருபோதும் தீர்வாகாது; நன்மைதான் தீர்வாகும். இன்றைய நற்செய்தியில் இயேசு இத்தகைய செய்தியைத்தான் எடுத்துச் சொல்கின்றார். நாம் அதைக் குறித்து இப்பொழுது சிந்தித்துப் பார்ப்போம்.
தீமைக்குத் தீமை ஒருபோதும் தீர்வாகாது
பழைய ஏற்பாட்டுக் காலத்தில் ‘கண்ணுக்குக் கண்’, ‘பல்லுக்குப் பல்’ என்ற சட்டம் இருந்தது (விப 21: 23-25; லேவி 24: 19-20; இச 19:21). இந்தச் சட்டத்தைக் குறித்து நாம் கேள்விப்படும்பொழுது, ‘இது என்ன கடினமான சட்டமாக இருக்கின்றதே!’ என்று நமக்குத் தோன்றலாம்; ஆனால், அந்தக்காலத்தில் இக்கடினமான சட்டம்கூட, சமூகத்தில், இனக்குழுக்களிடையே சமநிலை ஏற்படுத்தியது என்று சொல்லலாம்.
எடுத்துக்காட்டிற்கு ஓர் இனக்குழுவில் உள்ள ஒருவரை இன்னோர் இனக்குழுவில் உள்ள ஒருவர் தாக்கினால், பதிலுக்குத் தாக்கப்பட்ட இனக்குழுவைச் சார்ந்தவர், தாக்கிய இனக்குழுவில் உள்ள எல்லாரையும் அழிக்கக்கூடிய அபாயம் இருந்தது. இப்படிப்பட்ட சூழ்நிலையில், ஒருவன் இன்னொருவனின் கண்ணையோ பல்லையோ எடுத்தால், பதிலுக்கு அவனுடைய கண்ணையோ, பல்லையோ எடுக்கும் சட்டமானது நடைமுறைக்கு வந்தது. ஆனால், ஆண்டவர் இயேசு தன்னுடைய சீடர்களிடம், இந்தச் சட்டம்கூட வேண்டாம் என்று சொல்கின்றார். காரணம், கண்ணுக்குக் கண்ணை எடுத்தால், இந்த உலகில் யாவரும் பார்வையற்றவர்களாகத்தான் இருக்கவேண்டி வரும். பல்லுக்குப் பல்லை எடுத்தால், எல்லாரும் பல்லில்லாமல்தான் அலையவேண்டி வரும். அதனால்தான் இயேசு அப்படிச் சொல்கின்றார்.
தீமைக்கு நன்மையே தீர்வு
பழைய ஏற்பாட்டுக் காலச் சட்டங்களைச் சொல்லிவிட்டு அதற்கு மாற்றாக, இயேசு புதிய சட்டமாக, தீமைக்குப் பதில் நன்மை செய்யுங்கள் என்று குறிப்பிடுகின்றார். வலக்கன்னத்தில் அறைபவருக்கு மறுகன்னத்தையும், அங்கியை எடுத்துக்கொள்ள விரும்புபவருக்கு மேலுடையையும், ஒருகல் தொலை நடக்கக் கட்டாயப்படுத்துபவரிடம் இருகல் தொலைவும், கேட்கிறவருக்குக் கொடுப்பதும், கடன் வாங்க விரும்புகிறவருக்கு முகங்கோணாமல் கொடுப்பதும், தீமைக்குப் பதில் நன்மை செய்வதற்கான வழிகள் என்று குறிப்பிடுகின்றார் இயேசு.
ஒருவர் நமக்குத் தீங்குசெய்கின்றபொழுது, பதிலுக்கு நாம் அவருக்குத் தீங்கு செய்யாமல், இயேசு சொல்வதுபோல் நன்மை செய்கின்றபொழுது, தீமை குறைவதற்கு வாய்ப்பிருக்கின்றது. மட்டுமல்லாமல், நமக்குத் தீமை செய்த நபர், இப்படிப்பட்ட மனிதருக்காக நாம் தீமை செய்தோம் என்று மனந்திருந்துவதற்கான வாய்ப்பிருக்கின்றது. ஆகையால், நாம் தீமைக்கு ஒருபோதும் தீமை தீர்வாகாது; நன்மைதான் தீர்வாகும் என்பதை உணர்ந்து, நமக்குத் தீமை செய்பவர்களுக்கு நன்மை செய்யக்கொள்வோம். அதன்மூலம் இயேசுவின் உண்மையான சீடர்கள் ஆவோம்
சிந்தனை
‘சிலர் நீங்கள் கீழே விழவேண்டும் என்று மன்றாடுவார்கள்; அப்படிப்பட்டவர்கள் மேலே எழவேண்டும் என்று மன்றாடுகள்’ என்பார் ரம்மி ரோசியர் என்ற அறிஞர். ஆகையால், நாம் நமக்குத் தீமை செய்பவர்களுக்கும் நன்மை செய்வோம். அதன்மூலம் இயேசுவின் உண்மையான சீடர்கள் ஆவோம்; இறையருளை நிறைவாகப் பெறுவோம்.
Source: New feed