
பொதுக்காலம் இருபத்து ஐந்தாம் வாரம் திங்கட்கிழமை
லூக்கா 8: 16-18
“நீங்கள் எத்தகைய மனநிலையில் கேட்கிறீர்கள் என்பது பற்றிக் கவனமாயிருங்கள்”
நிகழ்வு
இத்தாலியில் தோன்றிய புகழ்பெற்ற பேச்சாளர் சிசெரோ (கி.மு 106-43 கி.மு). ஒருமுறை இவர் ஒரு கூட்டத்தில், வாழ்க்கையின் அடிப்படை உண்மைகளையும் தத்துவங்களையும் பற்றி மிகவும் உணர்ச்சிப்பூர்வமாகப் பேசிக்கொண்டிருந்தார். ஆனால், அந்தக் கூட்டத்தில் இருந்த ஒருசிலர் தூங்கிக்கொண்டும், இன்னும் ஒருசிலர் கொட்டாவி விட்டுக்கொண்டும் இருந்தார்கள். இது சிசெரோவிற்கு மிகுந்த அதிர்ச்சியைத் தந்தது. ‘என்ன இவர்கள்! நாம் முக்கியமான உண்மைகளைப் பற்றிப் பேசிக்கொண்டிருக்கும்பொழுது, இப்படி ஆர்வமில்லாமல் தூங்கிக்கொண்டும் கொட்டாவி விட்டுக்கொண்டும் இருக்கின்றார்களே! என்ன செய்வது?’ என்று ஒருவினாடி யோசித்தார்.
பின்னர் அவர் அவர்களிடம் ஒரு கதை சொல்லத் தொடங்கினார். அந்தக் கதையோ அவ்வளவு விறுவிறுப்பான கதை கிடையாது. ஆனாலும், அவர்கள் அதை ஆர்வமாகக் கேட்டார்கள். அதைப் பார்த்துவிட்டுச் சிசெரோ அவர்களிடம், “இவ்வளவு நேரம் நான் வாழ்க்கையின் அடிப்படை உண்மைகளையும் தத்துவங்களையும் பற்றிப் பேசும்பொழுது, யாரும் அவ்வளவு ஆர்வமாகக் கேட்கவில்லை; ஆனால், இப்பொழுது நான் ஒரு சாதாரண கதையைச் சொன்னதும், இவ்வளவு ஆர்வமாகக் கேட்கின்றீர்களே! உங்களைப் பார்ப்பதற்கு மிகவும் வியப்பாக இருக்கின்றது” என்றார். இதைக் கேட்டதும், மக்கள் வெட்கித் தலைகுனிந்தார்கள்.
ஆம், பலர் நல்ல செய்திகளுக்கும் உண்மைகளுக்கும் செவிகொடுப்பதில்லை; பெய்யான, அடுத்தவரைப் பற்றிய தவறான செய்திகளுக்கும்தான் செவிகொடுப்பவர்களாக இருக்கின்றார்கள். இத்தகைய சூழ்நிலையில், இன்றைய நற்செய்தி வாசகத்தில் ஆண்டவர் இயேசு, “நீங்கள் எத்தகைய மனநிலையில் கேட்கிறீர்கள் என்பது பற்றிக் கவனமாயிருங்கள்” என்கின்றார். இயேசு சொல்லக்கூடிய இவ்வார்த்தைகளின் பொருள் என்ன என்பதைக் குறித்து இப்பொழுது நாம் சிந்தித்துப் பார்ப்போம்.
குற்றம் கண்டுபிடிப்பதற்காக இயேசுவின் போதனையைக் கேட்ட பரிசேயர்கள்
நற்செய்தியில் ஆண்டவர் இயேசு, “நீங்கள் எத்தகைய மனநிலையில் கேட்கிறீர்கள் என்பது பற்றிக் கவனமாயிருங்கள்” என்று கூறுகின்றாரே…! இதை அவர் எப்படிப்பட்ட சூழலில் பேசினார் என்பதைப் பற்றித் தெரிந்துகொள்ளவேண்டும். இயேசுவின் இவ்வார்த்தைகள், அவர் சொல்லும் விதைப்பவர் உவமையை அடுத்து வருகின்றன. விதைப்பவர் உவமையானது, ஒருவர் இறைவார்த்தையைக் கேட்டு, அதற்கு எப்படிப் பதிலளிக்கின்றார் என்பதைப் பொறுத்தே, அவருடைய வாழ்வும் தாழ்வும் இருக்கின்றன என்பதைப் பற்றிச் சொல்வதாக இருக்கும். இந்த உவமைக்குப் பிறகுதான், இயேசு “நீங்கள் எத்தகைய மனநிலையில் கேட்கிறீர்கள் என்பது பற்றிக் கவனமாக இருங்கள்” என்கின்றார்.
இயேசுவின் காலத்தில் இருந்த பரிசேயர்களும் மறைநூல் அறிஞர்களும் இயேசுவின் போதனையைக் கேட்டார்கள்; ஆனால் அவர்கள் கருத்தூன்றி இயேசுவின் போதனையைக் கேட்கவில்லை; இயேசுவின் போதனையில் குற்றம் கண்டுபிடிப்பதற்காகக் கேட்டார்கள். இதனால் அவர்களுக்கு இயேசு சொன்ன உவமைகள் மறைவாய் இருந்தன.
மன ஆறுதலுக்கு இயேசுவின் போதனையைக் கேட்ட மக்கள்
பரிசேயர்கள் இயேசுவின் பேச்சில் குற்றம் கண்டுபிடிப்பதற்காக அவருடைய போதனையைக் கேட்டார்கள் எனில், சாதாரண மக்கள் குறிப்பாக வரிதண்டுவோர், பாவிகள் யாவரும் மன ஆறுதலையும் அமைதியையும் பெறுவதற்காக இயேசுவின் போதனையைக் கேட்டார்கள் (லூக் 15: 1). இதனால் இயேசுவின் போதனை அவர்களுக்கு மிக எளிதாகப் புரிந்தது.
இதைத்தான் ஆண்டவர் இயேசு இன்றைய நற்செய்தியின் இறுதியில், உள்ளவருக்குக் கொடுக்கப்படும்; இல்லாதவரிடமிருந்து உள்ளதும் எடுக்கப்படும். ஆம், இயேசுவின் போதனையைக் கேட்டு, அதன்படி வாழவேண்டும் என்ற விருப்பம் உள்ளவர்களுக்கு கடவுளின் ஆசி அபரிமிதமாகக் கிடைக்கும். அவர்கள் முப்பது மடங்காக, அறுபது மடங்காக, நூறு மடங்காகப் பலன் அளிப்பார்கள். அதே நேரத்தில் இறைவார்த்தையைக் கேட்கவேண்டும்… அதன்படி நடக்கவேண்டும் என்ற விருப்பம் இல்லாமல் இருக்கின்றவர்களிடமிருந்து உள்ளதும் எடுக்கப்படும்.
நாம் இறைவார்த்தையைக் கேட்பதில் விருப்பம் உள்ளவர்களாக இருக்கின்றோமா? அல்லது விருப்பம் இல்லாதவர்களாக இருக்கின்றோமோ? சிந்தித்துப் பார்க்கவேண்டும். பல நேரங்களில் நாம் இறைவார்த்தையைக் கருத்தூன்றிக் கேட்பதுமில்லை, கேட்டாலும் அதன்படி வாழ்வதுமில்லை. என்றைக்கு நாம் இறைவார்த்தையைக் கருத்தூன்றிக் கேட்கின்றோமோ, அன்றைக்கு நாம் கடவுளின் ஆசியை அபரிமிதமாகப் பெறுவோம் என்பது உறுதி. ஆகையால், நாம் இறைவார்த்தையை எத்தகைய மனநிலையோடு கேட்கின்றோம் என்பதில் கவனமாக இருப்போம்.
சிந்தனை
‘உங்கள் கடவுளாகிய ஆண்டவர் உங்களுக்குக் கட்டளையிட்டுக் கூறிய எல்லா வழிகளிலும் நடங்கள்; அப்பொழுது வாழ்வீர்கள்’ (இச 5: 33) என்கிறது இணைச்சட்ட நூல். ஆகையால். நாம் கடவுளாகிய ஆண்டவர் நமக்குக் கட்டளையிடுபவற்றைக் கருத்தாய்க் கேட்டு, அதன்படி நடப்போம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்
Source: New feed