பொதுக்காலம் இருபத்து ஒன்றாம் வாரம் செவ்வாய்க்கிழமை
மத்தேயு 23: 23-26
திருச்சட்டத்தின் முக்கியப் போதனைகளான நீதி, இரக்கம், நம்பிக்கை ஆகியவற்றைக் கண்டிப்பாய்க் கடைப்பிடிக்க வேண்டும்
நிகழ்வு
வேலூரில் உள்ள புகழ்பெற்ற மருத்துவக் கல்லூரியான சி.எம்.சி (Christian Missionary College) எப்படி உதயமானது என்று உங்களுக்குத் தெரியுமா…? சொல்கின்றேன் கேளுங்கள்.
பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் அமெரிக்காவைச் சார்ந்த ஜான் ஸ்கேடர், சோபியா என்ற தம்பதியினர், மருத்துவச் சேவை செய்வதற்காக இந்தியாவிற்கு வந்தனர். மருத்துவர்களான இவர்களுக்கு ஐடா சோபியா ஸ்கேடர் (Ida Sophia Scudder 1870-1960) என்றொரு மகள் இருந்தாள். இந்த ஐடா சோபியா ஸ்கேடர் தன் பெற்றோரோடு இந்தியாவிற்கு வந்தபொழுது, அவளுக்கு வயது பதினாறு. ஜான் ஸ்கேடர் – சோபியா தம்பதியினர் தங்களுடைய மகள் ஐடா சோபியா ஸ்கேடரோடு இந்தியாவிற்கு வந்த இரண்டாவது மாதத்தில், பணி நிமித்தமாக சோபியோ அமெரிக்கா செல்ல வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. இதனால் ஜான் ஸ்கேடர் தன் மகளோடு இந்தியாவில் இருந்து மருத்துவம் பார்த்து வந்தார்.
இப்படியிருக்கையில் ஒருநாள் இரவு, ஜான் ஸ்கேடர் இருந்த வீட்டின் கதவு தட்டப்பட்டது. ‘இந்த நேரத்தில் யார் கதவைத் தட்டுவது…?’ என்று யோசித்துக்கொண்டு ஜான் ஸ்கேடர் கதவைத் திறந்து பார்த்தபொழுது, அங்கொருவர் மிகவும் கலக்கத்தோடு நின்றுகொண்டிருந்தார். அவரைப் பார்த்த மாத்திரத்திலேயே அவர் இந்து சமயத்தைச் சார்ந்தவர் என்பதை ஜான் ஸ்கேடர் தெரிந்துகொண்டார். அந்த மனிதர் இவரிடம், “ஐயா என்னுடைய மனைவி பிரசவ வேதனையில் துடித்துக்கொண்டிருக்கின்றாள். பிரசவம் பார்ப்பதற்கு உங்களுடைய துணைவியாரை அனுப்பி வைத்தால், நன்றாக இருக்கும்” என்றார். அதற்கு ஜான் ஸ்கேடர் அவரிடம், “அவர்கள் பணி நிமித்தமாக அமெரிக்கா சென்றுவிட்டார்கள்… வேண்டுமானால் நான் வரட்டுமா…?” என்று கேட்க, வந்தவர், “ஓர் ஆண், பிரசவம் பார்ப்பதை எங்கள் சமூகத்தில் இருப்பவர்கள் ஏற்றுக் கொள்ளமாட்டார்கள்” என்று சொல்லிவிட்டு வருத்தத்தோடு சென்றுவிட்டார்.
மறுநாள் காலையில், பிரவசத்தின்பொழுது இறந்துபோன அந்த இந்து சமயத்தைச் சார்ந்தவருடைய மனைவியை ஒருசிலர் பாடையில் வைத்துத் தூக்கிக்கொண்டு போனார்கள். இக்காட்சியை ஜான் ஸ்கேடரின் மகளான ஐடா சோபியா ஸ்கேடர் வருத்தத்தோடு பார்த்தார். இது நடந்து ஓரிரு நாள்கள் கழித்து, இரவு வேளையில் ஜான் ஸ்கேடருடைய வீட்டுக் கதவு தட்டப்பட்டது. அவர் கதவைத் திறந்து பார்த்தபொழுது, எதிரில் ஓர் இஸ்லாமியர் நின்றுகொண்டிருந்தார். அவர் இரண்டு நாள்களுக்கு முன்பு வந்த அந்த இந்து சமயத்தைச் சார்ந்தவரைப் போன்று, தன்னுடைய மனைவி பிரசவ வேதனையில் துடித்துக் கொண்டிருப்பதாகவும், அவருக்கு மருத்துவம் பார்ப்பதற்கு ஜான் ஸ்கேடரின் துணைவியாரை அனுப்பி வைக்குமாறும் கேட்டுக்கொண்டார். அவரிடத்திலும் ஜான் ஸ்கேடர் முன்பு சொன்னவரிடம் சொன்ன பதிலையே சொன்னார். இதைக் கேட்டு அந்த இஸ்லாமியர், “ஓர் ஆண், பிரசவம் பார்ப்பதை எங்கள் சமயத்தில் உள்ள யாரும் ஏற்றுக்கொள்வதில்லை” என்று சொல்லிவிட்டு வருத்ததோடு சென்றுவிட்டார்.
இதற்கடுத்து வந்த நாளில் அந்த இஸ்லாமியரின் மனைவி இறந்துபோனார். இதை அறிந்த ஜான் ஸ்கேடரின் மகள் ஐடா சோபியா ஸ்கேடர் மிகவும் வருந்தினார். ‘என்ன மாதிரியான சமூகம் இது…! பெண் குழந்தைகளைப் படிக்க வைக்கமாட்டார்களாம்…! ஆனால், பெண்கள்தான் பிரசவம் பார்க்கவேண்டுமாம்…! இந்த நிலையை மாற்றவேண்டும்…!’ என்று முடிவெடுத்த அவர் அமெரிக்காவிற்குச் சென்று மருத்துவம் படித்து, இந்தியாவிற்குத் திரும்பி வந்தார்; மட்டுமல்லாமல், பெண்கள் கல்வி கற்க அவர் பெரிதும் பெரிதும் பாடுபட்டார். இப்படியிருக்கையில்தான் ‘பெண் குழந்தைகள் கல்வியும் மருத்துவமும் கற்க ஒரு மருத்துவக் கல்லூரி தொடங்கினால் என்ன? என்றோர் எண்ணம் ஐடா சோபியா ஸ்கேடருக்கு ஏற்பட்டது. அப்படித் தொடங்கப்பட்டதுதான் வேலூரில் உள்ள சி.எம்.சி. இன்றைக்கு இந்த மருத்துவக் கல்லூரியால் பயன்பெறுவோர் பலர்.
திருச்சட்டத்தின் முக்கியப் போதனையே இரக்கம் அல்லது அன்புதான். இப்போதனையைக் கடைப்பிடித்து, திருச்சட்டத்தை நிறைவேற்றுபவர் ஆனார் அமெரிக்காவிலிருந்து இந்தியாவிற்கு வந்து, மருத்துவச் சேவைசெய்த ஐடா சோபியா ஸ்கேடர். இன்றைய நற்செய்தி வாசகம், திருச்சட்டத்தின் முக்கியப் போதனைகளாகிய நீதி, இரக்கம், நம்பிக்கை ஆகியவற்றைக் கண்டிப்பாய்க் கடைப்பிடிக்க வேண்டும் என்றோர் செய்தியைத் தருகின்றது. நாம் அதைக் குறித்து இப்பொழுது சிந்தித்துப் பார்ப்போம்.
நீதி, இரக்கம், நம்பிக்கை ஆகியவை திருச்சட்டத்தின் முக்கியப் போதனைகள்
நற்செய்தியில் இயேசு, மறைநூல் அறிஞர்களும் பரிசேயர்களும், புதினா, சோம்பு சீரகம், ஆகியவற்றில் பத்தில் ஒரு பங்கைப் படைப்பதாகவும், திருச்சட்டத்தின் முக்கியப் போதனைகளாகிய நீதி, இரக்கம், நம்பிக்கை ஆகியவற்றைக் கடைப்பிடிக்காமல் விட்டுவிடுவதாகவும் கடுமையாகச் சாடுகின்றார்.
மறைநூல் அறிஞர்களும் பரிசேயர்களும் சிறு சிறு கட்டளைகளைக் கடைப்பிடிப்பதில் கருத்தாய் இருந்தார்கள். இதை நாம் இயேசு சொல்லக்கூடிய ‘பரிசேயர் – வரிதண்டுபவர்’ உவமையில் வரக்கூடிய பரிசேயர் சொல்லக்கூடிய வார்த்தைகளிலிருந்தே (லூக் 18: 12) கண்டுகொள்ளலாம். சிறு சிறு கட்டளைகளைக் கடைப்பிடிப்பது முக்கியம்தான்; ஆனால், அதை விட முக்கியம், திருச்சட்டத்தின் முக்கியப் போதனைகளாகிய நீதி, இரக்கம், நம்பிக்கை ஆகியவற்றைக் கடைப்பிடிப்பது. நற்செய்தியில் இயேசு, “உங்கள் தந்தை இரக்கமுள்ளவராய் இருப்பது போல் நீங்களும் இரக்கமுள்ளவர்களாய் இருங்கள்” (லூக் 6: 36) என்று சொல்கின்றார் அல்லவா, அவர் சொல்வதற்கேற்ப நாம் தந்தையைப் போன்று இரக்கமுள்ளவர்களாய் இருந்து திருச்சட்டத்தை நிறைவேற்றவேண்டும். அதுதான் நாம் செய்யவேண்டிய தலையாய செயலலாக இருக்கின்றது.
நாம் விண்ணகத் தந்தையைப் போன்று இரக்கமுள்ளவர்களாக இருந்து திருச்சட்டத்தைக் கருத்தாய்க் கடைப்பிடிக்கின்றோமா? சிந்திப்போம்.
சிந்தனை
‘இரக்கம் கொள்வது நம்மை வானதூதர்களுக்கு நிகராகச் செய்யும்’ என்பார் சேப்பின் என்ற சிந்தனையாளர். ஆகையால் நாம் நம்முடைய வாழ்வில் இரக்கத்தையும் அத்தோடு நீதி, நம்பிக்கை ஆகியவற்றையும் கருத்தாய்க் கடைப்பிடித்து வாழ்வோம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.
Source: New feed