
பொதுக்காலம் இருபத்து ஒன்றாம் வாரம் திங்கட்கிழமை
மத்தேயு 23: 13-22
“நீங்கள் நுழைவதில்லை, நுழைவோரையும் விடுவதில்லை”
நிகழ்வு
கலீல் ஜிப்ரான் எழுதிய பித்தன் என்ற புத்தகத்தில் இடம்பெறும் கதை இது.
முன்பொரு காலத்தில் விரானி என்ற நகரில் மன்னன் ஒருவன் இருந்தான். இவன் மிகவும் பலசாலியாகவும் அறிவில் சிறந்தவனாகவும் இருந்தான். இதனால் இவனை வெல்வதற்கு ஆளே இல்லாமல் இருந்தது. இது அந்த நகரில் இருந்த ஒரு சூனியக்காரக் கிழவிக்குக் கொஞ்சம்கூடப் பிடிக்கவே இல்லை. இவள் தீமையின் மொத்த உருவமாக இருந்தாள். இவளுக்கு யாரும் நன்றாக இருந்துவிட்டால் பிடிக்காது. இப்படிப்பட்டவள் மன்னனை எப்படியாவது தன்னுடைய தந்திரத்தால் வீழ்த்த நினைத்தாள். இதற்காக அவள் சரியான நேரத்திற்காகக் காத்திருந்தாள்.
விரானி நகரில் குடிநீர்க் குளம் ஒன்று இருந்தது. இதிலிருந்துதான் மன்னன் உட்பட மக்கள் அனைவரும் நீர் அருந்தி, தங்களுடைய தாகத்தைத் தணித்து வந்தார்கள். இந்தக் குடிநீர்க் குளத்தின் நீர் கண்ணாடி போன்று அவ்வளவு தெளிவாக இருந்தது; இதன் சுவையோ தேன் போன்று அவ்வளவு இனிமையாக இருந்தது. ஒருநாள் இரவு இந்தக் குடிநீர்க் குளத்திற்கு வந்த சூனியக்காரக் கிழவி தன்னிடத்தில் இருந்த ஒரு திரவப் புட்டியைத் திறந்து, அதிலிருந்த திரவத்தை குடிநீர்க் குளத்திற்குள் ஊற்றிவிட்டு வேகமாக மறைந்துவிட்டாள்.
மறுநாள் காலையில் இந்தக் குடிநீர்க் குளத்திற்கு வந்து, இதிலிருந்த நீரை அள்ளிப் பருகிய யாவரும் புத்தி பேதலித்துப் போனார்கள். இதனால் அவர்கள், ‘நாங்கள்தான் அறிவாளிகள்கள்; மன்னன் ஒன்றும் அறிவாளி கிடையாது’ என்று பிதற்றத் தொடங்கினார்கள். இச்செய்தி மன்னனுக்குத் தெரிய வந்ததும், அவன் மிகவும் அதிர்ச்சியடைந்தான். “என்ன! மக்கள் என்னைவிட அறிவாளிகளாகிவிட்டார்களா…? இப்பொழுதே நான் அந்தக் குடிநீர்க் குளத்திலிருந்து நீர் அருந்தி, அவர்களைவிட நான் அறிவாளி என்பதை நிரூபித்துக் காட்டுகின்றேன்” என்று சொல்லி, அந்தக் குளத்திலிருந்து நீர் அருந்தி, அவர்களைப் போன்று புத்தி பேதலித்துப் போனான்.
இதற்காகவே காத்திருந்த சூனியக்காரக் கிழவி, மிகவும் மகிழ்ந்துபோய், நடந்தது அனைத்தையும் பக்கத்துக்கு நாட்டு மன்னனிடம் சொல்ல, அவன் விரானி நகர்மீது படையெடுத்து வந்து, மன்னனையும் மக்களையும் சிறைப்பிடித்துச் சென்று நகரைத் தன்னுடைய கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தான்.
இந்தக் கதையில் வரும், தீமையின் மொத்த உருவமான சூனியக்காரக் கிழவி எப்படித் தான் பாழாய்ப்போனது மட்டுமல்லாமல், விரானி நகரில் இருந்த எல்லாரையும் பாழாக்கினாளோ, அப்படி இயேசுவின் காலத்தில் இருந்த மறைநூல் அறிஞர்களும் பரிசேயர்களும் தாங்கள் பாழாய்ப்போனது மட்டுமல்லாது, மக்களையும் பாழாக்கினார்கள். இதனாலேயே இயேசு அவர்களைக் கடுமையாகச் சாடுகின்றார். உண்மையில் மறைநூல் அறிஞர்களும் பரிசேயர்களும் செய்த தவறு என்ன…? அதற்காக இயேசு அவர்களை எப்படிச் சாடுகின்றார்…? என்பன குறித்து இப்பொழுது நாம் சிந்தித்துப் பார்ப்போம்.
யூத மதக் காவலர்களாக வலம்வந்த மறைநூல் அறிஞர்களும் பரிசேயர்களும்
கடவுள், கோயில், வழிபாடு… இவற்றைச் சுற்றியே இருந்த யூத சமூகத்தில் மறைநூல் அறிஞர்களும் பரிசேயர்களும் அதிகாரம் கொண்டவர்களாகவும், செல்வாக்கு மிகுந்தவர்களாகவும் இருந்தார்கள். இவர்கள் தங்களிடம் மோசேயின் அதிகாரம் இருக்கின்றது (மத் 23: 2) என்று நினைத்துக்கொண்டு மக்களிடம் அதைச் செய்யவேண்டும்…. இதைச் செய்யக்கூடாது… என்று கட்டளை பிறப்பித்து வந்தார்கள். இவர்கள் பிற இனத்தவரைத் தங்களுடைய மதத்தில் சேர்ப்பதற்கும் அரும்பாடு பட்டார்கள். இப்படி மக்களிடம் கட்டளைகளைப் பிறப்பித்தவர்கள்… பிற இனத்தவரைத் தங்களுடைய மதத்தில் சேர்க்க அரும்பாடுபட்ட இந்த மறைநூல் அறிஞர்களும் பரிசேயர்களும் அவர்கள் விண்ணகம் செல்வதற்குக் காரணமாக இருந்தார்களா? இது குறித்துத் தொடர்ந்து சிந்திப்போம்.
மக்கள் விண்ணகத்திற்குள் நுழையவிடாமல் தடுத்த மறைநூல் அறிஞர்களும் பரிசேயர்களும்
மக்களிடம் கட்டளைகளுக்கு மேல் கட்டளைகளைப் பிறபித்த இவர்கள், பிற இனத்தவரையும் தங்களுடைய மதத்தில் சேர்க்க அரும்பாடு பட்ட இந்த மறைநூல் அறிஞர்கள் மற்றும் பரிசேயர்கள், மக்கள் விண்ணகத்திற்குள் நுழைய விடாமல் செய்தார்கள். எப்படியென்றால், இவர்கள் மக்களுக்குப் போதித்தது எல்லாம் திருச்சட்டம் அல்ல, தங்களுடைய பரிசேயச் சட்டத்தைத் தான். பரிசேயச் சட்டங்களைக் கடைப்பிடிக்கும் மக்கள் எப்படி விண்ணகத்திற்குள் நுழைய முடியும்…? முடியாதல்லவா! அவ்வாறுதான் இவர்கள் மக்களை விண்ணகத்திற்குள் நுழைய விடாமல் தடுத்தார்கள்.
நாமும்கூட பல நேரங்களில் மக்களுடைய வளர்ச்சிக்குக் காரணமாக இல்லாமல், அவர்கள் இடறி விழக் காரணமாக இருக்கின்றோம். ஆகையால், நாம் மற்றவர் இடறிவிழக் காரணமாக இல்லாமல், வளர்ச்சிக்குக் காரணமாக இருக்க முயற்சி செய்வோம்.
சிந்தனை
‘ஒருவருக்கொருவர் ஊக்கமூட்டுங்கள்; ஒருவரை ஒருவர் வளர்ச்சியடையச் செய்யுங்கள்’ (1 தெச 5: 11) என்பார் புனித பவுல். ஆகையால், நாம் புனித பவுல் சொல்வது போன்று ஒருவருக்கொருவர் ஊக்கமூட்டி, ஒருவரை ஒருவர் வளர்ச்சியடையச் செய்வோம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.
Source: New feed