பொதுக்காலம் முப்பதாம் வாரம் சனிக்கிழமை
லூக்கா 14: 1, 7-11
“தாழ்ச்சியும் உயர்வும்”
நிகழ்வு
ஜப்பானில் உள்ள புகழ்பெற்ற கராத்தே கற்றுத்தரும் பள்ளி அது. அந்தப் பள்ளியில் கராத்தே கற்று வந்த மாணவன் ஒருவன் எல்லாப் போட்டிகளிலும் வெற்றிபெற்றுக் கறுப்புக் கச்சை அதாவது Black Belt பெறுவதற்குத் தகுதியுள்ளவன் ஆனான். பள்ளி நிர்வாகம் பள்ளியில் ஒவ்வோர் ஆண்டும் நடக்கும் பட்டமளிப்பு விழாவில் கறுப்புக் கச்சையை அந்த மாணவனுக்கு அளிப்பதாக அறிவித்திருந்தது.
பட்டமளிப்பு நாள் வந்தது. எல்லாப் போட்டிகளிலும் வெற்றி பெற்ற மாணவன், பள்ளியின் முதல்வரிடமிருந்து கறுப்புக் கச்சையைப் பெறுவதற்காக மேடையேறினான். அப்பொழுது பள்ளியின் முதல்வர் அவனிடம், “உனக்கு இந்தக் கறுப்புக் கச்சை எதற்காகத் தரப்படுகின்றது என்று எல்லாருக்கும் முன்பாகச் சொல்ல முடியுமா?” என்றார். “கராத்தேயில், என்னை வெல்வதற்குப் பள்ளியில் யாருமே இல்லை. அதனால்தான் எனக்கு இந்தக் கறுப்புக் கச்சை தரப்படுகின்றது” என்று ஆணவத்தின் உச்சிக்குச் சென்று பேசினான் அவன். இது அவனுக்குப் கறுப்புக் கச்சையைத் தரக் காத்திருந்த பள்ளியின் முதல்வரைத் திடுக்கிட வைத்தது.
‘இந்த மாணவன் ஏன் இவ்வளவு ஆணவத்தோடு பேசவேண்டும்…? இப்படிப்பட்ட மாணவனுக்கு இப்பொழுது இந்தக் கறுப்புக் கச்சைக் கொடுத்தால், இவன் இன்னும் ஆணவம் பிடித்து அலைவான், அதனால் இவனுக்கு அடுத்த ஆண்டு கொடுத்துக்கொள்ளலாம்’ என்று மனத்திற்குள் நினைத்தவராய் அவர், “தம்பி! நீ இன்னொரு போட்டியில் வெற்றிபெற வேண்டியிருக்கின்றது. அதனால் நீ அடுத்த ஆண்டு நடைபெறுகின்ற பட்டமளிப்பு விழாவில் வந்து இந்தக் கறுப்புக் கச்சையை வாங்கிக் கொள்” என்றார். இது அந்த மாணவனுக்குப் பெருத்த ஏமாற்றமாகிப் போய்விட்டது.
அடுத்த ஆண்டு பட்டமளிப்பு விழா வந்தது. பள்ளியின் முதல்வர் குறிப்பிட்ட அந்த மாணவரின் பெயரை வாசிக்க, அவன் கறுப்புக் கச்சையை வாங்க மேடைக்கு வந்தான். கடந்த ஆண்டு கேட்கப்பட்ட அதே கேள்வியை அவனிடம் கேட்டார். அவனும் அதே பதிலைச் சொல்ல, பள்ளியின் முதல்வர் அவனிடம் கடந்த ஆண்டு சொன்ன அதே விளக்கத்தைச் சொல்லி, அவனைத் திருப்தி அனுப்பி வைத்தார். இதனால் அந்த மாணவன் குழம்பினான். ‘அதுதான் எல்லாப் போட்டியிலும் வெற்றி பெற்றுவிட்டேனே…! இன்னும் எந்தப் போட்டியில் நான் வெற்றிபெறவேண்டும்’ என்று தீவீரமாக யோசித்தான் அவன். முடிவில் அவனுக்கு எந்தப் போட்டியில் வெற்றிபெற வேண்டும் என்ற உண்மை புரிந்தது.
மறு ஆண்டு பட்டமளிப்பு விழா வந்தது. பள்ளியின் முதல்வர் குறிப்பிட்ட அந்த மாணவனின் பெயரை வாசிக்க அவன், மேடை ஏறினான். அப்பொழுது அவர் அவனிடம், “இந்தக் கறுப்புக் கச்சை உனக்கு எதற்காக கொடுக்கப்படுகின்றது என்று எல்லாருக்கும் முன்பாகச் சொல்லமுடியுமா?” என்று முன்பு கேட்ட, அதே கேள்வியைக் கேட்க, அவன் மிகவும் தாழ்ச்சியோடு, “என்னுடைய திறமையை இன்னும் வளர்த்துக்கொள்ளவே எனக்கு இந்தக் கறுப்புக் கச்சை கொடுக்கப்படுகின்றது” என்றான். அந்த மாணவனிடமிருந்து இப்படியொரு பதில் வந்ததும் பள்ளியின் முதல்வர் அவனிடம், “இப்பொழுதுதான் நீ இந்தக் கறுப்புக் கச்சையைப் பெறுகின்ற அளவுக்கு எல்லாப் போட்டிகளிலும் வெற்றி பெற்றிருக்கின்றாய்” என்றார்.
ஆம், தன்னை வெல்வதற்கு யாரும் இல்லை என்று ஆணவத்தோடு இருந்தவரைக்கும் அந்த மாணவனால் கறுப்புக் கச்சையைப் பெற முடியவில்லை. எப்பொழுது அந்த மாணவன் மிகவும் தாழ்ச்சியோடு பேசினானோ அப்பொழுதுதான் அவனால் அந்தக் கறுப்புக் கச்சையைப் பெற முடிந்தது. ஆம், ஆணவம் அல்ல, தாழ்ச்சியே ஒருவருக்கு உயர்வு தரும் என்பதையும் இந்த நிகழ்வும், இன்றைய நற்செய்தி வாசகமும் எடுத்துக் கூறுகின்றன.. அது குறித்து நாம் சிந்தித்துப் பார்ப்போம்.
ஆணவமல்ல, தாழ்ச்சியாலேயே உயர்வு வரும்
நற்செய்தியில் ஆண்டவர் இயேசு, விருந்துகளில் கலந்துகொள்ளும்போது எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்ற மிக எளிய அதே நேரத்தில் முக்கியமான ஒரு செய்தியைச் சொல்கின்றார்.
இயேசுவின் காலத்தில் வாழ்ந்துவந்த பரிசேயர்கள் விருந்துகளில் முதன்மையான இடங்களைத் தேடினார்கள் (மத் 23: 6), இயேசுவை விருந்துக்கு அழைத்திருந்த பரிசேயர்த் தலைவர் வீட்டிலும் அப்படித்தான் பலர் முதன்மையான இடங்களைத் தேடுவதில் குறியாய் இருந்தார்கள். இதைப் பார்த்துவிட்டுத்தான் இயேசு மக்களிடம், ஒருவர் உங்களை விருந்துக்கு அழைக்கின்றபொழுது முதன்மையான இடங்களை அல்ல, கடைசியான இடங்களில்போய் அமர்ந்துகொள்ளுங்கள். அப்படி நீங்கள் அமரும்பொழுது உங்களை விருந்துக்கு அழைத்தவர், உங்களுக்கு முதன்மையான இடத்தைக் கொடுத்து, எல்லாருக்கும் முன்பாக உங்களை உயரச் செய்வார் என்கின்றார்.
இயேசு சொல்லக்கூடிய இந்த அறிவுரை விருந்துக்கு மட்டுமல்ல, நம்முடைய அன்றாட வாழ்க்கைக்கும் தேவையான ஒன்றாக இருக்கின்றது. ஆகையால், நாம் உள்ளத்தில் தாழ்சியுள்ளவர்களாய் வாழக் கற்றுக்கொள்வோம்.
சிந்தனை
‘கடவுள் தாழ்நிலையில் இருப்போரை உயர்த்துகிறார்’ (லூக் 1: 50) என்பது மரியா பாடிய பாடலில் உள்ள வரிகள். ஆகையால், நாம் கடவுளுக்கு எப்பொழுது உகந்தவர்களாக, அவரால் உயர்த்தப்பட, தாழ்ச்சியுள்ளவர்களாக வாழ்வோம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.
Source: New feed