பொதுக்காலம் முப்பதாம் வாரம் புதன்கிழமை
லூக்கா 13: 22-30
“இடுக்கமான வழி”
நிகழ்வு
சிறுவன் கிறிஸ்டோபர் தன்னுடைய வீட்டுக்குப் பின்னால் இருந்த தோட்டத்தில் விளயாடிக்கொண்டிருக்கும்பொழுது, தற்செயலாக ஸ்ட்ராபெர்ரி மரமொன்றைக் கண்டான். அதில் ஏதாவது பழங்கள் இருக்கின்றனவா என்று அவன் அதை உற்றுப்பார்த்தபொழுது, அதில் ஏராளமான பழங்கள் இருப்பதைக் கண்டான். உடனே அவன் மரத்தில் ஏறி பழங்களைப் பறிக்கத் தொடங்கினான். அவ்வாறு அவன் பழங்களைப் பறிக்கும்பொழுது, மரத்தில் இருந்த முட்கள் அவனுடைய கைகளைப் பதம்பார்க்கத் தொடங்கின. இதனால் அவன் பிடியை விட, மரத்திலிருந்து கீழே விழுந்தான். நல்லவேளை! மரம் சற்று உயரம் குறைவாக இருந்ததால், அவனுக்குப் பெரிய அடி இல்லை.
இதற்கு நடுவில் சமையற்கட்டில் வேலைபார்த்துக் கொண்டிருந்த கிறிஸ்டோபரின் அம்மா, தன் மகன் அழுகின்ற சத்தம் கேட்டுத் திடுக்கிட்டுத் தோட்டத்தை நோக்கி ஓடினார். அங்கு அவர், தன் மகன் கிறிஸ்டோபர், கைகளில் இரத்தம் வழியக் கீழே கிடந்ததைக் கண்டு அதிர்ந்துபோனார். பின்னர் அவர் அவனுக்கு முதல் உதவி செய்து, அவனுடைய கைகளிலிருந்து இரத்தம் வழிவதைத் தடுத்தார்.
இதற்குப் பின்னர் கிறிஸ்டோபர் மெல்லப் பேசத் தொடங்கினான்: “அம்மா! ஸ்ட்ராபெர்ரி மரத்திலிருந்து பழங்களைத்தானே பறித்தேன்! எதற்கு முட்கள் என் கைகளைப் பதம்பார்க்கவேண்டும்…?” இதற்குக் கிறிஸ்டோபரின் அம்மா மிகப் பொறுமையாகப் பதிலளித்தார்: “தம்பி! சுமைமிக்க ஸ்ட்ராபெர்ரிப் பழங்கள் வேண்டும் என்றால், முட்கள் தரும் வலிகளைப் பொறுத்துக் கொண்டுதான் ஆகவேண்டும். ஒருவேளை, இதற்கு முன்பு ஸ்ட்ராபெர்ரிப் பழங்களை பறித்த அனுபவம் உனக்கு இருந்திருந்தால், நீ முட்கள் குத்தாமல் பழங்களைப் பறித்திருக்கலாம்; ஆனால், உனக்கு ஸ்ட்ராபெர்ரிப் பழங்களை எப்படிப் பறிக்கவேண்டும் என்ற அனுபவம் இல்லாததால், முட்களால் குத்துப்பட்டுத்தான் ஆகவேண்டும்… வாழ்க்கையிலும்கூட உயர்ந்த இலட்சியங்களை அடைவதற்கு முட்கள் போன்று தடைகளையும் சவால்களையும் பிரச்சனைகளையும் சந்தித்துத்தான் ஆகவேண்டும். தடைகளையும் சவால்களையும் பிரச்சனைகளையும் சந்திக்காமல், உன்னால் உயர்ந்த இலட்சியத்தை அடைய முடியாது.”
ஆம், உயர்ந்த இலட்சியங்களை அடைவதற்குப் பல்வேறு தடைகளை, இடர்பாடுகளைச் சந்திப்பது எவ்வளவு கட்டாயயோ, அதுபோன்று மீட்புப் பெறுவதற்கு இடுக்கமான வழியைத் தேர்ந்தெடுப்பது மிகவும் கட்டாயமாக இருக்கின்றது. இன்றைய நற்செய்தி வாசகம், இடுக்கமான வழியே இறைவழி என்ற உண்மையை எடுத்துக்கூறுவதாக இருக்கின்றது. அது குறித்து நாம் சிந்தித்துப் பார்ப்போம்.
மீட்பு தங்களுக்கு மட்டுமே உண்டு என நினைத்த யூதர்கள்
ஆண்டவர் இயேசு எருசலேம் நோக்கிச் சென்றுகொண்டிருக்க்ன்றார். அப்பொழுது அவரிடம் ஒருவர், “ஆண்டவரே! மீட்புப் பெறுவோர் சிலர் மட்டும்தானா?” என்றொரு கேள்வியைக் கேட்கின்றார். இயேசுவிடம் இந்தக் கேள்வியைக் கேட்டவர் நிச்சயமாக ஒரு யூதராகத்தான் இருந்திருக்கவேண்டும். ஏனென்றால், யூதர்கள்தான் தங்களுக்கு மட்டுமே மீட்பு உண்டு என்ற எண்ணத்தில் இருந்தார்கள்.
தன்னிடம் இப்படியொரு கேட்ட மனிதரிடம், அதாவது யூதரிடம், இயேசு, “யூதருக்கு மட்டுமல்ல, எல்லாருக்கும் மீட்பு உண்டு” என்று சொல்லாமல், “இடுக்கமான வாயில் வழியாக நுழைய வருந்தி முயலுங்கள்” என்கின்றார். இயேசு சொல்லக்கூடிய இந்த வார்த்தைகளில் இரண்டு உண்மைகள் அடங்கியிருக்கின்றன. அவை என்னென்ன என்று நாம் தொடர்ந்து சிந்திப்போம்.
மீட்பு, இடுக்கமான வழியாக நுழையும் எல்லாருக்கும் உண்டு
யூதர்கள் தங்களுக்கு மட்டுமே மீட்பு என்று நினைத்துக் கொண்டிருக்கையில், இடுக்கமான வாயில் வழியாக நுழைய வருந்தி முயலும் எல்லாருக்கும் மீட்பு உண்டு என்று கூறுகின்றார் இயேசு. ஆம், கடவுள் எல்லாரும் மீட்புப் பெறவேண்டும் என்று விரும்புகின்றார் (1 திமொ 2:4). அதே நேரத்தில் அவர் அதை இடுக்கமான வாயில் வழியே நுழைய வருந்தி முயல்வோருக்கே தருகின்றார்.
அடுத்ததாக, ஒருவர் யூதராகப் பிறந்துவிட்டார் என்பதற்காகவோ, அவரோடு நெருங்கிப் பழகினார் என்பதற்காகவோ (அவருடைய திருவிருந்தில் கலந்துகொண்டார் என்பதற்காகவோ) அவருக்கு மீட்புக் கிடையாது என்பதையும் சுட்டிக்காட்டுகின்றார் இயேசு. இவ்வாறு இயேசு ஒருவருடைய பிறப்போ அல்லது அவர் சார்ந்த இனமோ அவர் மீட்புப் பெறுவதற்குக் காரணமாக அமைந்துவிடாது, மாறாக அவர் கடவுளுக்கு உகந்த வாழ்க்கை வாழ்வதனால் மட்டுமே மீட்புப் பெற முடியும் என்று உறுதியாகச் சொல்கின்றார்.
நாம் இடுக்கமான வாயில் வழியாக நுழைய வருந்தி முயல்கின்றவர்களாக இருக்கின்றோமா? அல்லது எல்லாரையும் போல் இருக்கின்றோமா? சிந்திப்போம்.
சிந்தனை
‘இறுதிவரை மன உறுதியுடன் இருப்பவரே மீட்புப் பெறுவர்’ (மத் 24: 13) என்பார் இயேசு. ஆகையால், நாம் இறுதிவரை மனவுறுதியோடு இருந்து, இடுக்கமான வாயில் வழியே நுழைய வருந்தி முயல்வோம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.
Source: New feed