
பொதுக்காலம் இருபத்து ஆறாம் வாரம்
வியாழக்கிழமை
லூக்கா 10: 1-12
“புறப்பட்டுப் போங்கள்”
நிகழ்வு
அருள்பணியாளர் ஒருவர் ஆப்பிரிக்காக் கண்டத்திலுள்ள ஒரு பகுதியில் நற்செய்தி அறிவிப்பதற்காகக் கிளம்பிக் கொண்டிருந்தார். அப்பொழுது அவருக்கு மிகவும் அறிமுகமான நண்பர் ஒருவர் அவரிடம், “நம் நாட்டில் கிறிஸ்துவைப் பற்றி அறிந்துகொள்ளாத மக்கள் பலர் இருக்கும்பொழுது, நீங்கள் எங்கோ இருக்கும் ஓர் இடத்திற்குச் சென்று நற்செய்தி அறிவிப்பது தகுமா?” என்றார்
அதற்கு அந்த அருள்பணியாளர், “என் தலைவரும் ஆண்டவருமான இயேசு ‘நீங்கள் உலகெங்கும் சென்று படைப்பிற்கெல்லாம் நற்செய்தியைப் பறைசாற்றுங்கள்’ என்று சொல்லி இருக்கின்றார். தலைவர் சொன்னதற்குப் பணிந்து நடப்பதுதானே, பணியாளரின் கடமை. அதனாலேயே நானும் என்னைப் போன்றோரும் உலகெங்கும் சென்று நற்செய்தி அறிவித்துக் கொன்ன்டிருக்கின்றோம்” என்றார்.
ஆம், இயேசுவின் விரும்பமெல்லாம், எல்லாரும் நற்செய்தியை அறிந்துகொள்ளவேண்டும்; அதன்படி நடக்கவேண்டும் என்பதுதான். அதனாலேயே அவர் அன்று தன்னுடைய சீடர்களையும், இன்று நம்மையும் அனுப்பிக் கொண்டிருக்கின்றார். இன்றைய நற்செய்தியில் இயேசு எழுபத்து இரண்டு பேரைப் பணித்தளங்களுக்கு அனுப்புவதைக் குறித்து வாசிக்கின்றோம். இயேசு எழுபத்து இரண்டு சீடர்களைப் பணித்தளங்களுக்கு அனுப்புவதன் நோக்கமென்ன? அவர்களை அவர் பணித்தளங்களுக்கு அனுப்புகின்றபொழுது, அவர்களுக்குக் கூறும் அறிவுரைகள் என்ன என்பன குறித்து நாம் சிந்தித்துப் பார்ப்போம்.
அறுவடையோ மிகுதி; வேலையாள்களோ குறைவு
உலகில் உள்ள எல்லா மக்களும் இயேசு கிறிஸ்துவை அறிந்திருக்கின்றார்களா? என்பது கேள்விக்குறியே! ஆகையால், எல்லா மக்களும் தன்னை அறிந்துகொண்டு, தன்னுடைய சீடராக இருக்கவேண்டும் என்று விரும்பும் இயேசுவின் நற்செய்திப் பணியைச் செய்வது ஒவ்வொருவரின் கடமையாகும். இப்படி எல்லாருக்கும் நற்செய்தியை அறிவிக்கவேண்டும் என்றொரு மிகப்பெரிய பணிக்கு அல்லது அறுவடைக்குப் பணியாளர்கள் மிகவும் குறைவாக இருக்கின்றார்கள். அதனாலேயே இயேசு, “அறுவடை மிகுதி; வேலையாள்களோ குறைவு” என்கின்றார். அறுவடை அல்லது செய்யவேண்டிய பணி மிகுதியாக இருக்கும்பொழுது, அதற்குரிய பணியாளர்கள் இருப்பதுதான் முறை. ஆகையால், திருமுழுக்குப் பெற்ற ஒவ்வொருவரும் ஆண்டவருடைய நற்செய்தியை அறிவிப்பது ஒவ்வொருவருடைய கடமை என்பதை உணர்ந்து செயல்படவேண்டும்.
ஓநாய்களிடையே ஆட்டுக்குட்டிகளை போல்
செய்யவேண்டிய பணிகள் மிகுதியாக இருந்து, ஆள்கள் குறைவாக உள்ள சூழலில், இயேசு எழுபத்து இரண்டு சீடர்களைப் பணித்தளங்களுக்கு அனுப்புகிறார். அவ்வாறு அனுப்புகின்றபொழுது, அவர் அவர்களிடம், “புறப்பட்டுப் போங்கள்; ஓநாய்களிடையே ஆட்டுக்குட்டிகளை அனுப்புவதைப் போல் உங்களை நான் அனுப்புகிறேன்” என்கின்றார். இயேசு குறிப்பிடுகின்ற ஓநாய் என்பது பணித்தளங்களில் சீடர்கள் சந்திக்கக்கூடிய போலி இறைவாக்கினர்கள், எதிர்ப்புகள், ஆபத்துகள் ஆகியவையாக இருக்கலாம். இயேசுவின் காலத்தில், சீடர்கள் ஆண்டவர் இயேசுவின் நற்செய்தியை மக்களுக்கு அறிவிக்கின்றபொழுது, அவர்களுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருந்தவர்கள் போலி இறைவாக்கினர்கள். அவர்கள் ஓநாய்கள் என்றே அடையாளப்பட்டார்கள். அதனாலேயே இயேசு எழுபத்து இரண்டு சீடர்களிடமும், ஓநாய்களிடையே ஆட்டுக்குட்டிகளை அனுப்புவதைப் போல், உங்களை நான் அனுப்புகின்றேன் என்கின்றார்.
இன்றைக்கும் கூட, ஓநாய்கள் போன்ற பல்வேறு ஆபத்துகள் ஆண்டவர் இயேசுவின் நற்செய்தியை மக்களுக்கு அறிவிக்கின்றபொழுது வரலாம். அத்தகைய வேளைகளில் இயேசுவின்மீது நம்பிக்கை வைத்துப் பணிசெய்வதே சிறந்தது.
அமைதியின் தூதுவர்களாக!
இயேசு எழுபத்து இரண்டு பேரையும் பணித்தளங்களுக்கு அனுப்புகின்றபொழுது, அவர்களுக்குத் தொடந்து கூறும் அறிவுரை, “நீங்கள் எந்த வீட்டிற்குள் சென்றாலும், இந்த வீட்டிற்கு அமைதி உண்டாகுக! என முதலில் கூறுங்கள்” என்பதாகும். இயேசு சொல்லக்கூடிய அமைதி, கல்லறைகளில் நிலவும் அமைதியோ அல்லது நாடுகளுக்கு இடையே நிலவு போலியான அமைதியோ அல்ல. அது உண்மையான அமைதி. அந்த அமைதி உலகம் தரமுடியாத அமைதி. அதை ஆண்டவர் ஒருவரால் மட்டுமே தரமுடியும். அத்தகைய அமைதியைக் கொண்டுதான் இயேசு தன் சீடர்களிடம், இந்த வீட்டிற்கு அமைதி உண்டாகுக என்று வாழ்த்தச் சொல்கின்றார். சீடர்கள் கூறும் வாழ்த்தை மக்கள் ஏற்றுக்கொண்டால், அது அவர்களுக்கு ஆசியாக இருக்கும். அதே நேரத்தில் அவர்கள் கூறுகின்ற வாழ்த்தை மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை என்றால், அதுவே அவர்களுக்குத் தண்டனையாய் முடியும்.
ஆகையால், ஒருவருடைய உயர்வும் தாழ்வும், அவர் இயேசுவை, அவருடைய சீடர்களை, அதன்மூலம் தந்தைக் கடவுளை ஏற்றுக்கொள்வதைப் பொறுத்தே உள்ளது என்று சொல்லலாம். நாம் நம் நடுவில் இயேசுவின் பிரதிநிதிகளாக வரும் அவருடைய சீடர்களை ஏற்றுக்கொள்கின்றோமா? சிந்திப்போம்.
சிந்தனை
‘ஒளி உங்களோடு இருக்கும்போதே ஒளியை ஏற்றுக்கொள்ளுங்கள். அப்போது ஒளியைச் சார்ந்தவர்கள் ஆவீர்கள்’ (யோவா 12: 36) என்பார் இயேசு. ஆகையால், நாம் ஒளியாம் இயேசுவையும், அவருடைய சீடர்களையும் ஏற்றுக்கொண்டு, இயேசுவின் வழியில் நடப்போம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்
Source: New feed