தான் அண்மையில் கையெழுத்திட்ட, “அனைவரும் உடன்பிறந்தோர் (FratelliTutti)” என்ற திருமடலை மையப்படுத்தி, டுவிட்டர் செய்திகளை வெளியிட்டுவரும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அக்டோபர் 09, இவ்வெள்ளியன்று, அனைவரும் உடன்பிறந்தோர் என்ற (#FratelliTutti) ‘ஹாஷ்டாக்’குகளுடன், மேலும் இரு டுவிட்டர் செய்திகளை வெளியிட்டுள்ளார்.
“அன்பு முதலிடத்தைப் பெறுகின்றது என்பதை, நாம் அனைவரும், நம்பிக்கையாளர்கள் என்ற முறையில் ஏற்கவேண்டிய தேவை உள்ளது. அன்பை ஒருபோதும் நெருக்கடியில் வைத்துவிடக் கூடாது. அன்புகூரத் தவறுவதிலேதான், மிகப்பெரும் ஆபத்து உள்ளது (cf. 1கொரி.13:1-13)” என்ற சொற்கள், திருத்தந்தையின் முதல் டுவிட்டர் செய்தியில், இவ்வெள்ளியன்று பதிவாகியிருந்தன.
திருத்தந்தை, தனது இரண்டாவது டுவிட்டர் செய்தியில், “நமக்கு அடுத்திருப்பவர் எத்தகையவராய் இருந்தாலும், அவர் மீது நாம் காட்டும் அன்பு, அவருக்கு சிறப்பான நல்வாழ்வை அளிக்கும் வழிகளைத் தேட நம்மை இட்டுச்செல்கின்றது. ஒருவர் ஒருவரோடு இத்தகையதோர் உறவை உருவாக்கும் வழியால் மட்டுமே, எவரும் ஒதுக்கப்படாமல் இருக்கின்ற, மற்றும், உடன்பிறந்த உணர்வு அனைவருக்கும் திறந்ததாய் அமைகின்ற, சமுதாய நட்பு இயலக்கூடியதாகும்” என்ற கருத்தை வெளியிட்டார்.
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அசிசி நகர் புனித பிரான்சிஸ் இறைபதம் சேர்ந்த நாளாகிய அக்டோபர் 3ம் தேதி, அசிசியில், அப்புனிதரின் கல்லறையில் “அனைவரும் உடன்பிறந்தோர் (FratelliTutti)” என்ற திருமடலில் கையெழுத்திட்டார். இந்த திருமடல் அக்டோபர் 4, அந்த புனிதரின் திருநாளன்று வெளியிடப்பட்டது.
Source: New feed