
இம்மாதம் இரண்டாம் திகதி (இன்று) தொடக்கம் மாதம் முழுவதும் திருஅவையானது விசேட விதமாக இறந்த ஆன்மாக்களை நினைவுகூருகின்றது. உலகில் தோன்றும் எல்லா உயிர்களும் பிறப்பு, வளர்ச்சி, தளர்ச்சி, இறப்பு என்னும் நியதிக்கு உட்பட்டவையே. ஆயினும் பிறப்பு என்பது மண்ணக வாழ்வுப் பயணத்தின் தொடக்கம் என்றும் அப்பயணத்தின் முடிவு இறப்பு என்றும் உணர்கின்ற ஒரே உயிர் மனிதன் தான்.
பிறப்புக்கும் இறப்புக்கும் இடையே உள்ள காலம் மனிதரின் மண்ணுலக வாழ்வு. இறப்பிற்கு அப்பாற்பட்ட வாழ்வு ஒன்று உண்டு என்பது இறை நம்பிக்கை கொண்டவர்களுடைய விசுவாசம். கிறிஸ்தவ விசுவாசம் மனிதரின் மண்ணுலக வாழ்வுக்கு அர்த்தம் தருகின்றது. இறப்பு என்பது இவ்வுலக வாழ்வின் முற்றுப்புள்ளி அல்ல. மனிதனின் இவ்வுலக வாழ்வை முடிவுக்கு கொணர்ந்து அதனை நித்தியத்திற்கும் இறைவனில் நிலைத்திருக்கச் செய்து மனித வாழ்வுக்கு அர்த்தம் கொடுப்பது இறப்பு ஆகும். இவ்வுலகில் இறப்பு என்பது துன்பம் தருவதாக இருக்கலாம், கொடுமையானதாகத் தோன்றலாம், நம்மால் ஏற்றுக்கொள்ள முடியாததாக இருக்கலாம். அவ்வாறு இருந்தாலும் இறைவனின் சாயலாகப் படைக்கப்பட்ட மனிதர்களாகிய நாம் இறைவனிலே சங்கமம் ஆகிட இறப்பு அசியமாகின்றது.
ஆனால் நாம் இவ் இறப்பை ஏற்கத் தயங்குகின்றோம். அதைக் கண்டு பயப்படுகின்றோம். காரணம் இறப்பை நாம் தவறாகப் புரிந்து கொண்டிருக்கின்றோம். அதை நாம் அழிவின் சின்னமாக நினைத்துக் கொண்டிருக்கின்றோம். மரணத்தோடு எல்லாம் முடிந்துவிடுகின்றது என்ற ஓர் அவநம்பிக்கை நம்மிடையே உள்ளது. ஒரு கிறிஸ்தவனுடைய இறப்பு என்பது இழப்பல்ல. அது நம்பிக்கையின் அடையாளம். புனித பவுல் அடிகள் கூறுவது போல அது அவருக்கு ஆதாயம். ஏனெனில் இறப்பானது முடிவில்லா வாழ்வைப் பெற்றுத் தருகின்றது.
நாம் ஆவலோடு எதிர்பார்த்துக் காத்திருந்த இறைவனை நேருக்கு நேராகக் காண்போம். அவருடைய மாட்சியிலே பங்குபெறுவோம் என்ற நம்பிக்கையை அளிக்கின்றது. விசேட விதமாக ஆன்மாக்களை நினைகூருவதற்காக தரப்பட்டிருக்கும் இம்மாதத்தில் இறப்பின் பொருளை நாம் உணர்வோம். இறைவனை முகமுகமாய் காணும் அந்த நாளுக்காக நம்மை தயார்படுத்துவோம். அத்தோடு இறந்த எம் உறவுகளின் ஆன்மாக்களுக்காகவும், உத்தரிப்பு ஸ்தலத்திலுள்ள ஆன்மாக்களுக்காகவும், யாரும் நினையாத ஆன்மாக்களுக்காகவும் திருப்பலி ஒப்புக்கொடுத்து செபிப்போம்
Source: New feed