துன்புறுவோரிடையே அன்பின் கருவிகளாக நம்மை அர்ப்பணிப்போம்

மீட்பு என்பது அனைவருக்கும் வழங்கப்படும் ஒன்று எனினும், ஏழைகள், எளிதில் பாதிப்புக்கு உள்ளாவோர், மற்றும், வாழ்வில் கடைநிலைக்குத் தள்ளப்பட்டோர் மீது, இறைவன் சிறப்புக் கவனம் செலுத்துகின்றார் என்றார், திருத்தந்தை பிரான்சிஸ்.

உரோம் நகரில் வாழும், பிலிப்பீன்ஸ் நாட்டைச் சேர்ந்த புலம் பெயர்ந்த மக்களுக்கு இஞ்ஞாயிறு மாலையில் திருப்பலி நிறைவேற்றிய திருத்தந்தை, அன்றும் இன்றும் தொடர்ந்துகொண்டிருக்கும் இத்தகைய வறுமை மற்றும் அநியாய நிலைகளால் பாதிக்கப்பபட்டிருக்கும் மக்களிடையே அன்பின் கருவிகளாக நம்மை அர்ப்பணிப்போம் என கேட்டுக்கொண்டார்.

கிறிஸ்து பிறப்பு விழாவுக்கு 9 நாட்களுக்கு முன்னர், நவநாள் செப வழிபாட்டைத் துவக்கி நடத்திவரும் பிலிப்பீன்ஸ் கத்தோலிக்கர்களின் வழக்கமுறையையொட்டி, இஞ்ஞாயிறன்று, உரோம் நகரில் வாழும் பிலிப்பீன்ஸ் கத்தோலிக்கர்களுக்கு திருப்பலி நிறைவேற்றி நவநாள் முயற்சிகளைத் துவக்கிவைத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அடக்கி ஒடுக்கப்பட்டோர், பசியால் வாடுவோர், சிறையிலிருப்போர், அயலார், அனாதைகள், விதவைகள் ஆகியோர், இறைவனின் தனிக் கவனத்திற்குரியவர்கள் என்பதை உணர்ந்து செயல்படுவோம் என கேட்டுக்கொண்டார்.

மனிதனாகப் பிறந்து, நம்மோடு இருந்து, அவ்விருப்பின் அடையாளமாக,  அரும்பெரும் செயல்களை ஆற்றிவரும் இறைவனின் கருணைநிறை அன்பின் கருவிகளாக, வறியோரிடையே நாம் செயலாற்ற உதவ வேண்டும் என இறைவனை வேண்டுவோம் என கேட்டுக்கொண்டார், திருத்தந்தை பிரான்சிஸ்.

கிறிஸ்துமஸ் பெருவிழாவுக்கு முந்தைய ஒன்பது நாட்களும் நவநாள் கொண்டாடும் பழக்கத்தை பிலிப்பீன்ஸ் கத்தோலிக்கர்கள் தற்போது தாங்கள் வாழும் அனைத்து நாடுகளுக்கும் எடுத்துச் சென்றுள்ளது குறித்தும், தன் மகிழ்ச்சியை வெளியிட்டார், திருத்தந்தை.