
பணியிலிருந்து ஓய்வுபெற்ற பாக்கியம் ஆசிரியர், தன் இறுதி நாள்களை அமைதியாகக் கழிக்க விரும்பினார். அதனால் அவர் நகருக்கு வெளியே ஓர் இடம் வாங்கி, அங்கே புதிதாக ஒரு வீடுகட்டி, அதில் தன் மனைவி மக்களுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தார். பாக்கியம் ஆசிரியர் விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்தவர் என்பதால், வீட்டிற்குப் பின்னால் இருந்த இடத்தில் பழ மரங்களையும் காய்கறிச் செடிகளையும் வளர்த்து வந்தார்.
எல்லாம் நன்றாகப் போய்க்கொண்டிருந்த வேளையில், பாக்கியம் ஆசிரியர் வீட்டிற்குப் பக்கத்து வீட்டில் இருந்த சந்திரன் என்ற பெரியவர், அவர்மீது காழ்ப்புணர்வு கொண்டு, அவருடைய வீட்டிற்குள் குப்பையை வீசி வந்தார். ‘சில நாள்களில் எல்லாம் சரியாகிவிடும்’ என்று நினைத்துக்கொண்டு பாக்கியம் ஆசிரியர் பொறுமையாய் இருந்தபோது, நாளுக்கு நாள் சந்திரன் என்ற அந்தப் பெரியவர் செய்த அட்டூழியங்கள் கூடிக்கொண்டே போயின.
ஒருநாள் காலையில் பாக்கியம் ஆசிரியர் வீட்டுக் கதவைத் திறந்துகொண்டு, வெளியே வந்தபோது, வீட்டிற்கு முன்னால் குப்பைக் கூடை ஒன்று இருந்தது கண்டு அதிர்ந்துபோனார். ‘எல்லாம் இந்தச் சந்திரனின் வேலையாகத்தான் இருக்கும்’ என்று அவர் மனத்தில் நினைத்துக்கொண்டு குப்பைக் கூடையை எடுத்து, அதனை நன்றாகக் கழுவி, தன்னுடைய தோட்டத்தில் விளைந்திருந்த பழங்களாலும் காய்கறிகளாலும் நிரப்பி, பக்கத்து வீட்டில் இருந்த சந்திரனிடம் போய்க் கொடுத்தார்.
அதைப் பார்த்ததும் சந்திரன், “இத்தனை நாள்களும் நான் உங்களுடைய வீட்டில் குப்பையைக் கொட்டியபோது, அதற்குப் பதிலாக நீங்கள் எனக்குப் பழங்களையும் காய்கறிகளையும் கொடுக்கின்றீர்களே!” என்று நெகிழ்ச்சியுடன் கேட்டார். அதற்குப் பாக்கியம் ஆசிரியர், “யாரிடம் எது மிகுதியாக உள்ளதோ, அதைத்தானோ அவர்கள் கொடுப்பார்கள்” என்றார். இவ்வார்த்தைகள் சந்திரனின் உள்ளத்தை வெகுவாகப் பாதிக்க, அவர் தன்னுடைய தவற்றை உணர்ந்து, பாக்கியம் ஆசிரியரிடம் மன்னிப்புக் கேட்டார். அதன்பிறகு இருவரும் நல்ல நண்பர்களாய் வாழ்ந்து வந்தார்கள்.
ஆம், தன் பக்கத்து வீட்டில் இருந்த சந்திரன் என்ற பெரியவர் குப்பையை, வெறுப்பை வீசியபோதும் பாக்கியம் ஆசிரியர் அவர்மீது அன்பை மட்டுமே பொழிந்தார். இவ்வாறு அவர் கிறிஸ்துவை அணிந்துகொண்டவர் என்பதற்கு இலக்கணமாகத் திகழ்ந்தார். திருவருகைக் காலத்தின் முதல் ஞாயிறான இன்று நாம் வாசிக்கக்கேட்ட இறைவார்த்தை, “இயேசு கிறிஸ்துவை அணிந்துகொள்ளுங்கள்” என்ற அழைப்பினைத் தருகின்றது. நாம் ஏன் கிறிஸ்துவை அணிந்துகொள்ளவேண்டும்? கிறிஸ்துவை அணிந்து கொள்வதனால் நாம் பெறும் ஆசிகள் என்ன? என்பன குறித்து நாம் சிந்திப்போம்.
பகல் நெருங்கி உள்ளது:
அனைத்துக்கும் அரசராம் நாம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் பெருவிழாவைக் கொண்டாடிவிட்டுத் திருவருகைக் காலத்தில் இன்று அடியெடுத்து வைக்கின்றோம். இந்த நல்ல நாளில், இன்றைய இரண்டாம் வாசகத்தின் வழியாகப் பவுல் விடுக்கின்ற அழைப்புதான், “கிறிஸ்துவை அணிந்துகொள்ளுங்கள்” என்பதாகும்.
கிறிஸ்துவை அணிந்துகொள்ளுங்கள் என்றால், ஓர் ஆடையைப் போன்று அவரை அணிந்து கொள்வதல்ல; மாறாக, அவரது மதிப்பீடுகளின்படி வாழ்வது. நாம் ஏன் கிறிஸ்துவின் மதிப்பீடுகளினபடி வாழவேண்டும் எனில், இதுவே இறுதிக்காலம், அல்லது இரவு முடியப் போகிறது, பகல் நெருங்கி உள்ளது என்பதாலாகும். இருளின் ஆட்சிக்குரிய செயல்களைக் களைந்துவிட்டு, ஒளியின் ஆட்சிக்குரிய படைக்கலங்களை அணிந்துகொள்வதுதான் முறையானது. இருளின் ஆட்சிக் குரிய செயல் எவை என்று இன்றைய இரண்டாம் வாசகத்தின் இறுதியில் பவுல் விவரிக்கின்றார்.
ஆதலால், இது இறுதிக் காலம் என்பதாலும், ஆண்டவரின் வருகை அண்மையில் இருப்பதாலும், நாம் கிறிஸ்துவை அணிந்துகொண்டு, அவரது மதிப்பீடுகளின்படி வாழ்வது இன்றியமையாததாக இருக்கின்றது.
அமைதியின் அரசர்:
‘ஆசை துறந்தால் அகிலம் உனக்கு’ – என்பது பல பெரியவர்களும் தங்கள் வாழ்க்கை அனுபவத்தில் கண்டறிந்த உண்மை. ஆனால், இந்த உண்மையை உணராமல், பலரும் மண்மீதும், பொன்மீதும் கொண்ட ஆசையால் நாடுகள்மீது போர்தொடுத்தும், அதற்காகப் பல்லாயிரக்கணக்கான உயிர்களைப் பலிகொடுத்துக் கொண்டும் இருக்கின்றார்கள். இது இன்று நேற்று அல்ல, காலங்காலமாகவே இருந்து வருகின்றது. இப்படி இவ்வுலக அரசர்கள் போர்களையும் வன்முறைகளையும் அரங்கேற்றிக் கொண்டிருக்கும் வேளையில், வரவிருக்கும் மெசியா அமைதியின் அரசராக இருப்பார் என்கிறது இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய முதல் வாசகம்.
சீயோன் மலை, எல்லாருக்கும் பொதுவான ஒன்று, ஏனெனில், அங்குதான் மெசியாவாம் இயேசு அமைதியின் அரசராய் (எசா 9:6) வீற்றிருந்து ஆட்சி செலுத்துவார். அவரது காலத்தில் போர்களோ, சண்டை சச்சரவோ எதுவுமே இராது என்பதுதான் இறைவாக்கினர் எசாயா உரைக்கின்ற இறைவாக்கு. இயேசுவின் இரண்டாம் வருகையின்போது இதெல்லாம் நிறைவேறும் என்பதுதான் திருவிவிலிய அறிஞர்களின் கூற்று.
விழிப்பாகவும் ஆயத்தமாகவும் இருங்கள்:
இரவு முடிந்து பகல் நெருங்கி உள்ளது என்றும், அமைதியின் அரசர் வரப்போகிறார் என்றும் நாம் சிந்தித்துப் பார்த்தோம். இத்தகைய அமைதியின் அரசரது வருகைக்கு நாம் எவ்வாறு தயார் செய்ய வேண்டும் என்பதற்கான தெளிவினைத் தருகின்றது இன்றைய நற்செய்தி வாசகம்.
Source: New feed