
ஆண்டவரின் தோட்டத்தில் தாழ்மையுள்ள பணியாளராக எட்டாண்டுகள் பணியாற்றி இன்று இறைவனின் விண்ணகத் தோட்டத்தை அலங்கரித்துக் கொண்டிருக்கும் முன்னாள் திருத்தந்தை 16 ஆம் பெனடிக்ட் அவர்களின் இறுதிச்சடங்கு வழிபாட்டு நிகழ்வுகள் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களால் சிறப்பாக நிறைவேற்றப்பட்டன. டிசம்பர் 31 சனிக்கிழமை பழைய ஆண்டை நிறைவாக முடித்து புதிய ஆண்டை புத்துணர்வுடன் வரவேற்க உலகமே காத்திருந்த நேரத்தில், தனது இவ்வுலகை வாழ்வை இனிதே வாழ்ந்து, விண்ணுலகில் புத்தாண்டை விண்ணகத் தூதர் அணிகளுடன் கொண்டாட எண்ணி, ஆண்டவரே நான் உம்மை அன்பு செய்கிறேன் என்று கூறி இறைப்பதம் சேர்ந்தார் திருத்தந்தை 16ஆம் பெனடிக்ட். எட்டாண்டு கால திருத்தந்தை தலைமைத்துவப் பணியைச் சிறப்பாக செய்து முடித்து, திருஅவைக்கும் உலகத்திற்கும் ஏராளமான நன்மைகளாற்றிய உள்ளம், இன்று விண்ணகத்தை அடைந்து விட்டது.
சனவரி 2 திங்கள் முதல் 4 புதன் வரை பொதுமக்களின் பார்வைக்காக வத்திக்கான் புனித பேதுரு பெருங்கோவில் திருப்பலிப்பீடத்தின் முன் வைக்கப்பட்ட முன்னாள் திருத்தந்தை பெனடிக்ட் அவர்களின் உடலைக் காண, இறுதி அஞ்சலி செலுத்த ஏறக்குறைய 2 இலட்சத்திற்கும் அதிகமான மக்கள் திரண்டு வந்தனர். அருள்பணியாளர்களையும் இருபால் துறவிகளையும் அதிகமாகக் கொண்ட வத்திக்கான் நகரத்தில் இந்த நாட்களில் வழக்கத்தை விட அதிகமானோரைக் காண முடிந்தது. உரோம் உள்ளூர் நேரம் காலை 7 மணி முதல் மாலை 7 மணிவரை இடைவிடாத செபமாலை, இறந்தோர் புகழ் திருப்பாடல்கள், செபங்கள் என செபச்சூழலில் மக்கள் அலை அலையாக அவரது உடலைக் காண வந்தனர்.
சனவரி 5, வியாழன் வத்திக்கான் புனித பேதுரு பெருங்கோவில் வளாகத்தில் திருத்தந்தை பெனடிக்ட் அவர்களின் இறுதிச்சடங்குத் திருப்பலியானது திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தலைமையில் 60க்கும் மேற்பட்ட கர்தினால்கள், 400 ஆயர்கள், 4000 அருள்பணியாளர்கள், 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்களையும் 600 க்கும் மேற்பட்ட பத்திரிக்கை மற்றும் தகவல் தொடர்பு பணியாளர்களின் பங்கேற்போடு சிறப்பாக எளிமையாக நடைபெற்றது. 320 ஆண்டுகளுக்கு முன் அதாவது 1802 ஆம் ஆண்டு திருத்தந்தை 7ஆம் பயஸ் அவர்களால், அவருக்கு முன்னாள் இருந்த திருத்தந்தை 6 ஆம் பயஸ் அவர்களுக்காக இறுதிச்சடங்குத் திருப்பலி வத்திக்கானில் நிறைவேற்றப்பட்டது. அதனைத்தொடர்ந்து 2022ஆம் ஆண்டுதான் ஒரு திருத்தந்தை, மறைந்த திருத்தந்தையின் இறுதிச்சடங்குத் திருப்பலியை நிறைவேற்றுவது இடம்பெற்றுள்ளது. உலக கத்தோலிக்க தலைவர்கள், இத்தாலிய, ஜெர்மன் அரசுத்தலைவர்கள் பலர் இவ்விறுதிச் சடங்குத்திருப்பலியில் கலந்துகொண்டனர்.
வெண்பனி மேகம் வத்திக்கான் நகரத்தை சூழ்ந்து நிறைந்திருந்தது, விண்ணகத்தூதர்கள் அணியும் மண்ணக மக்களோடு இணைந்து திருத்தந்தை 16ஆம் பெனடிக்டின் இறுதி நிகழ்வில் கலந்து கொள்ள வந்தது போன்ற சூழலை உருவாக்கியது. உள்ளூர் நேரம் காலை 8.45 மணியளவில் சைப்ரஸ் மரத்தாலான பெட்டியில் திருத்தந்தை பெனடிக்ட் அவர்களின் உடல் எடுத்து வரப்பட்டது. கூடியிருந்த மக்கள் அனைவராலும் திருத்தந்தை பெனடிக்ட் அவர்களின் ஆன்மா இறைவனில் நிறையமைதி பெற செபமாலை செபிக்கப்பட்டு, இறுதி அஞ்சலிப் பாடல்களும் பாடப்பட்டன. இலத்தீன் மற்றும் இத்தாலிய மொழியில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களால் நிறைவேற்றப்பட்ட திருப்பலியில் கர்தினால் ஜொவான்னி பத்திஸ்தா ரே உடன் இருந்து வழி நடத்தினார். முதல் வாசகம் இலத்தீனிலும் இரண்டாம் வாசகம் ஆங்கிலத்திலும் நற்செய்தி வாசகம் இத்தாலியத்திலும் வாசிக்கப்பட்ட திருப்பலியில் திருத்தந்தை மறையுரை வழங்கினார்.
திருத்தந்தையின் மறையுரையின் சுருக்கம்
தந்தையே உமது கரங்களில் என் ஆவியை ஒப்புவிக்கிறேன்” என்று (லூக் 23:46) இயேசு சிலுவையில் சொன்ன அவரது கடைசி மூச்சின் வார்த்தைகளான இவைகள் தனது வாழ்நாள் வரை அவர் செய்த அனைத்தையும் இறைத்தந்தையை நினைத்து அவர் வாழ்ந்ததை சுருக்கமாக எடுத்துரைக்கின்றன. இறைத்தந்தையின் கைகள் இடைவிடாத தன்னம்பிக்கை, மன்னிப்பு, இரக்கம், குணப்படுத்துதல், கருணை, ஆறுதல், ஆசீர்வாதம் போன்றவற்றை வழங்கும் கரங்கள். இத்தகைய கைகளில் தன்னை ஒப்படைத்ததுதான் இயேசு தன் உடன்சகோதர சகோதரிகளின் கைகளில் தன்னை ஒப்படைக்க வழிவகுத்தது. தனிநபர்கள் ஒவ்வொருவரின் இதயத்தையும், அவர்களது தனிப்பட்ட வாழ்விற்கான வழிகளையும் திறந்த தந்தையின் விருப்பத்திற்கு ஏற்ப இயேசுவும் தன்னை வடிவமைக்க அனுமதித்தார். அனைத்துத் துன்பங்களையும், தனது தோளில் சுமந்தார். அவர் நம்மீது கொண்ட அன்பிற்காகத் தம் கைகளில் ஆணிகளால் ஏற்பட்ட தழும்புகளைத் திருத்தூதர் தோமாவிடம் காட்டியதைப் போல இன்று நம்மிடமும் காட்டுகின்றார் என் கைகளைப் பார் என்று(யோவான் 20:27). ஆணிகளால் துளையிடப்பட்டு உண்டான அக்கைகளின் காயங்கள், கடவுள் நம்மீது வைத்திருக்கும் அன்பை அடையாளம் கண்டு, அதில் நம்பிக்கை கொள்ள நம்மை தொடர்ந்து அழைக்கின்றன.
மேன்மையான பக்தி இதயம்
“தந்தையே உம் கையில் என் ஆவியை ஒப்படைக்கின்றேன் என்பதே இறைவன் அமைதியாய் நமக்குள் தூண்டும் அழைப்பும் வாழ்க்கைத் திட்டமும் ஆகும். ஒரு குயவனைப் போலவும், இயேசுவின் இதயத்தைப் போலவும் அவர் பணியாற்றும் ஒவ்வொருவரின் இதயத்தையும் வடிவமைக்க விரும்புகின்றார். கடவுளுக்கும் கடவுளின் மக்களுக்கும் பணியாற்றுவதற்கான சேவை மனம், கடவுளின் மிகச்சிறந்த பரிசிற்கான நன்றியுணர்விலிருந்து பிறக்கின்றது. மறைந்த திருத்தந்தை பெனடிக்ட் தன் மறையுரைகளில் வலியுறுத்தியது போல, நீங்கள் எனக்குச் சொந்தமானவர்கள், நீங்கள் என் பாதுகாப்பில் இருக்கின்றீர்கள், என் கைகளில் என் இதயத்தில் பாதுகாப்பாக இருக்கின்றீர்கள் என் கையில் இரு. உன்னுடையதை எனக்குக் கொடு என்று இறைவன் நமக்கு தெரிவிக்கின்றார். இத்தகைய இதயமே தம்முடைய சீடர்களின் பலவீனமான கைகளுக்குத் தம்மை ஒப்படைப்பதற்குத் தயாராக இருக்கும் இணக்கத்தையும் நெருக்கத்தையும் இயேசுவினிடத்தில் வெளிப்படுத்தியது. அதனால்தான் அவர் தன் உடலை அவர்களுக்கு அளித்து, இது உங்களுக்காகக் கொடுக்கப்படும் எனது உடல், இதை என் நினைவாகச் செய்யுங்கள் என்றுக் கையளிக்கின்றார். (லூக்கா 22:19).
Source: New feed