உலகளாவிய செஞ்சிலுவை சங்கத் தலைவரான Peter Maurer அவர்கள், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களை, அக்டோபர் 19, இத்திங்கள் மாலையில் வத்திக்கானில் சந்தித்து கலந்துரையாடினார்.
திருத்தந்தையைச் சந்தித்த பின்னர், திருப்பீடச் செயலர் கர்தினால் பியெத்ரோ பரோலின் அவர்களையும், Peter Maurer அவர்கள் சந்தித்தார்,
இந்த சந்திப்புகள் குறித்து வத்திக்கான் செய்தித் துறைக்குப் பேட்டியளித்த Maurer அவர்கள், உலகளாவிய செஞ்சிலுவை சங்கம், குறிப்பாக, இந்த கொள்ளைநோய்க்கு மத்தியில் அச்சங்கம் ஆற்றிவரும் பணிகள் பற்றியும், அந்த சங்கத்திற்கும், திருப்பீடத்திற்கும் இடையே நிலவும் பொதுவான விழுமியங்கள், ஆவல்கள் மற்றும், கண்ணோட்டங்கள் பற்றியும் எடுத்துரைத்தார்.
உலகளாவிய செஞ்சிலுவை சங்கமும், திருப்பீடமும், போர் மற்றும், வன்முறைக்குப் பலியான மக்களுக்கு ஆதரவாகச் செயல்பட்டு வருகின்றன என்றும், அனைவரையும் உள்ளடக்கிய, ஒன்றிணைந்த ஒரு சமுதாயத்தை உருவாக்குவதற்கு திருத்தந்தை மிகவும் ஆவலாக உள்ளார் என்றும், Maurer அவர்கள் கூறினார்.
அனைவரும் உடன்பிறந்தோர் என்ற திருத்தந்தையின் புதிய திருமடல் பற்றியும் கருத்து தெரிவித்த Maurer அவர்கள், உலகளாவிய செஞ்சிலுவை சங்கம், பல ஆண்டுகளாக, இந்த ஓர் உணர்வுடனே பணியாற்றி வருகின்றது என்றும், இந்த ஓர் உணர்வில் திருத்தந்தை மற்றும், திருப்பீடத்துடன், இந்த சங்கம், நெருங்கிய தொடர்புகொண்டிருப்பது பெருமையாக உள்ளது என்றும் கூறினார்.
போர்ப் பகுதிகளில் பணியாற்றிவரும் செஞ்சிலுவை சங்கத்தின் நாற்பது விழுக்காட்டிற்கும் அதிகமான பணிகள் ஆப்ரிக்காவிலும், முப்பது விழுக்காட்டிற்கும் அதிகமான பணிகள் மத்தியக் கிழக்கிலும், இன்னும், ஆப்கானிஸ்தான், இலத்தீன் அமெரிக்கா போன்ற பகுதிகளிலும் இடம்பெறுகின்றன என்றும், கடந்த ஆறு ஆண்டுகளில் புதிதாகப் போர்கள் தொடங்கியுள்ள உக்ரேய்ன், அர்மேனியா, அசர்பைஜான் பகுதியிலும் இச்சங்கம் பணியாற்றி வருகின்றது என்று, Peter Maurer அவர்கள் கூறினார்.