உலகளாவிய திருஅவையில் திருத்தந்தையரின் தலைமைத்துவம், திருத்தந்தையரின் அதிகாரப்பூர்வ அறிக்கைகளின் தவறாவரம் ஆகியவை குறித்த கோட்பாடுகள், முதலாம் வத்திக்கான் பொதுச்சங்கத்தில் அங்கீகரிக்கப்பட்டதன் 150ம் ஆண்டு நிறைவு, ஜூலை 18, இச்சனிக்கிழமையன்று நினைவுகூரப்படுகின்றது.
1869ம் ஆண்டு டிசம்பர் மாதம் 8ம் தேதி துவங்கிய இந்த முதலாம் வத்திக்கான் பொதுச்சங்கத்தில், நீண்ட நேரம் இடம்பெற்ற விவாதத்திற்குப் பின், இந்த இரு கோட்பாடுகளும் நிறைவேற்றப்பட்டன. இந்த இரு கோட்பாடுகளை விவரிக்கும் Pastor Aeternus என்ற கொள்கை விளக்கம், 1870ம் ஆண்டு ஜூலை 18ம் தேதி வெளியிடப்பட்டது.
இது வெளியிடப்பட்ட 150ம் ஆண்டு நிறைவை நினைவுகூரும் இவ்வேளையில், அந்த இரு கோட்பாடுகளும் திருஅவைக்கு எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தவை என்பதை, வத்திக்கான் செய்தித்துறை விரிவாக அலசியுள்ளது.
திருத்தந்தை புனித 6ம் பவுல் அவர்கள், 1969ம் ஆண்டில் பொது மறைக்கல்வியுரையில் கூறியதுபோன்று, இந்த கொள்கை விளக்கம், நீண்ட, தீவிர உணர்வு நிறைந்த, மற்றும், மிகக் கடுமையான வாக்குவாதங்கள் இடம்பெற்றபின், அதில் பங்குகொண்ட 535 பொதுச்சங்கத் தந்தையரால் ஒரே மனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. எனினும், இந்த வாக்கெடுப்பில் 83 பொதுச்சங்கத் தந்தையர் பங்கெடுக்கவில்லை.
Pastor Aeternus என்ற கொள்கை விளக்கத்தில், திருத்தந்தை 9ம் பயஸ் அவர்கள், திருத்தந்தையரின் தலைமைத்துவம் பற்றிய கோட்பாட்டை அறிவிப்பதற்குமுன், நாம் இருவரும் ஒன்றாய் இருப்பதுபோன்று, தம் சீடர்களும் ஒன்றாய் இருக்குமாறு, இயேசு தம் இறுதி இரவு உணவில் தம் இறைத்தந்தையிடம் செபித்ததைக் குறிப்பிட்டார்.
திருத்தூதர் பேதுருவும், அவரின் வழிவருபவர்களும், திருஅவை ஒன்றிப்பின் காணக்கூடிய அடித்தளம் என்றும் கூறிய திருத்தந்தை 9ம் பயஸ் அவர்கள், திருத்தந்தையரின் அதிகாரப்பூர்வ அறிக்கைகளின் தவறாவரம் பற்றிக் கூறுகையில், இந்த அதிகாரம், அனைவரின் மீட்புக்காக, திருத்தூதர் பேதுரு மற்றும், அவரின் வழிவருபவர்களுக்கு வழங்கப்பட்டது என்று விளக்கினார்.
திருத்தந்தை 9ம் பயஸ் அவர்கள், 1912ம் ஆண்டு, பொது மறைக்கல்வியுரையில் கூறுகையில், இந்த இரு கோட்பாடுகளையும் கடந்து, அனைவரும், திருத்தந்தையரை அன்புகூரவேண்டும் மற்றும், அவர்களுக்கு கீழ்ப்படியவேண்டும், இவ்வாறு இடம்பெறவில்லையெனில், தான் மிகவும் வேதனையடைவதாகக் கூறினார்.
முன்னாள் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்கள், 2006ம் ஆண்டு மே மாதம் 27ம் தேதி போலந்து நாட்டின் கிரக்கோவ் நகரில் சந்தித்தபோது, திருஅவை மீதும், திருஅவையோடும் உங்கள் வாழ்வைக் கட்டியெழுப்ப அஞ்சவேண்டாம் என்றும், திருத்தூதர் பேதுரு மற்றும், அவரிடம் ஒப்படைக்கப்பட்ட திருஅவையை அன்புகூர்வது குறித்து நீங்கள் அனைவரும் பெருமிதம் கொள்ளுங்கள் என்றும் கூறினார்.
Source: New feed