உரோம் நேரம் காலை பத்து மணிக்கு, வத்திக்கான் புனித பேதுரு பெருங்கோவிலில் விசுவாசிகளின் பங்கேற்பின்றி பெந்தக்கோஸ்து பெருவிழா திருப்பலியை நிறைவேற்றியபின், வத்திக்கான் பாப்பிறை இல்லத்தின் மேல்மாடி சன்னல் வழியாக, அல்லேலூயா வாழ்த்தொலி உரை வழங்கிய திருத்தந்தை, திருஅவையின் மறைப்பணி பண்பு குறித்து எடுத்துரைத்தார்.
இஞ்ஞாயிறு நற்செய்தி வாசகம் (யோவா.20,19-23), உயிர்ப்பு நாள் மாலையில், எருசலேம் மாடி அறையில் இயேசு தன் சீடர்களுக்குத் தோன்றிய நிகழ்வுக்கு நம்மை அழைத்துச் செல்கின்றது என்றுரைத்த திருத்தந்தை, அந்நேரத்தில் ஆண்டவர் அவர்களிடம், உங்களுக்கு அமைதி உரித்தாகுக என்று வாழ்த்தியது, அவரின் பாடுகள் சமயத்தில் அவரைவிட்டுச் சென்ற சீடர்களோடு ஒப்புரவாகுவது மற்றும், அவர்களை மன்னிப்பதன் வெளிப்பாடாக அமைந்துள்ளது என்று கூறினார்.
ஒப்புரவாக்கப்பட்ட குழுமம்
மன்னிப்பது மற்றும், சீடர்களை, தம்மைச் சுற்றி வைத்திருப்பதன் வழியாக, இயேசு, அவர்களை, ஒப்புரவாக்கப்பட்ட குழுமமாகவும், மறைப்பணிக்குத் தயாராக இருக்கும் திருஅவையாகவும், அவர்களை அமைத்தார் என்று கூறினார், திருத்தந்தை பிரான்சிஸ்.
இயேசு தான் உயிர்த்தபின் சீடர்களுக்குத் தோன்றிய முதல் நாளிலிருந்து, அதைத் தொடர்ந்த நாற்பது நாள்களும், அவர் அவர்களோடு இருந்தார், அந்நாள்களில் அவர் ஆற்றியது அனைத்தும், அவர்களை நம்பிக்கையில் உறுதிப்படுத்தியதாகவே இருந்தன என்று திருத்தந்தை கூறினார்.
மறைப்பணி ஆர்வத்தைத் தூண்டுவதற்காக, இயேசு, அன்பின் நெருப்பாகிய தூய ஆவியாரை அவர்களுக்கு அனுப்பினார், அதன்வழியாக சீடர்களும், உலகில் அன்பின் நெருப்பை பற்ற வைத்தனர் என்றுரைத்த திருத்தந்தை, நாமும் திருமுழுக்கு மற்றும், உறுதிபூசுதல் அருளடையாளங்களில், தூய ஆவியாரையும், அவரின் கொடைகளையும் பெறுகிறோம் என்று எடுத்துரைத்தார்.
ஆண்டவரில் நம்பிக்கை
நாம் பெறும் கொடைகளில் ஆண்டவர் பற்றிய அச்சமும் ஒன்று என்றும், அதற்குமுன், சீடர்களை முடக்கிப்போட்டிருந்த அச்சத்திற்கு இது எதிரானது என்றும் உரையாற்றிய திருத்தந்தை, ஆண்டவர் மீதுள்ள அச்சம், அவர் மீதுள்ள அன்பு, அவரின் இரக்கம் மற்றும், நன்மைத்தனத்தில் நம்பிக்கை வைப்பதை அடிப்படையாகக் கொண்டது என்றும் கூறினார்.
இந்த நம்பிக்கை, அவரின் பிரசன்னமும், ஆதரவும் நம்மைவிட்டு ஒருபோதும் அகலாது என்ற அறிவில், நாம் ஆண்டவர் அளிக்கும் உள்தூண்டுதல்களைப் பின்செல்ல வைக்கின்றது என்றும், திருத்தந்தை கூறினார்.
நமது ‘மேல்மாடி அறைகளான” பாதுகாப்பான சுவர்களைவிட்டு வெளியே செல்வதற்கு நமக்குத் தூய ஆவியார் துணிவைத் தருவாராக என்றும், புனித கன்னி மரியா, திருஅவைக்கு, மிகுந்த மறைப்பணி ஆர்வத்தை அளிப்பாராக என்றும், அல்லேலூயா வாழ்த்தொலி உரையின் இறுதியில் செபித்தார், திருத்தந்தை பிரான்சிஸ்.
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கோவிட்-19 விதிமுறைகளால், கடந்த மார்ச் மாதம் பாதியிலிருந்து, புதன் மறைக்கல்வியுரை மற்றும், ஞாயிறு நண்பகல் செப உரைகளை, வத்திக்கான் பாப்பிறை இல்லத்தின் நூலகத்திலிருந்து வழங்கி வந்தார் என்பதும், அவை நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டன என்பதும் குறிப்பிடத்தக்கன
Source: New feed